ஜெயலலிதா இருந்தபோதே அவரது கண் முன்னரே, சசிகலாவின் பூரண ஆசீர்வாதத்தைப் பெற்று மிகப்பெரிய அதிகார மையமாக வளர்ந்தவர் செந்தில்பாலாஜி. அப்பேர்ப்பட்டவர் ஜெ., மறைவுக்குப் பின், அ.தி.மு.க.வில் வெகு சாதாரண மனிதர்களெல்லாம் பெரும் தோரணையில் சுற்றும்போது, இவர் மட்டும் தினகரனுக்குப் பின்னால் சர்வசாதாரணமாக வாழ்ந்து சந்தோஷப்பட்டுக் கொள்வாரா என்ன? 

இதோ ‘அண்ணன்! தலைவர்! ஆண் வடிவ சின்னம்மா’என்று தன் வாயால் போற்றிப் புகழ்ந்த தினகரனே திகிலில் தெறித்து, திக்குமுக்காடுமளவுக்கு ஒரு அரசியல் தாவலுக்கு ரெடியாகிவிட்டார் செந்தில்பாலாஜி. கடந்த நான்கைந்து நாட்களாக ‘கரூர் செந்தில்பாலாஜி தி.மு.க.வுக்கு தாவுகிறார்.’ எனும் சேதி கொடிகட்டி பறக்கிறது. இது பற்றி தொடர்ந்து கட்டுரை வெளியிட்டு வரும் ஏஸியாநெட் தமிழ் இணையதளம், ‘செந்திலே இப்படியொரு பரபரப்பை தூண்டி விட்டிருக்கிறாரா? தி.மு.க.வுக்கு தாவல் விமர்சனத்தை அவர் மறுக்கவில்லையே ஏன்?’ என்றெல்லாம் நெத்தியடியான கேள்வி மற்றும் விமர்சனத்துடன் இந்த விவகாரத்தில் ஒரு ஸ்டெப் முன்னே நின்று செய்தி வெளியிட்டுக் கொண்டுள்ளது. 

அந்த விதத்தில் இப்போது நமக்கு கிடைத்திருக்கும் தகவலும் ‘ஸ்பெஷல்’ ரகம்தான். அதாவது செந்தில்பாலாஜி தி.மு.க.வுக்கு தாவப்போவது உண்மையே! என்பதுதான் லேட்டஸ்ட் தகவல். தன் மிக நெருங்கிய அரசியல் நண்பர்களிடம் இதை கிட்டத்தட்ட உறுதிப்படுத்திவிட்டாராம் செந்தில். அவரை தி.மு.க.வினுள்  இழுக்கும் அஸென்மெண்டை கையிலெடுத்து செய்திருப்பவர் மாஜி அ.தி.மு.க. அமைச்சரும், தற்போது தி.மு.க.வில் கோலோச்சுபவருமான ஈரோடு முத்துசாமி. செந்தில் பாலாஜி தினகரன் மீது மன வருத்தத்தில் இருப்பதை அறிந்து கொண்டு, ஸ்டாலினிடம் இவர் தகவலை சொல்லிட, அவரும் ‘செந்திலை இங்கே இழுங்கள்.’ என்று சொல்லிவிட்டாராம். 

கரூரில் கடந்த சில வருடங்களாகவே தி.மு.க.வுக்கு பெரும் நெருக்கடியை தந்தவர் செ.பா. அப்பேர்ப்பட்டவரை ஸ்டாலின் வலிந்து இழுக்க காரணம்?...’கொங்கு மண்டலத்தில் தி.மு.க.வுக்கு திறமையான தலைவர்கள் இல்லை. செந்தில் பாலாஜி மீது வெறும் தண்ணீரில் வெண்ணெய் எடுக்கும் திறமைசாலிகள் வந்தால்தான் கட்சியை அங்கே காப்பாற்ற முடியும்.

எனவே செந்தில் இங்கே வந்தால் பெரிய மரியாதை மிக்க பதவியை தந்து ஏற்றுக் கொள்வோம், அரவக்குறிச்சி தொகுதியில் இடைத்தேர்தலில் நம் வேட்பாளராக்குவோம். 20 தொகுதி இடைத்தேர்தலின் மூலமோ அல்லது அதற்கு முன்பேயோ அ.தி.மு.க. ஆட்சி கவிழ்ந்து தி.மு.க. ஆட்சிக்கு வந்தால், செந்தில் பாலாஜியை நிச்சயம் மந்திரியாக்குவோம்.” என்று ஏகப்பட்ட ஆஃபர்களை அள்ளி வீசி இழுக்க சொல்லியிருக்கிறார் ஸ்டாலின் என்கிறார்கள்.