செந்தில் பாலாஜியின் சகோதாரர் தனக்கும் இருதய பகுதியில் பிரச்சனை என 4 வார கால அவகாசம் கேட்கிறார்- அமலாக்கத்துறை
செந்தில் பாலாஜி கைது தொடர்பாக அவரது மனைவி மேகலா தொடர்ந்த ஆட்கொணர்வு வழக்கில் அனைத்து தரப்பு வாதங்கள் நிறைவடைந்ததை அடுத்து தீர்ப்பை இன்று மாலைக்குள் மூன்றாவது நீதிபதி கார்த்திகேயன் வழக்க இருப்பதாக கூறப்படுகிறது.
செந்தில் பாலாஜி கைது தொடர்பாக அவரது மனைவி மேகலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே இரண்டு நீதிபதிகள் இரு வேறு தீர்ப்பு வழங்கியதையடுத்து மூன்றாவது நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்று வந்தது. அப்போது காவலில் விசாரிக்க அனுமதி பெற்ற நிலையில், செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்காதது ஏன் எனக் நீதிபதிகள் கேள்வி எழுப்பியிருந்தனர். அதற்கு பதிலளித்த சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்ட செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து ஏதேனும் நிகழ்ந்தால் யார் பொறுப்பேற்க முடியும். அதனால் நிபந்தனைகளை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தை நாடியதாகவும், காவலில் எடுத்திருந்தால் முதல் 15 நாட்களை கருத்தில் கொள்ளக் கூடாது என கோர முடியாது என்றார்.
நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் காவலில் உள்ள செந்தில் பாலாஜி, சட்டவிரோத காவலில் இல்லை எனவும், ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்ததல்ல எனவும் குறிப்பிட்டார். இதனையடுத்து இந்த வழக்கு விசாரணை இன்றைய தினத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது. இதனையடுத்து இன்று காலை தனது வாதத்தை தொடங்கிய செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர் கபில் சிபல், செந்தில் பாலாஜி மருத்துவமனையில் இருப்பதால் விசாரணை நடத்த முடியவில்லை என்று அமலாக்கத்துறை கூறுவது தவறு என கூறினார். உயர் நீதிமன்றத்தை நாடி விளக்கம் பெற்று இருக்க வேண்டும். அவ்வாறு ஏன் அவர்கள் செய்யவில்லை என கேள்வி எழுப்பினார்.
இதனை தொடர்ந்து காவேரி மருத்துவமனை வெளியிட்ட செந்தில் பாலாஜியின் அனைத்து மருத்துவ அறிக்கைகளையும் அமலாக்கத்துறை தரப்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன் தாக்கல் செய்தார். முன்னதாக அமைச்சர் செந்தில் பாலாஜி சகோதரர் அசோக் குமார் அமலாக்கத்துறை முன்பு ஆஜராக சம்மன் அனுப்பியிருந்த நிலையில் தற்போது தனக்கும், இதயப் பிரச்னை இருப்பதால் நேரில் ஆஜராக 4 வாரங்கள் கால அவகாசம் கோருகிறார்; இது இவர்களுக்கு வாடிக்கையாகி விட்டது என அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் தெரிவித்தது.
இதனிடையே செந்தில்பாலாஜி வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை, மேகலா தரப்பு என அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவு பெற்றுள்ளதால் இன்று தீர்ப்பு வெளியாக வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தீர்ப்பை பொறுத்து செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் தொடர்பாக முடிவு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படியுங்கள்