தான் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரின் 2 அணிகளையும் சார்ந்தவன் இல்லை என்று நடிகர் செந்தில் தெரிவித்துள்ளார்.

இன்று அதிமுக தலைமையகத்தில் அதிமுக எம்.எல்.ஏக்கள் மற்றும் நிர்வாகிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஆலோசணை நடத்தப்பட்டது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மூத்த அமைச்சர்கள் சிவி சண்முகம், தங்கமணி, ஜெயக்குமார், வேலுமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கூட்ட முடிவில், ஓ.பன்னீர்செல்வம் அணியுடன் பேச்சுவார்த்தை நடத்த வைத்திலிங்கம் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் செங்கோட்டையன், சிவி சண்முகம், திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, ஜெயக்குமார் இடம் பெற்றுள்ளனர்.

இந்நிலையில், வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் செந்தில், “நான் பன்னீர் செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரின் 2 அணிகளையோ சார்ந்தவன் இல்லை. மறைந்த புரட்சித்தலைவி அம்மா அவர்களின் உண்மை விசுவாசி நான்.

இரட்டை இலை சின்னம் யாருக்கு கிடைக்கிறதோ, அங்கு நான் இருப்பேன். அவர்களுக்கு என்னுடைய ஆதரவு இருக்கும். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் கூட எந்த அணிக்கும் நான் ஆதரவாக பிரசாரம் மேற்கொள்ளவில்லை.

பன்னீர்செல்வம் - எடப்பாடி பழனிச்சாமி ஆகிய இரு அணிகளும் இணைந்து செயல்பட்டால் மகிழ்ச்சி” என்று கூறியுள்ளார்.