’விழுப்புரம் தொகுதியில் போட்டியிடும் வடிவேல் ராவணன் ஒரு  தமிழினத்துரோகி எப்படி தமிழர் உரிமைகளுக்காக பேச முடியும்? காட்டிக்கொடுத்து தமிழினத்துக்கு இரண்டகம் செய்த துரோக்கும்பலுக்கு விழுப்புரம் மக்கள் பாடம் புகட்ட வேண்டும்’ என்று தனது முகநூல் பக்கத்தில் அதிர்ச்சிகரமான ஃப்ளாஷ்பேக் ஒன்றைப் பகிர்ந்துள்ளார் வி.சி.க.வின் துணைப் பொதுச்செயலாளர் வன்னி அரசு.

அந்தப் பதிவு இதுதான்...விழுப்புரம் தொகுதியில் பாமகவின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருப்பவர் வடிவேல் ராவணன் . பட்டியல் இனத்திலிருந்து வெளியற வேண்டும் என்ற கொள்கை உடையவர். ஆனாலும், தனித்தொகுதியில்  போட்டியிடுகிறார். திருச்சி வானொலி நிலையத்தில் செய்திவாசிப்பாளராக பணியாற்றியவர்.

சரி அதுக்கு என்ன என்று கேட்கிறீர்களா?

இந்தியாவின் அமைதிப்படை 1987 ஆம் ஆண்டு தமிழீழத்துக்கு சென்று தமிழர்களை அழிக்கின்ற பணியில் ஈடுபட்டது.
அப்போது தமிழ்நாடே கடுமையாக எதிர்த்தது. இந்திய அமைதிப்படையின் கொடுமைகளை, இந்திய வானொலிகளும் தொலைக்காட்சிகளும் மறைத்து விடுதலைப்புலிகளுக்கு எதிராக நஞ்சை கக்கின. இதை கண்டித்து திமுக தலைவர் கலைஞர் தொலைக்காட்சி பெட்டிகளை தெருவில் போட்டு உடைத்து போராட்டத்தை துவக்கி வைத்தார். இளைஞர்கள் தெருக்களில் களமிறங்கி போராடினர்.

இத்தகைய சூழலில் 11.4.1988ஆம் ஆண்டு கொடைக்கானல் தொலைக்காட்சி டவருக்கு கீழே சில இளைஞர்கள் வெடிகுண்டுகளை வீசினர்.தமிழ்நாடு விடுதலை படையின் முக்கிய போராளியான கடலூர் மாறன் சம்பவ இடத்திலேயே வீரச் சாவடைந்தார். இந்த வழக்கில் அய்யா பெருஞ்சித்திரனார் அவர்களின் மகன் தோழர் பொழிலன், தமிழ் முகிலன், இளங்கோ, அறிவழகன் உள்ளிட்ட 16 பேர் கைது செய்யப்பட்டு சிறைப்படுத்தப்பட்டனர்.

திண்டுக்கல் நீதி மன்றத்தில் விசாரணை துவங்கியது. வெடிகுண்டு வைத்தது யார் என்பதை நிரூபிக்க அரசு தரப்பு திணறியது.
சாட்சி சொல்ல ஆட்களை தேடியது போலீசு. அப்போது சிக்கியவர் தான் இந்த வடிவேல் ராவணன். அரசு தரப்பு இவரை அணுகியது.“வீடு தருகிறோம். தொலைக்காட்சியில் நல்ல வேலை போட்டுத்தருகிறோம்”என்று வடிவேலிடம் ஆசை வார்த்தை காட்டியது.

தோழர் பொழிலன் வெடிகுண்டு வீசியதை தான் பார்த்ததாக அரசு தரப்பு அப்ரூவராக மாறி  பொய் சாட்சி சொன்னார் வடிவேல்.
இதன் விளைவாக, 17.2.1997 ஆம் ஆண்டு 8 பேருக்கு தண்டனை வழங்கப்பட்டது.8 பேர் விடுதலை செய்யப்பட்டனர். தோழர் பொழிலனுக்கு ஆயுள் தண்டனை வழங்கியது நீதிமன்றம்.

பொய்சாட்சி சொல்லி அரசு தரப்பு அப்ரூவராக மாறிய வடிவேல் ராவணன், அன்றைக்கு பாட்டாளி மக்கள் கட்சியின் கொள்கை பரப்புச்செயலாளராக இருந்தார். தற்போது பாமகவின் பொதுச்செயலாளராக உள்ளார். சுயநலத்திற்கு கிடைத்த பதவி உயர்வு. சாட்சி சொல்லக்கூடாது என்று மருத்துவர் ராமதாசிடம் அன்றைக்கு தமிழ்த்தேசியவாதிகள் எடுத்துச்சொல்லியும் கேட்ட பாடில்லை. பாமகவின் நிலைப்பாடே அன்றைக்கும் அரசுக்கு ஆதரவாகவும் தமிழின விடுதலைக்கு எதிராகவே இருந்துள்ளதை பார்க்க முடிகிறது.

இப்படிப்பட்ட தமிழினத்துரோகி எப்படி தமிழர் உரிமைகளுக்காக பேச முடியும்? காட்டிக்கொடுத்து தமிழினத்துக்கு இரண்டகம் செய்த துரோக்கும்பலுக்கு விழுப்புரம் மக்கள் பாடம் புகட்ட வேண்டும்’ என்று எழுதியிருக்கிறார் வன்னி அரசு.