கடவுளை கண்டவனும் கிடையாது. அதிமுகவை வென்றவனும் கிடையாது. மிட்டாய் கொடுத்து குழந்தையை கடத்துவது போல திமுக மக்களை ஏமாற்றி ஆட்சியை பிடித்துள்ளது.

இன்று தேர்தல் நடைபெற்றாலும்கூட அதிமுகதான் ஆட்சியை பிடிக்கும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்றது. மதுரையில் நடைபெற்ற போராட்டத்தில், முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பங்கேற்று பேசினார். அப்போது திமுக அரசை கடுமையாகத் தாக்கி பேசினார். “தமிழகத்தில் பல கட்சிகள் ஆர்ப்பாட்டங்களை தினந்தோறும் நடத்துகின்றன. ஆனால், சிந்தித்து மக்களுக்காக ஆர்ப்பாட்டம் நடத்துவது அதிமுகவும் அதிமுக தலைவர்களும்தான். அதிமுக அரசால் அறிவிக்கப்பட்ட திட்டங்களைத்தான் திமுக தற்போது செயல்படுத்தி வருகிறது. திமுக வெற்று விளம்பரத்தை செய்துக்கொண்டிக்கிறது. விளம்பரத்தை விட்டு விட்டு மக்களுக்கு உண்மையான விடியலை திமுக அரசு தர வேண்டும்.

இன்று தேர்தல் நடைபெற்றாலும்கூட அதிமுகதான் ஆட்சியை பிடிக்கும். கடவுளை கண்டவனும் கிடையாது. அதிமுகவை வென்றவனும் கிடையாது. மிட்டாய் கொடுத்து குழந்தையை கடத்துவது போல திமுக மக்களை ஏமாற்றி ஆட்சியை பிடித்துள்ளது. சட்டப்பேரவையில் எதிர்கட்சியினரை பேச திமுக அனுமதிப்பது இல்லை. சட்டப்பேரவையில் மக்களை பற்றியும் மக்கள் பிரச்சினையைத்தான் பேச போகிறோம். நாங்கள் என்ன சொந்த கதையையா பேச போகிறோம். திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து ஏதாவது ஒரு தொற்று நோய் வந்துகொண்டுதான் இருக்கிறது. நல்லவர்கள் ஆட்சிக்கு வந்தால் எந்தத் தொற்றும் வராது.

முதல்வர் ஸ்டாலினை முன்னிலைப்படுத்திதான் இங்கு ஆட்சி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. திமுக ஆட்சியில் ஒன்றுக்கொன்று முரணாகவே நடைபெறுகிறது. நிலுவையில் உள்ள எம்எல்ஏ நிதியை தமிழக அரசு விடுவிக்க வேண்டும். தமிழகத்தில் மாணவர்கள், காவல் துறைக்கே கூட பாதுகாப்பு இல்லை. திமுக ஆட்சிக்கு வந்தாலே கட்ட பஞ்சாயத்து, ரவுடியிசம் வந்து விடுகிறது” என்று செல்லூர் ராஜூ பேசினார்.