மகாராஷ்டிராவில் சிவசேனா  தலைமையில் கூட்டணி அரசு அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இன்று சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சியினர் சேர்ந்து ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோர உள்ளனர்.
மகாராஷ்டிராவில் பாஜக-சிவசேனா கூட்டணி முறிந்ததை அடுத்து சிவசேனா - தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைக்க முயற்சிகள் நடைபெற்றுவந்தன. ஆனால், தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு கால அவகாசம் முடிவடைவதற்கு முன்பே, மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பி, மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. இதை எதிர்த்து சிவசேனா உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ள நிலையில், ஆட்சி அமைப்பது தொடர்பாக சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் பேச்சுவார்த்தை நடத்திவந்தன.

 
இந்நிலையில் சிவசேனா தலைமையில் காங்கிரஸ் - தேசியவாத காங்., கட்சிகள் கூட்டணி சேர்ந்து, ஆட்சி அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆட்சி அமைக்க உரிமை கோரி சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் பிரதிநிதிகள் இன்று மஹாராஷ்டிரா ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரியை சந்திக்க முடிவு செய்துள்ளனர். இந்தச் சந்திப்பின் போது மூன்று கட்சிகளும் இணைந்து ஆட்சி அமைக்க ஆளுநரிடம் உரிமை கோர உள்ளன. மேலும் மெஜாரிட்டிக்கு தேவையான எம்.எல்.ஏ.,க்களின் ஆதரவு கடிதங்களையும் ஆளுநரிடம் கொடுக்க இக்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. 


குடியரசுத் தலைவர் ஆட்சி அமலான பிறகு கருத்து தெரிவித்த மத்திய அரசு, “ஆட்சி அமைக்க மெஜார்ட்டி உள்ள கட்சிகள் அணுகினால், குடியரசுத் தலைவர் ஆட்சி விலக்கிக்கொள்ளப்படும்” தெரிவித்திருந்தது. இதன் அடிப்படையில் இக்கட்சிகளின் கோரிக்கையை ஏற்று ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுப்பாரா அல்லது மஹாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சியே தொடருமா என்பது இன்று தெரியவரும். மகாராஷ்டிர சட்டப்பேரவையில் இந்த மூன்று கட்சிகளுக்கும் 154 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். ஆட்சி அமைக்க சபாநாயகரை தவிர்த்து 146 எம்.எல்.ஏ.க்களே போதுமானது.