பெண்கள், சிறுமிகள் மற்றும் தலித் பெண்களுக்கு எதிரான பாலியில் வன்கொடுமைகளை கட்டுப்படுத்த வேண்டும் எனில் பாலியல் குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். சென்னை அயனாவரத்தில் 17 பேர் கொண்ட கும்பலால் சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம், தற்போது நாமக்கல் அருகே இரு சிறுமிகளை மிரட்டி 75 வயது முதியவர் உட்பட 15 பேர் கூட்டுப் பாலியல் பலாத்காரம் என்ற செய்தி மக்களிடத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆணாதிக்க சமூகத்தில் பேதமின்றி பெண்களுக்கு எதிராக வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டு வரும் சூழ்நிலையில், தலித் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை அடக்க வேண்டும் என்றால், பாலியல் வன்கொடுமையில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும். அவ்வாறு மரண தண்டனை வழங்கும் பட்சத்தில் வரும் காலங்களில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க முடியும். இந்த வகை குற்றங்களை தடுக்க மரண தண்டனை ஒன்றே தீர்வு,  அதை உடனடியாக நீதியரசர்கள் நிறைவேற்ற வேண்டும் என விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். 

நாமக்கல் அருகே 2 சிறுமிகள் ஆறு மாதங்களாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ள சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதில் தொடர்புடைய ஆறு பேர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். ராசிபுரத்தில் வசித்து வரும் 12 மற்றும் 13 வயதான இரண்டு சிறுமிகளை கடந்த 6 மாதமாக அப்பகுதியில் உள்ள ஆறு பேர் பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளனர். இந்த சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சம்பவத்தில்  ஈடுபட்டுள்ள தமிழ்ச்செல்வம் (31) மணிகண்டன் (30) முத்துசாமி (25) சிவா(26) சூர்யா(23) சண்முகம் (45) ஆகிய 6 பேரை போக்சோ வழக்கில் போலீசார் கைது செய்துள்ளனர். தமிழகத்தில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான நடக்கும் வன்கொடுமை சம்பவங்களுக்கு கடுமையான தண்டனையை வழங்கப்படவேண்டுமென தொடர் குரல் எழும் நிலையில், தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் இதுபோன்ற குற்ற சம்பவங்களில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

ஏற்கனவே திண்டுக்கல்லில் 12 வயதான சிறுமி வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கில் கைதானவர்கள் போதிய  சாட்சிகள் மற்றும் ஆதாரங்கள் இல்லாததால் நிரபராதிகள் என விடுவிக்கப்பட்டுள்ளனர். இதற்கு காவல்துறை மீதும், அரசு மீதும் கடுமையான விமர்சனங்கள் எழும் நிலையில், கடந்த ஆறு மாதங்களாக இரண்டு சிறுமிகள் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டிருப்பது தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.