காணாமல் போன முகிலனை உடனே கண்டுபிடித்து இந்தியாவில் சுற்றுச்சூழல் உரிமை ஆர்வலர்கள் உள்ளிட்ட மனித உரிமை ஆர்வலர்கள் அமைதியான முறையில் பணியாற்றுவதை உறுதிப்படுத்த மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளை விளக்க வேண்டும் என்று ஐ.நா கேட்டுள்ளது.

ஈரோட்டைச் சேர்ந்த சுற்றுச்சூழல் மற்றும் மனிதஉரிமை ஆர்வலரான முகிலன், கடந்த பிப்ரவரி மாதம் மாயமானார். அவர் காணாமல் போய் 4 மாமாதங்களுக்கும் மேலாகியும் , அவர் எங்கிருக்கிறார் என்பது குறித்து இதுவரை கண்டறியப்படவில்லை. அவரது தேடுதலில் இரண்டாவது முறையாக ஈடுபட்ட போது முகிலனின் படங்களைப் பொது இடங்களில் ஒட்டித் தேட ஆரம்பித்திருக்கும் சென்னை கிரைம் பிராஞ்ச் போலீஸார் இம்முறை முகிலனை நேரடியாகக் கற்பழிப்புக் குற்றவாளியாக அறிவித்தே தேடிவருகிறோம் என்று அறிவித்தனர்.

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து விளக்கம் அளிக்குமாறு மத்திய அரசுக்கு ஸ்விட்சர்லாந்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஐ.நா மனிதஉரிமை கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.அதில், மனிதஉரிமை விதிமீறல்கள் நடைபெறாமல் பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை என்று மனிதஉரிமை கவுன்சிலின் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில், முகிலன் மாயமானது குறித்து நடத்தப்பட்ட விசாரணை குறித்த விவரங்களை அளிக்குமாறு மனிதஉரிமை கவுன்சில் கேட்டுக் கொண்டுள்ளது.

இடையில் முகிலன் சமாதியாகிவிட்டதாக சமூக வலைதளத்தில் ராஜபாளையம் காவல் நிலைய ஆய்வாளர் பதிவிட்டது குறித்து விசாரணை நடத்தப்பட்டதா என்றும், அவ்வாறு விசாரணை நடத்தப்பட்டிருந்தால், அதுகுறித்த விவரங்களை அளிக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.விசாரணை நடத்தப்படாமல் இருந்தால், அதற்கான காரணத்தை விளக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.இந்தியாவில் சுற்றுச்சூழல் உரிமை ஆர்வலர்கள் உள்ளிட்ட மனித உரிமை ஆர்வலர்கள் அமைதியான முறையில் பணியாற்றுவதை உறுதிப்படுத்த மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளை விளக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.