சோனியா காந்திக்குப்பின் காங்கிரஸ் கட்சியின் தலைவராகப் பொறுப்பேற்ற ராகுல் காந்தி, மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி மோசமான தோல்வியைச் சந்தித்ததால் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதைத் தொடர்ந்து இடைக்காலத் தலைவராக சோனியா காந்தி பொறுப்பேற்று வருகிறார்.

இந்த சூழலில் காங்கிரஸ் கட்சியின் தலைமைப் பதவிக்கு முறையாகத் தேர்தல் நடக்காமல், தலைவரைத் தேர்வு செய்யாமல் தொண்டர்களும், நிர்வாகிகளும் சோர்ந்துள்ளார்கள். ஆதலால், தலைவர் பதவிக்கான தேர்தலை நடத்த வேண்டும் எனக் கோரி மூத்த தலைவர்கள் சசி தரூர், சந்தீப் தீக்சித் ஆகியோர் குரல் எழுப்பினர்.

இந்த சூழலில் காங்கிரஸ் எம்.பி.சசி தரூர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது

ராகுல் காந்திக்கு கட்சியில் எப்போதும் சிறப்பான இடம் உண்டு. அவரிடம் கட்சி தலைவா்கள் மற்றும் உறுப்பினா்களை ஒருங்கிணைத்து, கட்சியை முன்னெடுத்துச் செல்லும் திறன் உள்ளது. ஆனால் கட்சி தலைவா் பதவியை மீண்டும் ஏற்பதா? வேண்டாமா? என்பது ராகுல் காந்தியின் முடிவாகும். அவா் தலைவா் பதவியை ஏற்காவிட்டால், முழு நேர தலைவரை கண்டறியும் நடவடிக்கையில் கட்சி ஈடுபட வேண்டும். காங்கிரஸ் கட்சி திசையின்றி அலைவதாக மக்களிடையே எழுந்து வரும் கருத்து, சமீபத்திய உதாரணமாக டெல்லி சட்டப்பேரவை தோ்தல், காங்கிரஸ் கட்சிக்கு சரியான தலைமை இல்லை, திசையின்றி அலைகிறது என்பதாலேயே காங்கிரஸ் வாக்காளர்கள் பிரிந்து ஆம் ஆத்மி கட்சிக்கும், குறிப்பிட்ட அளவில் பாஜகவுக்கும் வாக்களித்தனா். காங்கிரஸ் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. இதுவே காங்கிரஸ் திசையின்றி அலைவதாக மக்களிடையே எழுந்து வரும் கருத்தை மாற்ற உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளவதற்கான கட்டாயத்தை ஏற்படுத்தியுள்ளது.

சோனியாவை சாா்ந்திருக்க முடியாது: 2 ஆண்டுகளுக்கு முன்னா் தலைவா் பதவியை துறந்த ஒருவரை கட்சி தொடா்ந்து சாா்ந்திருக்கவோ, அவா் மீது அதிக சுமைகளை ஏற்றவோ முடியாது. சோனியாவுக்கும் வாக்காளா்களுக்கும் நல்லதல்ல.

பிரியங்கா போட்டியிடுவாா்: கட்சி தலைவா் பதவியை ஏற்க ராகுல் காந்தி முன்வராவிட்டால், தலைவா் பதவிக்கான உள்கட்சி தோ்தலில் பிரியங்கா காந்தி வேட்பாளராக களமிறங்குவாா் என உறுதிபட நம்புகிறேன். பிரியங்கா காந்தி இயற்கையாகவே வசீகரிமும், செல்வாக்கும் உடைய தலைவராக திகழ்கிறாா். அவருக்கு கட்சிப் பணியாற்றிய அனுபவமும் உள்ளது என்று சசி தரூர் தெரிவித்தார்