அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை கட்சியாக பதிவு செய்வதுடன் அக்கட்சியின் பொதுச்செயலாளராக தன்னைத்தானே தினகரன் அறிவித்துக் கொண்டதன் பின்னணி பகீர் உள்ளது.

நாடாளுமன்றத் தேர்தல் முடிந்த கையோடு திடீரென அனைத்து நிர்வாகிகளையும் சென்னைக்கு அழைத்து தினகரன் தன்னை கட்சியின் பொதுச் செயலாளராக தேர்வு செய்யும் படி அவர்களுக்கு தடாலடி உத்தரவு பிறப்பித்தார். அதுமட்டுமல்லாமல் இது நாள் வரை பொதுச் செயலாளராக இருந்து வந்த சசிகலாவிற்கு எந்த பொறுப்பு அளிக்காமல் அதிலிருந்து விடுவித்துள்ளார் தினகரன். இதுகுறித்து விசாரித்தபோது தினகரன் ஆதரவாளர்களும் மன்னார்குடி உறவுகளும் ஒன்றுக்கொன்று முரண்பட்ட தகவல்களை தெரிவிக்கின்றன.

அதாவது அதிமுகவிற்கும் உரிமை கோரியும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்கிற பெயரிலும் இரண்டு நிலைப்பாட்டில் தொடர்ந்து இருக்க முடியாது என்பதை உணர்ந்தே தினகரன் இப்படி ஒரு முடிவெடுத்துள்ளதாக அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகிறார்கள். அதாவது அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை கட்சியாக பதிவு செய்வதன் மூலம் இனி வரும் தேர்தல்களில் பொதுவான சின்னத்தை பெற முடியும் என்பது தினகரனின் நம்பிக்கையாக உள்ளது. புதிதாக ஒரு கட்சியைத் துவக்கினார் இன்னொரு கட்சியில் உறுப்பினராக இருக்க முடியாது என்பதால்தான் அதிமுகவிற்கு இனி உரிமை கோர மாட்டேன் என்று தினகரன் என்று தெரிவித்துள்ளார்.

அதேசமயம் அதிமுகவிற்கு உரிமை கோரி டெல்லி நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கை சசிகலா தொடர்ந்து நடத்துவார் என்கிறார்கள். அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சியாக மாறிய பிறகு அதன் பொதுச் செயலாளராக இருந்து கொண்டே சசிகலாவால் டெல்லியில் வழக்கை நடத்த முடியாது என்பதால்தான் தினகரன் பொதுச்செயலாளராக தேர்வாகியுள்ளதாக இதுகுறித்து சின்னம்மாவிடம் ஏற்கனவே தெரிவித்து விட்டதாகவும் தினகரன் தரப்பு தெரிவிக்கிறது.

ஆனால் இதனை திட்டவட்டமாக மறுக்கின்றனர் மன்னார்குடி உறவுகள். அதிலும் திவாகரனோ சசிகலாவை எப்படியாவது ஓரம் கட்டிவிட்டு கட்சியை கைப்பற்ற வேண்டும் என்கிறார் தினகரனின் எண்ணம் தற்போது ஈடேறி உள்ளதாக வெளிப்படையாகவே பேட்டி கொடுத்துள்ளார். தன்னை நம்பிய சசிகலாவுக்கு தினகரன் மிகப்பெரிய துரோகம் இழைத்து விட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதனிடையே சசிகலாவை இனியும் நம்பிக்கொண்டிருந்தால் வேலைக்கு ஆகாது என்கிற முடிவில் தான் தினகரனின் அரசியல் கட்சி பதிவு விவகாரத்தை அணுகவேண்டும் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள். ஒவ்வொன்றுக்கும் சசிகலாவிடம் அனுமதி பெற்றுக் கொண்டிருப்பதை தினகரன் விரும்பவில்லை என்பதால் தான் இப்படி ஒரு தடாலடி முடிவை அவர் எடுத்துள்ளதாகவும் சசிகலாவிற்கு கட்சியிலும் சரி தமிழகத்திலும் சரி பெரிய அளவில் செல்வாக்கு இல்லை என்பதே தினகரன் இந்த முடிவுக்கு காரணமாக அமைந்து விட்டது என்றும் கூறுகிறார்கள்.