அதிமுக அதிகாரப்பூர்வ நாளேடான நமது அம்மா ‘வெடிக்கக் காத்திருக்கும் எரிமலை பூசல்களும்... அடக்கப்பார்க்கும் சர்வதிகார பூச்சாண்டியும்...’ என்கிற தலைப்பில் வெளியிட்டுள்ள கட்டுரையில், ‘’கருணாநிதியின் மறைவுக்கு பிறகு திமுக தலைவர் பதவியை தனதாக்கிக் கொண்ட ஸ்டாலின் இதுகாலம் வரை தான் வகித்து வந்த இளைஞரணி செயலாளர் பதவியை தன் மகன் உதயநிதிக்கு கொடுத்தார். இப்போது பேராசியர் அன்பழகனின்  பதவியையும் பறித்து தனக்குரியதாக்கிக் கொண்டு தாதாக்கள் கழுத்தில் அணிந்திருக்கும் எண்ணில்லா தங்கச் சங்கிலிகள் போல மொத்த அதிகாரத்தையும் தன்னோடு குவித்துக் குவித்துக் கொண்டு  தான் ஒரு சர்வதிகாயாக செயல்படப்போவதாக திமுக செயற்குழு, பொதுக்குழுவில் மிரட்டல் விடுத்திருக்கிறார்.  இந்த ஸ்டாலினின் அதிகார வெறிக்கு எதிராக திமுகவில் விரைவில் ஒரு பிரளயம் வெடிக்கப்போகுதாம். 

காஞ்சித் தலைவர் அண்ணாவும், அதன் பிறகு கருணாநிதியும் வகித்த திமுக தலைவர் பதவியை தனது கோமாளித் தனங்களாலும், உளறல்களாலும் கேலிப்பொருளாக்கி விட்டதாக புலம்புகிற திமுகவினர், திராவிட இயக்கத்திற்கே உரிய எழுத்து, பேச்சு போன்ற தனித்திறமைகள் இல்லாது போனாலும் எழுதி கொடுக்கிற துண்டுச்சீட்டை பார்த்துக்கூட பேசத் தெரியாத ஒருவர் திமுக தலைவர் இருக்கையில் அமர்ந்திருப்பது வேதனை அளிப்பதாக முணுமுணுக்கும் குரல்கள் அடிமட்டத் தொண்டர்கள் வரை எதிரொலிக்கத் தொடங்கி விட்டதாம்.  

ரேடாருக்கு ரோடார், அகழாய் என்பதற்கு அக வாழ்வு, நாட்டுப்பண் என்பதற்கு நாட்டுப்பாட்டு, குடியரசு தினத்தையும், சுதந்திர தினத்தையும் பொதுமேடையில் நின்று கொண்டு தவறுதலாக சொன்னதோடு, பின்னால் இருந்து எடுத்துச் சொன்னபோதும் கடைசிவரை அதனை தன்னால் சரியாக சொல்ல முடியாத இயலாமை, என தொண்டர்களை குண்டர்களாக்கும் வகையில் தவறான வழிகாட்டல், இப்படி பட்டியலிட முடியாத அளவுக்கு மீம்ஸ் கிரியேட்டர்களின் மையமாகிப்போன ஸ்டாலினை கொண்டு இனி ஒருபோதும் திமுகவை காப்பாற்ற முடியாது என்கிற கருத்து திமுகவில் மேலோங்கி வருகிறது. 

இதனால் கனிமொழியை தலைமையேற்க வைக்க வேண்டும் என ஒரு தரப்பும், ஏன் கருணாநிதி குடும்பத்தை விட்டால் திமுகவில் வேறு யாருக்கும் தகுதி இல்லையா என்கிற உரிமை குரலோடு மற்றொரு தரப்பும் ஸ்டாலினுக்கு, அழகிரி எவ்வளவோ பரவாயில்லை என இன்னொரு தரப்புமாக பிரச்னைகள் பலவகைகளில் அங்கே உருவாகி விட்டதாம். 

இதுபோதாதென்று திமுகவின் பொருளாளர் துரைமுருகனோ, ஸ்டாலின் உளறுவதை அருகில் நின்றுகொண்டே தன்னால் தடுக்க முடியவில்லையே என வருத்தம் கொள்வதாகவும், திருத்த முடியாத அளவுக்கு கூமுட்டை தனங்களின் கூடாரமாக இருக்கிறார். சாதுர்ய புத்திக்கு சரித்திர சான்றான கருணாநிதிக்கு இப்படியொரு தத்தி வாரிசாக வந்திருக்கிறார் என்றெல்லாம் வருத்தம் தோய்ந்த குரல்கள் அவரிடம் இருந்து வந்த வண்ணம் இருக்கிறதாம். 

அதேவேளையில் யாரையும் நம்பி பொதுச்செயலாளர் பதவியை கொடுக்கக்கூடாது என்கிற தீர்க்கமான முடிவை ஸ்டாலின் குடும்பம் எடுத்திருப்பதோடு அதனால் கட்சியில் பெருத்த அதிருப்தியும் அதிர்வலைகளும் உருவகி வருவதை உணர்ந்தே இருக்கிறார்களாம். எப்படியோ, மிக விரைவில் குமுறிக் கொண்டிருக்கும் எரிமலை பூசல்கள் அங்கே பீறிட்டு வெடித்து  கிளம்பலாம் என்பதை மோப்பம் பிடித்து விட்ட திமுக தலைமை அதிருப்தியாளர்களை இனம் கண்டு அவர்களை களையெடுத்து அப்புறப்படுத்தவே ஊராட்சி செயலாளர்கள் என்கிற பதவிகளை தவிர்த்துவிட்டு கிளைக்கழகங்களை உருவாக்கப்போவதாக அறிவிப்பு வெளியிட்டு இருப்பது அதன் பின்னணியில்தானாம். 

எப்படியோ காங்கிரஸ், கம்யூனிஸ்டு, பார்வர்டு பிளாக் உள்ளிட்ட கட்சிகளையெல்லாம் சில்லு சில்லாக தங்களது சுய நலத்துக்காக உடைத்த திமுக இன்று பிறருக்கு செய்த அவ்வகை கேடுகளாலே அழியும் நிலை உருவாகி வருகிறது என்றால் அது செய்த பாவத்திற்கான தகுந்த கூலி தான். இதனாலான அச்சத்தால்தான் திமுக என்னும் இரும்புக்கோட்டையில் இருந்து ஒரு செங்கலைக் கூட உருவமுடியாது என்று உதறல் எடுத்து ஊளையிட்டிருக்கிறார் ஸ்டாலின். அதுசரி இரும்புக்கோட்டையில் எப்படி செங்கலை உருவுறது. இதிலும் உளறலா? ஆக... ஆக..ஆகா’எனக் கிண்டலடித்துள்ளது நமது அம்மா நாளிதழ்.