நீட் தேர்வுக்கு எதிராக அடுத்த கட்டமாக மாவட்ட தலைநகரங்களில் எதிர்கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

நீட் தேர்வுக்கு கண்டனம் தெரிவித்து திருச்சியில் தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. நீட் தேர்வுக்கு எதிரான போராட்டங்களை அனுமதிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் தடைவிதித்திருந்த  நிலையில், பொதுக்கூட்டத்திற்கான அனுமதியை கடைசி நேரத்தில் திரும்ப பெறுவதாக காவல்துறை கூறியது. ஆனாலும், திட்டமிட்டபடி பொதுக்கூட்டம்  நடைபெற்றது.

இந்த பொதுக்கூட்டத்தை பொறுத்தவரை உச்ச நீதிமன்றம் தடை போடவில்லை என்றும் காவல்துறையும், பாஜகவும்தான் அதற்கு காரணம் என்று கூறிய ஸ்டாலின் இந்த சதி வலைகளை சுக்கு நூறாக்கிவிட்டு இந்த கண்டனப் பொதுக்கூட்டத்தை மாபெரும் பொதுக்கூட்டமாக நடத்திக் கொண்டிருப்பதாக தெரிவித்தார்.

அனிதாவின் மரணத்திற்கு மத்திய, மாநில அரசுகள்தான் காரணம். அவருக்கு உரிய கல்வியை இந்த அரசு மறுத்ததன் காரணமாக அவரது உயிர் பறிக்கப்பட்டுள்ளது என்றும் ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.

இந்தியாவின் மருத்துவ தலைநகரமாக சென்னை விளங்குகிறது. ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி, மெட்ராஸ் மெடிக்கல் கல்லூரியை மிஞ்சக்கூடிய அளவுக்கு இந்தியாவின் எந்த மாநிலத்திலும் கல்வி நிலையங்கள் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த பொதுக்கூட்டத்தைத் தொடர்ந்து, 2-வது கட்ட போராட்டமாக வருகிற 13-ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் அனைத்து எதிர்க்கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என ஸ்டாலின் தெரிவித்தார்.

முன்னதாக மேடையில் வைக்கப்பட்டிருந்த மாணவி அனிதாவின் படத்திற்கு ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.