புழல் சிறையில் இருந்து வெளியே வரும் செந்தில் பாலாஜி..! நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்- காவல் நீட்டிக்கப்படுமா.?
சட்ட விரோத பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியை நேரில் ஆஜர்படுத்த நீதிபதி உத்தரவிட்டதையடுத்து இன்று சிறப்பு நீதிமன்றத்தில் போலீஸ் பாதுகாப்போடு அழைத்துவரப்படவுள்ளார்.
அமலாக்கத்துறையால் செந்தில் பாலாஜி கைது
அதிமுக ஆட்சி காலத்தில் அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக பணம் பெற்று மோசடி செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடர்பான விசாரணை பலகட்டங்களுக்கு பிறகு இரண்டு மாதங்களில் வழக்கை விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து சட்டவிராத பண பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீடுகளில் கடந்த ஜூன் மாதம் சோதனை நடத்தி அவரை கைது செய்தது. அப்போது அவருக்கு திடீரென ஏற்பட்ட நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
நேரில் ஆஜர்படுத்த உத்தரவு
அங்கு அவருக்கு இருதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட நிலையில் சில நாட்களில் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து கடந்த மாதம் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த கால கட்டத்தில் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை ஐந்து நாட்கள் கஸ்டடியில் எடுத்து விசாரித்தது. மேலும் செந்தில் பாலாஜி மீதான வழக்கை விசாரித்து வரும் எழும்பூர் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இருந்து எம்பி, எம் எல் ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. கடந்த 25 ஆம் தேதி காணொலி காட்சி மூலம் செந்தில் பாலாஜி ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது வருகிற 28 ஆம்தேதி வரை காவலை நீட்டித்த நீதிபதி, நீதிமன்றத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜியை நேரில் ஆஜர்படுத்தவும் உத்தரவிட்டார்.
இன்று செந்தில் பாலாஜி நேரில் ஆஜர்
இதன் காரணமாக புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜி, சுமார் ஒரு மாதங்களுக்கு பிறகு போலீஸ் வாகனம் மூலம் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தவுள்ளனர். அப்போது செந்தில் பாலாஜிக்கு மேலும் 14 நாட்கள் காவல் நீட்டிப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறு. நீதிமன்ற வளாகத்தில் செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள் அதிகளவு கூடுவார்கள் என எதிர்பார்ப்பதால் நீதிமன்றத்தில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்