அதிமுகவில் இருக்கும் வரை அனைவரையும் அலங்கரிக்கும் முடியாக பார்ப்போம். அதிமுகவில் இருந்து விலகி சென்றால் வெறும் மசிராக தான் பார்ப்போம் என அமைச்சர் செல்லூர் ராஜு கூறியுள்ளார். 

மதுரையில் உள்ள பாஜக கட்சி அலுவலகத்தில், மக்களவை தேர்தல் கூட்டணி செயல்பாடு குறித்து தமிழக கூட்டுறவுதுறை அமைச்சர் செல்லூர் ராஜூ, சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா, ஆகியோர் பாஜக நிர்வாகிகளோடு ஆலோசனை நடத்தினர். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த செல்லூர் ராஜு பிரதமர் மோடி இந்தியாவின் பாதுகாவலர். அவர் இந்தியாவின் சூப்பர் ஸ்டார்போல விளங்குவதாக கூறினார். 

திமகவில் இணைந்த ராஜகண்ணப்பன் அதிமுகவை கடுமையாக விமர்சித்திருப்பது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர் அதிமுகவில் இருக்கும் வரை அனைவரையும் அலங்கரிக்கும் முடியாக பார்ப்போம். அதிமுகவில் இருந்து விலகி சென்றால் வெறும் மசிராக தான் பார்ப்போம் என்றார். மதுரையில் மத்திய அரசால் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு இருக்கின்றன. எனவே நாங்கள் மதுரை தொகுதியில் வலுவாக இருக்கிறோம்.

 

ஜெயலலிதா இல்லாத சூழலில் தேர்தலில் களம் காண்கிறோம். எனவே, சம்மட்டி அடி கொடுக்கும் அளவுக்கு வெற்றி இருக்க வேண்டும். மதுரை வேட்பாளர் ராஜ் சத்தியனுக்கு திறமை உள்ளது கண்டிப்பாக வெற்றிபெருவார். கூட்டணி இல்லாதபோதே அ.தி.மு.க மாபெரும் வெற்றி பெற்றது. தற்போது மெகா கூட்டணி அமைத்துள்ளோம் கண்டிபாக வெற்றி பெறுவோம் என்றார். 

கடந்த ஜனவரிக்கு முன்பு வரை தி.மு.க-தான் வெற்றிபெறும் என ஊடங்கள் சொல்லிவந்தன. தற்போது பொங்கலுக்கு 1000 ரூபாய் மக்களுக்கு வழங்கியதன் காரணமாக அ.தி.மு.க-தான் வெற்றிபெறும் என ஊடகங்கள் தெரிவித்து வருகின்றன. மேலும் கருணாநிதி வல்லவர், நல்லவரில்லை, ஆனால் ஸ்டாலின் வல்லவரும் அல்ல, நல்லவரும் அல்ல என்று அமைச்சர் செல்லூர் ராஜூ விமர்சனம் செய்துள்ளார்.