மகாராஷ்டிராவில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக - சிவசேனா கூட்டணி அமைத்துப் போட்டியிட்டன. ஆனால், ஆட்சி அதிகாரத்தை சமபங்காகப் பிரிப்பதில் இரு கட்சிகளுக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டது. முதல்வர் பதவியை விட்டுக்கொடுக்க பாஜக முன்வராததால், பாஜக தலைமையில் ஆட்சி அமைக்க சிவசேனா ஆதரவு தரவில்லை.

இதையடுத்து, சிவசேனா கட்சி ஆட்சி அமைக்கும் எண்ணத்துடன் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் பேச்சு நடத்தி வருகிறது. இதற்காக மத்திய அமைச்சரவையில் இருந்து வெளியேறி பாஜகவின் உறவையும் முறித்துக் கொண்டது.

ஆட்சி அமைக்கும் எண்ணத்துடன் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய 3 கட்சிகளும் சேர்ந்து குறைந்தபட்ச செயல் திட்டம் வகுத்து வருகின்றன.  இந்த சூழலில் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் பங்கேற்க சரத் பவார் வருகை தந்தார்.

அப்போது அவரிடம் தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து சிவசேனா ஆட்சி அமைக்கப்போவதாகக் கூறி வருகிறது பற்றி நிருபர்கள்  கேட்டபோது அதற்கு சரத் பவார் " அப்படியா, ஆட்சி அமைக்கப் போகிறோமா, தேசியவாத காங்கிரஸ், காங்கிஸ், சிவசேனா இணைந்து ஆட்சி அமைத்தால் என்ன நடக்கும் என்பது தெரியுமா? சிவசேனா-பாஜக இணைந்து தேர்தலைச் சந்தித்தார்கள், என்சிபி-காங்கிரஸ் இணைந்து தேர்தலைச் சந்தித்தோம். அவர்கள் அவர்களின் வழியில் அரசியல் செய்யட்டும். நாங்கள் எங்கள் வழியில் அரசியல் செய்கிறோம்" என்று தெரிவித்து சென்றார்

சரத் பவாரின் இந்த பதிலை யாரும் எதிர்பார்க்கவி்லலை. சிவசேனா, என்சிபி, காங்கிரஸ் கூட்டணி அமைந்துவிடும் என்று எதிர்பார்த்தவர்களுக்கு அவரின் இந்த பதில் அதிர்ச்சியாக அமைந்தது. இதனால், மாநிலத்தில் 3 கட்சிகளின் ஆட்சி அமைவதற்கான சூழல் இல்லைஎன்பது தெரி்ந்தது.

மாலையில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சரத் பவார் சந்தித்துப் பேசினார். அப்போது அவருடன் என்சிபி தலைவர்கள் சிலரும், காங்கிரஸ் தலைவர்கள் சிலரும் இடன் இருந்தனர். இந்த சந்திப்பு முடிந்தபின் சரத் பவார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், “ நானும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் இரு கட்சிகளைப் பற்றியும் மகாரஷ்டிரா அரசியல் குறித்தும் பேசினோம். சிவசேனாவும் இணைந்து ஆட்சி அமைப்பது குறித்துப் பேசவில்லை. மகாராஷ்டிரா அரசியல் நிலவரம் குறித்து சோனியாவிடம் விளக்கமளித்தேன். அப்போது உடன் ஏ.கே.அந்தோனியும் இருந்தார்

170 எம்எல்ஏக்கள் ஆதரவு இருப்பதாக நாங்கள் ஒருபோதும் சொல்லவில்லை. அவ்வாறு கூறியது சிவசேனா கட்சிதான். அவர்களிடம் சென்று விளக்கம் கேளுங்கள். எனக்கு 170 எம்எல்ஏக்கள் குறித்து ஏதும் தெரியாது” எனத் தெரிவித்தார்

இதனால், சிவசேனாவைவிட்டு, காங்கிரஸ் கட்சியும், என்சிபி கட்சியும் விலகத் தொடங்கியுள்ளன எனத் தெரிகிறது. ஏனென்றால், சிவசேனா தீவிரமான இந்துத்துவாவை பின்பற்றி அரசியல் செய்யும் கட்சி அதன் கொள்கைகள், சித்தாந்தங்கள் வேறு. ஆனால், காங்கிரஸ், என்சிபி கட்சிகள் மதசார்பற்ற நிலையை எடுத்து அரசியல் செய்து வருகின்றன. மாநிலத்தில் இரு கட்சிகளும் சிவசேனாவுடன் சேர்ந்தால், இரு கட்சிகளாலும் அரசியல் செய்ய முடியாது. மக்களும் ஏற்க மாட்டார்கள். ஆதலால் சிவசேனாவை கைகழுவ சோனியாவும், சரத்பவாரும் முடிவு செய்துள்ளதுதெரியவருகிறது.

முதல்வர் பதவி ஆசையில் பாஜகவை பகைத்துக் கொண்ட சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, இப்போது 56 எம்எல்ஏக்களை வைத்து என்ன செய்வது எனத்தெரியாமல் கையை பிசைகிறாார்.