Asianet News TamilAsianet News Tamil

புடம் போட்ட தங்கம் போல் வாழ்ந்த பொதுவுடைமைப் போராளி தோழர் தா.பாண்டியன் மறைந்தாரே.. கலங்கும் மு.க.ஸ்டாலின்..!

பொதுவுடைமைப் போராளியும் - இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னணித் தலைவர்களில் ஒருவருமான தா.பாண்டியன் அவர்கள் மறைவெய்தினார் என்ற வேதனை மிகுந்த  பேரிடிச் செய்தி கேட்டு - பெருந்துயரத்திற்கு உள்ளானேன். அவரது மறைவிற்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

senior communist leader D.pandian passed away.. Stalin condolences
Author
Chennai, First Published Feb 26, 2021, 1:16 PM IST

தமிழகத்தின் மீதும் இந்தியாவின் பன்முகத்தன்மை மீதும் அசைக்கமுடியாத நம்பிக்கை கொண்டவர்  தா.பாண்டியன் மறைவு அதிர்ச்சியளிக்கிறது என மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். 

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி குறிப்பில்;- பொதுவுடைமைப் போராளியும் - இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னணித் தலைவர்களில் ஒருவருமான தா.பாண்டியன் அவர்கள் மறைவெய்தினார் என்ற வேதனை மிகுந்த  பேரிடிச் செய்தி கேட்டு - பெருந்துயரத்திற்கு உள்ளானேன். அவரது மறைவிற்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

senior communist leader D.pandian passed away.. Stalin condolences

மதுரையில் உள்ள வெள்ளை மலைப்பட்டி கிராமத்தில் பிறந்து - காரைக்குடி அழகப்பா கல்லூரியில் பட்டப் படிப்பை மேற்கொண்டு - சென்னை சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்றவர். கல்லூரி ஆசிரியராக, வழக்கறிஞராக, பத்திரிகையாளராக, எழுத்தாளராக, அரசியல் மற்றும் சமூகப் பணியில் முன்னணித் தலைவராக - நாடாளுமன்ற உறுப்பினராக - பன்முகத்தன்மை கொண்ட மிகச்சிறந்த பண்பாளர். அரசியல் நாகரிகத்தின் அரிச்சுவடியை இளைய தலைமுறைக்கு கற்றுக் கொடுக்கும் ஒரு ஆசிரியராகவே தனது வாழ்க்கையைப் பொது வாழ்விற்கு அர்ப்பணித்துக் கொண்டவர். அன்புடன் பழகுபவர். அழகுறப் பேசுபவர்.

senior communist leader D.pandian passed away.. Stalin condolences

பொதுவாழ்வின் நேர்மைக்கு இலக்கணமாகத் திகழும் பா.ஜீவானந்தம் அவர்கள் துவங்கிய தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் முதல் செயலாளரான இவர் - பொதுவுடைமை இயக்கத்தில் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டவர். அடக்கப்பட்ட - ஒடுக்கப்பட்ட - பிற்படுத்தப்பட்ட மக்களின் போர்க்குரலாக ஒலித்தவர். இந்திய ஜனநாயகத்தின் ஏற்றமிகு தீபங்களில் ஒன்றாக  ஒளிவீசியவர். நினைத்த கருத்தை எவ்வித தயக்கமும் இன்றி எத்தகைய தலைவர்களிடமும் எடுத்து வைக்கும் அற்புதமான ஆற்றல் படைத்த அவர் மேடைகளிலோ - விவாதங்களிலோ பேசத் துவங்கி விட்டால் கேட்டுக் கொண்டே இருக்கலாம். அந்த அளவிற்கு அறிவுபூர்வமாக - ஆக்கபூர்வமான கருத்துக்களை இலக்கிய நயத்துடன் மக்கள் மன்றத்தில் எடுத்து வைப்பதில் வல்லவர். 

senior communist leader D.pandian passed away.. Stalin condolences

நாடாளுமன்ற விவாதங்களில் பொருள் பொதிந்த வாதங்களை முன்வைத்து அகில இந்தியத் தலைவர்களிடமும் நன் மதிப்பைப் பெற்றவர். அரசியல் சாதுர்யமிக்கவர் - எப்படிப்பட்ட பிரச்சினைகளுக்கும் தீர்வு காணும் தெளிவும் தைரியமும் படைத்த அவர் - தொழிலாளர்களின்  தோழனாக - பொதுவுடைமைத் தொண்டர்களின் நண்பனாக - தமிழகத்தின் உறுதி மிக்க தலைவராகத் திகழ்ந்தவர். முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் தனிப்பட்ட பேரன்பைப் பெற்ற  தா.பாண்டியன் அவர்கள் என் மீதும் நீங்காப் பாசம் வைத்திருந்தவர். “பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினருக்கு இருக்கும் தடைகள்” உள்ளிட்ட பல்வேறு புத்தகங்களை எழுதியவர். 

senior communist leader D.pandian passed away.. Stalin condolences

சமீபத்தில் மதுரையில் நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டில் “தமிழ் மண்ணை நாங்கள் அடிமையாக விட மாட்டோம்” என்று சிம்மக் குரல் எழுப்பியதை நான் நேரில் கேட்டேன். அன்னைத் தமிழ் மீதும் - தமிழ் நாட்டின் மீதும் - இந்தியாவின் பன்முகத்தன்மை மீதும் அசைக்கமுடியாத நம்பிக்கை கொண்ட திரு. தா.பாண்டியன் அவர்கள் இப்போது நம்மிடம் இல்லை என்பதை என் நெஞ்சம் ஏற்க மறுக்கிறது. ஏழை - எளிய மக்கள் - விவசாயிகள் - பொதுவுடைமைத் தோழர்கள் - திராவிட முன்னேற்றக் கழகம் போன்று பொதுவுடைமைக் கொள்கையில் நம்பிக்கையுள்ள இயக்கங்களில் உள்ள அனைவருக்கும் அவரது மறைவு பேரிழப்பு. புடம் போட்ட தங்கம் போல் வாழ்ந்த பொதுவுடைமைப் போராளி இன்று நம்மை விட்டுப் பிரிந்து விட்டார். அய்யகோ! அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் - உறவினர்களுக்கும் - பொதுவுடைமை இயக்கத் தோழர்களுக்கும் எனது ஆழ்ந்த ஆறுதலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios