நாடாளுமன்றத் தேர்தல் முடிந்த பிறகு அன்புமணி ராமதாஸ் அமைதியாக இருக்கும் நிலையில் ராமதாஸ் ஆக்ரோஷம் காட்டி வருகிறார்.

நாடாளுமன்றத் தேர்தல் அமைதியாக நடந்து முடிந்துவிட்டது என்று கூறப்பட்டாலும் பொன்பரப்பி விவகாரம் தற்போதைக்கு முடியாது என்கிற சூழல்தான் நிலவுகிறது. பொன்பரப்பியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பாட்டாளி மக்கள் கட்சியினருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் நீறுபூத்த நெருப்பாக தற்போது வரை தகித்து வருகிறது. விடுதலைச் சிறுத்தைகளுக்கு ஆதரவாக சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் முத்தரசன் மற்றும் பேராயர் எஸ்ரா சற்குணம் பேசியது மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. 

முத்தரசன் மற்றும் சற்குணத்திற்கு பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் அளித்த காட்டமான பதில் தான் வட மாவட்டங்களில் தற்போது பதற்றத்தை அதிகரித்துள்ளது. மிகக்கடுமையான வார்த்தைகளுடன் ராமதாஸ் வெளியிட்டுள்ள அந்த அறிக்கை உண்மையில் பாமகவினரை கூட அதிர வைத்தது. காரணம் இது போன்ற அறிக்கைகள் இது போன்ற பேச்சுக்கள் எல்லாம் பாமக தொடங்கியபோது ராமதாஸ் வெளியிடப்பட்டவை. திடீரென ராமதாஸ் இந்தளவிற்கு ஆக்ரோஷமான அதற்கான காரணம் என்ன என்று பாமகவினரே அளித்து வருகின்றனர். 

வட மாவட்டங்களில் பாமகவினர் சோர்ந்து விடக்கூடாது என்பதற்காக ராமதாஸ் இதுபோன்ற அறிக்கைகளை வெளியிட்டு வருவதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். எதிர் வரும் உள்ளாட்சித் தேர்தல் அல்லது சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ள நேரிட்டால் அதற்கு தயாராக இருக்க வேண்டும் என்கின்ற நோக்கத்தில் தான் பதற்றத்தை பற்ற வைக்கும் வகையில் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார் என்று பேசிக்கொள்கிறார்கள்.

 

அதேசமயம் பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தேர்தலுக்குப் பிறகு என்ன ஆனார் என்றே தெரியவில்லை. தொடர்ந்து பல்வேறு பிரச்சனைகளை தமிழகம் சந்தித்து வரும் நிலையில் வழக்கமாக அறிக்கை வெளியிடும் அன்புமணி தற்போது எதைப்பற்றியும் கண்டுகொள்ளாமல் சென்னையில் உள்ள தனது வீட்டில் உள்ளதாகவும் அவ்வப்போது திண்டிவனம் சென்று வருவதாக கூறுகிறார்கள். மேலும் குடும்பத்துடன் நேரத்தை செலவிடும் அன்புமணி தேர்தல் முடிவுக்குப் பிறகு தீவிர அரசியல் களத்திற்கு வருவார் என்றும் கூறுகிறார்கள்.

ஓய்வு பெறும் வயதிலிருக்கும் ராமதாஸ் அரசியல் களத்தை சூடு ஏற்றி வரும் நிலையில் அன்புமணி அமைதி காப்பது பாமகவில் ஏதும் பிரச்சனையா என்று கேட்கத்தான் வைக்கிறது.