திருப்போரூர் துப்பாக்கிச்சூடு வழக்கில் திமுக எம்எல்ஏ இதயவர்மனுக்கு ஒரு நாள் போலீஸ் காவல் வழங்கி செங்கல்பட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகே உள்ள இள்ளலூர் கிராமத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக  கடந்த 12ம் தேதி மேடவாக்கத்தில் தலைமறைவாக இருந்த  திமுக எம்.எல்.ஏ. இதயவர்மனை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். இது தொடர்பாக நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட எம்.எல்.ஏ. இதயவர்மனுக்கு 15 நாட்கள் நீதிமன்றக் காவல் வழங்கப்பட்ட நிலையில் அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இதனையடுத்து அவரது ஜாமீன் மனுக்களும் நேற்று தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்நிலையில், அவரை காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறையினர் மனு அளித்திருந்தனர். அதில், வீட்டில் ஏராளமான துப்பாக்கி, தோட்டா சிக்கியதால் இது தொடர்பாக எம்.எல்.ஏ.விடம் விசாரணை நடத்த வேண்டும். இதற்கு நீதிமன்றம் அனுமதிக்க வேண்டும் என்று செங்கல்பட்டு நீதிமன்றத்தில் போலீஸ் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது எம்.எல்.ஏ.வை செங்கல்பட்டு நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர். அப்போது,  திமுக எம்எல்ஏ இதயவர்மனை போலீசார் 3 நாள் காவல் கேட்ட நிலையில், ஒரு நாள் வழங்கி செங்கல்பட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இன்றிலிருந்து நாளை ஒரு மணி வரை விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.