மகாராஷ்டிரா சட்டசபைக்கு அண்மையில்  தேர்தல் நடந்தது. இந்தத் தேர்தலில், மொத்தமுள்ள, 288 இடங்களில், பா.ஜ., 105, சிவசேனா, 56 இடங்களில் வென்றன. பெரும்பான்மைக்கு, 146 பேரின் ஆதரவு தேவை என்ற நிலையில், இந்தக் கூட்டணிக்கு, 161 இடங்கள் கிடைத்தன. 

அதனால், மீண்டும் பா.ஜ., சிவசேனா கூட்டணி அரசு அமையும் என, எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 'முதலமைச்சர்  பதவியை சுழற்சி முறையில் தர வேண்டும்; அமைச்சரவையை, 50 : 50 விகிதாச்சாரத்தில் பகிர்ந்து கொள்ள வேண்டும்' என, சிவசேனா முரண்டு பிடித்து வருகிறது. இதனால், தேர்தல் முடிவுகள் வெளியாகி, 10 நாட்களுக்கு மேலாகியும், புதிய அரசு அமைவதில் இழுபறி நிலவுகிறது.

இந்நிலையில், கடந்த தேர்தலில், 41 இடங்களில் வென்ற சரத் பவாரின் தேசியவாத காங்., தற்போது, 54 இடங்களில் வென்றுள்ளது. காங்கிரஸ்., 44 இடங்களில் வென்றுள்ளது. அதனால், சிவசேனா தலைமையில், காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ்., கூட்டணி அரசு அமைக்கும் என, பேசப்பட்டது. ஆனால், இதை அந்தக் கட்சிகள் மறுத்தன. அரசு அமைப்பதில் இழுபறி தொடர்ந்து வரும் நிலையில், காங்., தலைவர் சோனியாவை, சரத் பவார் டெல்லியில் சந்தித்தார்.

இந்நிலையில் புதிய அரசு அமைப்பது தொடர்பாக, சரத் பவார் புதிய திட்டத்தை கூறியுள்ளார். அதன்படி, சிவசேனாவுக்கு முதலமைச்சர்  பதவியை தரத் தயாராக உள்ளோம். சிவசேனா, தேசியவாத காங்கிரஸ்  கூட்டணி அரசு அமைய வேண்டும். அதற்கு, காங்கிரஸ் வெளியில் இருந்து ஆதரவு தரத் தயாராக உள்ளது.

சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவின் மகன், ஆதித்ய தாக்கரேவை முதலமைச்சராக  ஏற்கத் தயாராக உள்ளோம். வேண்டுமானால், சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளைச் சேர்ந்த, தலா ஒருவர் துணை முதல்வர்களாக இருக்கலாம். 

எங்களுக்கு முதலமைச்சர் பதவி தேவையில்லை; முக்கிய அமைச்சரவையை கொடுத்தால் போதும். அதற்கு முன், பாஜக, உடனான கூட்டணியை சிவசேனா முறித்துக் கொள்ள வேண்டும்; பிரதமர் மோடி தலைமையிலான அரசில் இருந்து வெளியேற வேண்டும். என்று கூறியுள்ளார்.