ஊரக உள்ளாட்சித் தேர்தலில் கரூர் மாவட்டத்தில் உள்ள 12 மாவட்ட கவுன்சிலர்களில் ஒன்பது இடங்களில் அதிமுக வென்றது. எஞ்சிய மூன்றை மட்டும் தான்  திமுகவால் வெல்ல முடிந்தது. இதே போல் மொத்தம் உள்ள 115 ஒன்றிய கவுன்சிலர் பதவி இடங்களில் 70க்கும் மேற்பட்ட இடங்களை அதிமுக கூட்டணி வென்றது. திமுகவிற்கு வெறும் 33 கவுன்சிலர்கள் மட்டுமே கிடைத்தனர். அதோடு மட்டும் அல்லாமல் கரூர் மாவட்டத்தில் உள்ள எட்டு ஒன்றியங்களையும் அதிமுக அருதிப் பெரும்பான்மையுடன் வென்றது. இதனால் கரூர் மாவட்ட கவுன்சிலை மட்டும் அல்லாமல் அனைத்து ஒன்றியங்களையும் திமுக இழந்தது. அதிமுகவில் இருந்து பிரிந்து தினகரன் ஆதரவாளராக செயல்பட்டு வந்த செந்தில் பாலாஜி கடந்த ஆண்டு துவக்கத்தில் திமுகவில் இணைந்தார். உடனடியாக அவருக்கு கரூர் மாவட்ட திமுக பொறுப்பாளர் பதவி வழங்கப்பட்டது. திமுகவின் சீனியரான கே.சி.பழனிச்சாமி செந்தில் பாலாஜி வருகைக்கு பிறகு ஒதுங்கினார்.

நாடாளுமன்ற தேர்தலில் கரூர் தொகுதி காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டது. அதில் ஜோதிமணி போட்டியிட்டு மகத்தான வெற்றி பெற்றார். அரவக்குறிச்சி தொகுதியில் எம்எல்ஏ பதவியை பறிகொடுத்த செந்தில் பாலாஜிக்கு மீண்டும் வாய்ப்பு கொடுக்கப்பட்ட நிலையில் அங்கு அவர் வெற்றிக் கொடிநாட்டினார். இதனால் கரூர் திமுகவில் செந்தில் பாலாஜியின் கிராப் கிடுகிடுவென உயர்ந்தது. ஸ்டாலின் ஓகே சொன்னால் பத்து அதிமுக எம்எல்ஏக்களை திமுகவிற்கு கொண்டு வருவேன் என்றெல்லாம் பில்டப் கொடுத்தார்.

இந்த நிலையில் தான் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. இதில் செந்தில் பாலாஜி பெரும்பாலான இடங்களை தனது ஆதரவாளர்களுக்கே ஒதுக்கியதாக சொல்லப்படுகிறது. அவர்கள் பெரும்பாலும் அதிமுகவில் இருந்து திமுகவிற்கு வந்தவர்கள். இதனால் ஏற்பட்ட அதிருப்தியால் திமுகவினர் காலை வார, கரூரில் திமுக படுதோல்வியை சந்தித்துள்ளது. இதனை தொடர்ந்து செந்தில் பாலாஜிக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் ஒரு லாபி, கரூர் மாவட்டத்தில் உருவாகியுள்ளதாக கூறுகிறார்கள்.