Asianet News TamilAsianet News Tamil

அனிதா நினைவு நாளில் சீமான் சூளுரை..!! அதிமுக, திமுக மீது பகீர் குற்றச்சாட்டு.

அந்த அண்ணா தொடங்கிய கட்சியான திமுகவும், அவரைப் பெயரிலே தாங்கிய கட்சியான அதிமுகவும் கல்வி பொதுப்பட்டியலுக்குக் கொண்டு செல்லப்பட்டு 40 ஆண்டுகளைக் கடந்தும் அதனை மீட்டெடுக்க எவ்வித ஆக்கப்பூர்வமான செயல்பாட்டையும் முன்வைக்காதது இரு கட்சிகளும் அண்ணாவுக்குப் செய்த பச்சைத்துரோகமாகும். 

Seemon resolution on Anita Memorial Day , shocking accuses AIADMK and DMK of treason.
Author
Chennai, First Published Sep 1, 2020, 3:50 PM IST

கல்வியுரிமைப் போராளி தங்கை அனிதாவின் நினைவு நாளில் கல்வியை மாநிலப்பட்டியலுக்குக் கொண்டுவர உறுதியேற்போம் என சீமான் சூளுரைத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் முழு விவரம்:-

நீட் எனும் கொடுங்கோன்மைத் தேர்வு முறைக்கு எதிர்ப்புத் தெரிவித்து உயிராயுதம் ஏந்தித் தன்னுயிரை ஈந்து எதிர்ப்புணர்வைப் பற்ற வைத்த கல்வியுரிமைப்போராளி தங்கை அனிதாவின் நினைவு நாள் இன்று. மூன்றாண்டுகளைக் கடந்தபோதிலும் தங்கையின் மரணம் ஏற்படுத்திய அதீதத்தாக்கமும், அளப்பெரும் ரணமும் நெஞ்சுக்குள் இன்னும் ஆழமாய்ப் பொதிந்து கிடக்கிறது. பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத்தேர்வில் மருத்துவப் படிப்பிற்குரிய மதிப்பெண்களைப் பெற்றபோதிலும் அவளை நிராகரித்து தங்கை அனிதாவின் மருத்துவக்கனவையும், அவளது உயிரையும் காவு வாங்கியது நீட் எனும் சமூக நீதிக்கு எதிரான தேர்வுமுறை. அனிதாவைத் தொடர்ந்து பல தங்கைகளும், தம்பிகளும் இன்றுவரை அதற்குப் பலியாகி, அம்மரணங்கள் நீண்டு தொடர்கதையாய் மாறிவருவது தாங்கொணாத் துயரத்தைத் தருகிறது. கல்விக்காகப் பிஞ்சுப்பிள்ளைகள் கருகிச்சாகையில் நெஞ்சம் விம்மித்துடிக்கிறது. 

Seemon resolution on Anita Memorial Day , shocking accuses AIADMK and DMK of treason.

 

அவர்களைப் பறிகொடுத்த பேரிழப்பு தரும் ஆற்றாமையும், எதுவும் செய்ய இயலாமைச்சூழலினால் வரும் குற்றவுணர்ச்சியும் நெஞ்சம் முழுக்க வன்மமாக உரமேறிக்கிடக்கிறது. நீட் தேர்வு முறையை அகற்றக்கோரி இன்னும் போராடிக்கொண்டிருக்கையிலே, புதிய கல்விக்கொள்கை எனும் பெயரில் மிகப்பெரும் மோசடிக் கல்விக்கொள்கையைக் கொண்டு வந்து பொதுப்பட்டியலில் உள்ள கல்வியை முற்று முழுதாக மத்தியப் பட்டியலுக்கு நகர்த்தும் வேலையைத் தொடங்கியிருக்கிறது மத்தியில் ஆளும் பாஜக அரசு. நவீன குலக்கல்வித் திட்டமான இப்புதிய கல்விக்கொள்கை செயற்படுத்தப்பட்டால் நாட்டின் எதிர்கால நம்பிக்கை நாற்றுகளான 20 கோடி மாணவர்களின் எதிர்காலத்தைப் பாழாக்கி, தங்கை அனிதாவைப் போன்று பல இளந்தளிர்களை அவர்களது கல்விக்கனவில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றி விடும் பேராபத்து உள்ளது. இச்சமூக அநீதி நிகழ்த்தப்பட்டால் இந்நாடு அறிவுலகில் பேரிழப்பைச் சந்தித்து நிற்கும் என்பது உறுதி. 

Seemon resolution on Anita Memorial Day , shocking accuses AIADMK and DMK of treason.

‘மாநிலத்தன்னாட்சி முழக்கம்’ என்பது அறிஞர் அண்ணாவின் உயில் என வர்ணிக்கப்பட்டது. அந்த அண்ணா தொடங்கிய கட்சியான திமுகவும், அவரைப் பெயரிலே தாங்கிய கட்சியான அதிமுகவும் கல்வி பொதுப்பட்டியலுக்குக் கொண்டு செல்லப்பட்டு 40 ஆண்டுகளைக் கடந்தும் அதனை மீட்டெடுக்க எவ்வித ஆக்கப்பூர்வமான செயல்பாட்டையும் முன்வைக்காதது இரு கட்சிகளும் அண்ணாவுக்குப் செய்த பச்சைத்துரோகமாகும். 

மாநிலத்தன்னுரிமையும், தன்னாட்சியும் மீட்கப்பட்டுக் காக்கப்பட்டால்தான் இந்திய ஒன்றியத்தில் சங்கமித்து வாழும் தேசிய இனங்கள் பாதுகாப்பாக வாழ வாய்ப்பேற்படும். இந்தியாவின் அடையாளமாகக் காட்டப்படும் பன்மைத்துவம் பாதுகாக்கப்படும். மாறாக, மாநிலங்களின் உரிமைகள் யாவற்றையும் ஒவ்வொன்றாய் பறித்து, ஒற்றைமயப்படுத்தி அதிகாரக்குவிப்பிலும், எதேச்சதிகாரப்போக்கிலும் மத்தியில் ஆளும் அரசுகள் ஈடுபடும்போது அது இந்தியாவின் இறையாண்மைக்கே உலைவைக்கும் பேராபத்தாய் முடியும். இந்திய ஒன்றியத்தின் ஒற்றுமைக்கும், தேசிய இனங்களின் நலவாழ்வுக்கும் மாநிலங்களின் தன்னுரிமை நிலைநாட்டப்படுவதே உகந்ததாக இருக்கும்; உறுதுணையாக இருக்கும் என்பது திண்ணம். 

Seemon resolution on Anita Memorial Day , shocking accuses AIADMK and DMK of treason.

அவசரநிலைப் பிரகடனம் செய்யப்பட்ட அம்மையார் இந்திரா காந்தியின் ஆட்சிக்காலத்தில் மாநிலப்பட்டியலிலிருந்து பொதுப்பட்டியலுக்குக் கொண்டு செல்லப்பட்ட கல்வி எனும் மகத்தான மானுட உரிமையை மீட்டெடுக்கக் கருத்தியல் பரப்புரையும், களப்போராட்டங்களும் செய்ய வேண்டியது பேரவசியமாகிறது. ஆகவே, கல்வியுரிமைப் போராளி தங்கை அனிதாவின் நினைவு நாளில் கல்வியை மாநிலப் பட்டியலுக்குக் கொண்டுவர அரசியல் அழுத்தம் தந்து, அதனை மீட்டெடுக்க இந்நாளில் ஒவ்வொருவரும் உறுதியேற்க வேண்டும் என நாம் தமிழர் கட்சி சார்பாக அறைகூவல் விடுக்கிறேன். என அதில் கூறப்பட்டுள்ளது.  
 

Follow Us:
Download App:
  • android
  • ios