பட்டாசு ஆலைகளில் சமூக இடைவெளி சாத்தியம் இல்லை என்பதாலும் ,  பட்டாசு உற்பத்திக்கு மூலப்பொருட்கள் கிடைப்பதில் சிக்கல் உள்ளதாலும் ,  போதுமான ஆர்டர்கள் வந்தும் பல்வேறு கட்டுப்பாடுகளால் ஆலைகளை இயக்க முடியாத நிலைக்க தள்ளப்பட்டுள்ளதாக சிவகாசி பட்டாசு தொழிலாளர்களும் உற்பத்தியாளர்களும் வேதனை தெரிவித்துள்ளனர்.  50 சதவீத தொழிலாளர்களுடன் பட்டாசு ஆலைகளை இயக்கிட விருதுநகர் மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியது .  ஆனாலும் கடுமையான விதிமுறைகள் மற்றும் பேருந்துகள் இல்லாத காரணத்தினால் பட்டாசு ஆலைகள் திங்கட்கிழமையும் இயங்கவில்லை விருதுநகர் மாவட்டம்  சிவகாசி சாத்தூர் ,  வெம்பக்கோட்டை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன .  இப்பணியில் நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமார் 5 லட்சம் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர் .  இந்நிலையில் கொரோனா வைரசை தடுப்பதற்காக ,  144 தடை உத்தரவு மத்திய மாநில அரசுகளால் அறிவிக்கப்பட்டது

இதைத்தொடர்ந்து பட்டாசு ஆலைகள் அனைத்தும் மூடப்பட்டன ,  இதனால் அதில் பணிபுரிந்து வந்த 5 லட்சம் தொழிலாளர்கள் வேலையின்றி தவித்து வந்தனர் .  ஏப்ரல் 20ஆம் தேதி முதல் பட்டாசு ஆலைகள் அனைத்தும் 50% தொழிலாளர்களுடன் இயங்கலாம் என மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டது .  மேலும் ஆலைகள் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட வேண்டும் ,  ஆலைகளில்  6 அடி இடைவெளியில் தொழிலாளர்கள் வேலை செய்ய வேண்டும் .  தொழிலாளர்களை அழைத்து வரும் வாகனங்களிலும் சமூக இடைவெளி இருத்தல் வேண்டும் என கூறப்பட்டது .   இதை ஆய்வு செய்ய அதிகாரிகள் தலைமையில் குழு அமைக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது .  திங்கட் கிழமை பெரும்பாலான ஆலைகள்  திறக்கப்படும் தொழிலாளர்கள் அனைவரும் வேலைக்கு செல்வார்கள் என பலரும் எதிர்பார்த்தனர்.  ஆனால் அதற்கு மாறாக ஏராளமான ஆலைகள் இயங்கவில்லை .  மூலப்பொருட்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதே இதற்கு காரணம் என கூறப்படுகிறது . 

இந்நிலையில் இது குறித்து தெரிவித்த ஆலை நிர்வாகத்தினர் ,  பட்டாசு ஆலையில் 50 சதவீத தொழிலாளர்களை சீப்டு முறையில் வேலை செய்ய வைப்பது கடினம் மேலும் வாகனங்களில் சமூக இடைவெளி , அலைகளில் சமூக இடைவெளி என்பதை கடைபிடிக்கலாம் ஆனால் பட்டாசு தயாரிக்க தேவையான மூலப்பொருட்களை கிடைப்பதில் சிக்கல் உள்ளது ,  எனவே போதுமான ஆர்டர்கள் வந்தபோதிலும் மூலப்பொருட்கள் பற்றாக்குறையால் ஆலையை இயக்குவதில் சிக்கல் உள்ளது என தெரிவித்தனர் .  அதே நேரத்தில் பெரிய பட்டாசு ஆலை நிர்வாகம் தங்களது தொழிலாளர்களை வாகனங்களில் அழைத்துச் செல்வது வழக்கம் ,  ஆனால் சிறிய மற்றும் நடுத்தர மான பட்டாசு ஆலைகளுக்கு தொழிலாளர்கள் பெரும்பாலும் அரசு பேருந்துகளிலும் பேருந்து வசதியற்ற கிராமங்களிலுள்ள தொழிலாளிகள் தனியார் வாகனங்கள் மூலமே பட்டாசு ஆலை பணிக்கு சென்று வந்தனர். 

இந்நிலையில் தடை உத்தரவால் தனியார் வாகனங்கள் மற்றும் அரசு பேருந்துகள் இயங்காததால்  ஏராளமான பட்டாசு ஆலைகள் முறையாக இயக்கப்படவில்லை இதனால் அங்கு பணியாற்றும் தொழிலாளர்கள் வேலையின்றி தவிப்பது தொடர்கிறது .  இதனால் மாவட்ட நிர்வாகம் ஆலைகளை இயக்க அனுமதி வழங்கினாலும் வாகனங்கள் இயக்குவதற்கு உள்ள தடையை முழுமையாக நீக்கினால் மட்டுமே ஆலைகள் இயங்கி வாய்ப்புள்ளது என பட்டாசு தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.