அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் சூடுபிடித்துள்ள நிலையில். ஓபிஎஸ் - இபிஎஸ் இடையே சமாதானம் செய்யும் படலத்தை அதிமுக மூத்த தலைவர் தம்பிதுரை ஈடுபட்டுள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பொதுக்குழு கூடுவதற்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் ஒற்றைத் தலைமை பிரச்சனை எழுந்ததால் ஓபிஎஸ் தரப்பு அதிர்ச்சியில் உள்ளது. கட்சிக்கு ஒற்றைத்தலைமை தேவையில்லை என்றும் இரட்டைத் தலைமை நன்றாகப் போய்கொண்டிருக்கிறது என்று ஏற்கனவே ஓபிஸ் பேட்டி அளித்திருந்தார். மேலும் பொதுச்செயலாளர் பதவிக்கு ஒருவரை கொண்டு வருவது ஜெயலலிதாவுக்கு செய்யும் துரோகம் என்றும் ஓபிஎஸ் தெரிவித்திருந்தார். இதன்மூலம் இபிஎஸ் ஒற்றைத் தலைமையாக ஆவதற்கு ஓபிஎஸ் எதிர்ப்பு தெரிவித்திருப்பது உறுதியாகிவிட்டது. அதே வேளையில் ஓபிஎஸ்ஸுக்குப் பதில் அளித்து எடப்பாடி பழனிச்சாமி எதுவும் பேசாமல் அமைதியாக இருக்கிறார்.

இதற்கிடையே ஓபிஎஸ் இன்று தன்னுடைய ஆதரவு மாவட்டச் செயலாளர்கள் மற்றும் ஆதரவு நிர்வாகிகளுடன் சென்னையில் ஆலோசனை நடத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதேபோல சேலத்தில் தன்னுடைய ஆதரவு மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனை நடத்த எடப்பாடி பழனிச்சாமியும் முடிவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது. இதன்மூலம் ஓபிஎஸ் - இபிஎஸ் இடையே மோதல் முற்றியுள்ளதாகப் பார்க்கப்படுகிறது. இதை உணர்ந்துள்ள கட்சியின் மூத்த நிர்வாகிகள், இருவருக்கும் இடையே சமாதானம் செய்து வைக்கும் முயற்சிகளைத் தொடங்கியுள்ளனர். இதில் அக்கட்சியின் மூத்த தலைவர் தம்பித்துரை களமிறங்கியுள்ளார்.

இதையொட்டி தம்பித்துரை ஓ. பன்னீர்செல்வத்தை நேற்று முன்தினம் சென்னையில் சந்தித்து பேசினார். இதனையடுத்து சேலம் சென்ற தம்பித்துரை, அங்கு எடப்பாடி பழனிச்சாமியைச் சந்தித்து பேசினார். “தற்போது கட்சி இருக்கும் சூழலில் இரு தரப்பும் அமைதி காக்க வேண்டும். கட்சியைப் பலப்படுத்தும் பணிகளில் கவனம் செலுத்த வேண்டும். தங்களை எதிர்க்கட்சியாக பாஜக சித்திரிக்கும் வேளையில் கட்சியில் நடக்கும் இதுபோன்ற விஷயங்கள் அதிமுகவை பலவீனப்படுத்தும். இது கட்சிக்கு நல்லதல்ல” என்று இரு தரப்பிடமும் தம்பித்துரை எடுத்துரைத்ததாகக் கூறப்படுகிறது. ஒற்றைத் தலைமை விவகாரத்தை பொதுக்குழு கூடுவதற்கு முன்பாக முடித்து, இரு தரப்பையும் சமாதானப்படுத்தும் முயற்சியில் தம்பித்துரை தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகவும் அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் ஓபிஎஸ் - இபிஎஸ்ஸை மீண்டும் சந்தித்து பேச தம்பித்துரை முடிவெடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
