மகாராஷ்டிராவில் முதல்வர் பதவிக்காக பாஜகவும், சிவசேனாவும் சண்டையிட்டதால் கூட்டணி உடைந்தது. எந்த கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாமல் குடியரசுத் தலைவர் ஆட்சி நடக்கிறது. 

பாஜகவை கழற்றிவிட்ட சிவசேனா, காங்கிரஸ், என்சிபி கட்சியுடன் சேர்ந்து ஆட்சி அமைக்க காய் நகர்த்தி வருகிறது. இந்த சூழில் கடந்த ஞாயிற்றுக்கிழமை என்டிஏ கூட்டத்துக்கு சிவசேனா வரவில்லை. இதனால், நாடாளுமனறத்தில் எதிர்க்கட்சி வரிசையில் சிவசேனா எம்.பி.க்களுக்கு இருக்கை ஒதுக்கப்பட்டது. 


இதுகுறித்து சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:சரத் பவார் குறித்தும் எங்கள் கூட்டணி குறித்தும் யாரும் கவலைப்பட வேண்டாம். டிசம்பர் முதல் வாரத்தில் சிவசேனா தலைமையில் மகாராஷ்டிராவில் அமையும் ஆட்சி நிலையானதாக இருக்கும். அதில் எந்த குழப்பமும் இல்லை. ஊடகத்தினர் தலையிட்டு குழப்பிட வேண்டாம். 


பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் சரத் பவாரைப் புகழ்ந்து பேசியதில் என்ன தவறு இருக்கிறது. இதற்கு முன் நடந்த கூட்டத்தில் சரத் பவார் எனது அரசியல் குரு. இதில் அரசியல் செய்யாதீர்கள். உண்மையைச் சொல்கிறேன் என்று பிரதமர் மோடி பேசி இருந்தார்.

சிவசேனாவுக்கும் பாஜகவுக்கும் இடையிலான உறவு முறிந்துவிட்டது. மிகப்பழமையான தோழமையை பாஜக இழந்துவிட்டது. மகாராஷ்டிராவில் பாஜகவை வளர்த்துவிட்டது  சிவசேனா கட்சிதான். 

அவர்களுக்குத் தேர்தலில் போட்டியிட இடம் கொடுத்து, அரவணைத்தோம். ஆனால், இன்று நாடாளுமன்றத்தில் சிவசேனாவின் இருக்கையை பாஜக மாற்றி அமைக்கிறது. நிச்சயம் பாஜக இதற்கான விலையைக் கொடுக்கும்.கடந்த காலத்தில் பாஜகவுடன் கூட்டணி அமைக்க சிவசேனா தயக்கம் காட்டியது. 

ஆனால் பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா, சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவை மாத்தோஸ்ரீ இல்லத்தில் சந்தித்த பின்புதான் கூட்டணிக்கு ஒப்புக்கொண்டோம். கூட்டணியில் உள்ள சிக்கல்கள் குறித்துப் பேசினோம்".இவ்வாறு சஞ்சய் ராவத் தெரிவித்தார்.