ஏழை, எளிய மக்களுக்கு வழங்குவதாக அறிவிக்கப்பட்டு இருந்த இரண்டாயிரம் ரூபாயை, அதிமுக அரசு நிச்சயம் வழங்கும் என அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.

இத்திட்டத்தை செயல்படுத்தவிடாமல் திமுகவினர் தடுத்து நிறுத்தியதாக கூறிய அவர், பணம் வழங்குவதில் தவறில்லை என்ற நீதிமன்ற உத்தரவை, முதலமைச்சரின் முன்னெடுப்பால் போராடி பெற்றதாகவும் தெரிவித்தார். தேர்தலையொட்டி நிறுத்தப்பட்டுள்ள இரண்டாயிரம் ரூபாய் வழங்கும் இத்திட்டமானது, தேர்தலுக்கு பிறகு தொடங்கும் எனவும் அவர் கூறினார்.

 

தமிழகத்தில் உள்ள ஏழை எளியவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி, வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு தலா இரண்டாயிரம் ரூபாய் வழங்கும் சிறப்பு நிதி, திட்டத்தை தமிழக அரசு கடந்த மார்ச் மாதம் அறிவித்தது. இந்த நிலையில், வறுமைக் கோட்டுக்கு கீழேயுள்ளவர்கள் குறித்து உரிய முறையில் சர்வே நடத்தாமல் 2000 ரூபாய் வழங்கும் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்துவதாகவும், சர்வே முடியும் வரை நிதி ஒதுக்க கூடாது என்றும், விழுப்புரத்தைச் சேர்ந்த கருணாநிதி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இதனால், 2000 ரூபாய் வழங்கும் திட்டம் மற்றும் பயனாளிகளை அடையாளம் காணும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.