தமிழகத்தில் அமைந்த கூட்டணியைப் போல இந்திய அளவில் அமையாமல் போனது பாஜக வெற்றிக்குக் காரணம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார்.
சென்னைக்கு வந்த சீதாராம் யெச்சூரி, செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது தமிழகத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணி வெற்றி பெற்றதற்கு அவருக்கு வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், “நடந்து முடிந்த தேர்தலில் பாஜக மட்டும் 27ஆயிரம் கோடி ரூபாயைச் செலவழித்துள்ளது. இந்த தொகை அவர்களுக்கு எப்படிக் கிடைத்தது? பெரிய நிறுவனங்களுக்கு பாஜக ஆட்சியில் கிடைத்த சலுகைகளுக்கு பிரதிபலனாக அந்நிறுவனங்கள் அளித்த பணம் தான் இது.


நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணி மகத்தான வெற்றி பெற்றது. இதற்கு காரணமான திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துகள். தமிழகத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி மு.க. ஸ்டாலின் உருவாக்கியதால்தான் இந்த வெற்றி கிடைத்தது. இதுபோன்ற ஒரு கூட்டணியை இந்தியா முழுவதும் அமைக்க முடியாமல் போய்விட்டது. அப்படி அமைக்காமல் போனதே பாஜ வெற்றிக்கு காரணம்.
இந்திய அளவில் ஒவ்வொரு கட்சியும் எத்தனை வாக்கு சதவீதங்களைப் பெற்றன என்பதை தேர்தல் ஆணையத்தால் இப்போது வரை வெளியிட முடியவில்லை. வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது” என்று சீதாராம் யெச்சூரி தெரிவித்தார்.