அதிமுகவை நம்பி வந்தால் கரை சேர்ப்போம்.! நம்பாமல் இருந்தால் ஆற்றிலே விட்டு விடுவோம்- செல்லூர் ராஜூ
ரோம் நகரம் தீப்பற்றி எரியும்போது மன்னர் இசை வாசித்தது போல் தமிழகத்தில் மழை வெள்ளத்தில் மக்கள் தவிக்கும் போது மகன் நடித்த திரைப்படத்தை பார்த்தீர்களா என்று அமைச்சரிடம் விசாரிப்பது என்னங்க நியாயம் என செல்லூர் ராஜூ கேள்வி எழுப்பியுள்ளார்.
ஒற்றுமையாக உள்ளோம்
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் 6-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு மதுரை மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் வருகின்ற 5-ம் தேதி மாபெரும் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெற உள்ளது.அது குறித்த ஆலோசனைக் கூட்டம் மதுரை தெப்பக்குளம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கலந்து கொண்டு கட்சியினருக்கு ஆலோசனை வழங்கினார். அப்போது கூட்டத்தில் பேசிய அவர், அதிமுக முடங்கி போய்விட்டது என சொல்லுகிறார்கள், பார்ப்பவர்களின் கண்ணோட்டம் தான் அப்படி உள்ளதே தவிர நாங்கள் அனைவரும் ஒற்றுமையாக அண்ணன், தம்பியாக தான் உள்ளோம். அதிமுகவை நம்பி வந்தால் கரை சேர்ப்போம். நம்பாமல் இருந்தால் ஆற்றிலே விட்டு விடுவோம்.
திமுக அடிமையாக உள்ளது
அரசியலில் பதட்டமான சூழ்நிலை கிடையாது. அதிமுகவை நம்பியவர்கள் கெட்டுப் போனது கிடையாது. நம்பாமல் கெட்டு போனவர்கள் தான் அதிகம். தலைமை என்ன சொல்கிறதோ அதை கேட்டு தான் அதிமுக தொண்டன் இருப்பான். எம்ஜிஆர், ஜெயலலிதா காலம் தொட்டு தலைவர்களை நம்பி இந்த இயக்கம் கிடையாது. அதிமுகவை விட்டு பிரிந்து போனவர்கள் பற்றி எங்களுக்கு கவலை இல்லை. இரட்டை இலையும் அதிமுக கொடியும் எங்கு உள்ளதோ அங்கு தான் உண்மையான அதிமுக தொண்டன் இருப்பான் என தெரிவித்தார். திமுக அமைச்சர்களிடத்தில் ஒற்றுமை இல்லை. அதிமுகவை அடிமை எனக்கூறி அடிமைக்கு அடிமையாக திமுக இருந்து வருகிறது. நடிகை குஷ்புவுக்கு கோவில் கட்டி கும்பிட்ட தமிழ்நாட்டில் அவரை தாழ்ந்த பேசிய திமுக நிர்வாகியை கண்டிக்க திமுகவிற்கு வக்கு இருக்கிறதா? என கேள்வி எழுப்பினார்.
கருணாநிதியை வணங்குகிறோம்
மக்களைப்பற்றி நினைத்து தூக்கம் வரவில்லை என்றால் பரவாயில்லை, ஆனால் திமுக அமைச்சர்கள் என்ன பேசுவார்கள் என்று தூக்கம் இல்லாமல் தவிக்கிறார் முதலமைச்சர். மதுரை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ஊழல் நடைபெற்றுள்ளதாக கூறும் நிதியமைச்சர், அப்படி ஊழல் நடந்திருந்தால் 2 வருடத்தில் நிரூபித்து இருக்கலாமே? குடிக்க கஞ்சி இல்லாமல் மக்கள் இருக்கும் பொழுது 100 கோடியில் நூலகம், எழுதாத பேனாவிற்கு 80 கோடி பேனாவை கடலில் வைக்கிறார்கள். கட்சிக்கு அப்பாற்பட்டு முதல்வரான கருணாநிதியை வணங்குவோம், அதிமுக பத்தாண்டு ஆட்சி சரி இல்லை என கூறினார்கள், இந்த 2 ஆண்டில் திமுக ஆட்சியில் பாலரும் தேனாறும் ஓடுகிறதா.?
திரைப்படத்திற்கு முதல்வர் விமர்சனம்
பொது விழாக்களில் அமைச்சர்கள் பேசும் அவதூறு பேச்சுக்களை முதல்வர் ஸ்டாலின் கண்டிக்கவில்லை. அதிமுக ஆட்சியை பற்றி பேச முதல்வருக்கு தகுதி உள்ளதா?நிதி அமைச்சருக்கு வெட்கம் இல்லையா? அதிமுக கொண்டு வந்த திட்டங்களை குறைகூறிவிட்டு அதிமுக தொடங்கிய திட்டங்களை துவங்கி வைப்பதாகவும் தெரிவித்தார். ரோம் நகரம் தீப்பற்றி எரியும்போது மன்னர் இசை வாசித்தது போல் தமிழகத்தில் மழை வெள்ளத்தில் மக்கள் தவிக்கும் போது மகன் நடித்த திரைப்படத்தை பார்த்தீர்களா என்று அமைச்சரிடம் விசாரிப்பது என்னங்க நியாயம் இதற்காக தான் மக்கள் உங்களை முதல்வராக தேர்ந்தெடுத்தார்களா என பேசினார்.
இதையும் படியுங்கள்