Asianet News TamilAsianet News Tamil

புலிகளுக்காக களத்தில் குதித்த சீமான்..!! புள்ளி விவரங்களை புட்டுபுட்டு வைத்து அதிரடி..!!

அக்காடுகளின் அழிவு என்பது ஒட்டுமொத்த உலக உயிரினங்களையே பாதிக்கும் பேரழிவாகும். அக்காடுகளைப் பாதுகாத்துத் தரும் புலிகளைக் காக்க வேண்டியது தலையாயக் கடமையாகும்.

Seeman who jumped on the field for the Tigers,  Action by keeping the statistics
Author
Chennai, First Published Jul 29, 2020, 4:29 PM IST

சுற்றுசூழலின் குறிகாட்டியாக, பல்லுயிர்ப்பெருக்கத்தின் கண்ணியாக விளங்கும் புலிகளின் எண்ணிக்கைக் குறைவதைத் தடுக்க வனப்பகுதிகளின் பரப்பு சுருக்கப்படுவதைத் தடுக்க வேண்டும் என சீமான் கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை :- 

நாம் வாழும் இப்பூவுலகு என்பது மனிதர்களுக்கு மட்டும் சொந்தமானதன்று; அது அனைத்து உயிர்களுக்குமானது. ஒருசெல் உயிரினம் முதல் மனிதன்வரை எல்லா உயிர்களுக்கும் சமவுரிமையை வழங்கி பொதுவாய் திகழுவதே இயற்கையின் அளப்பெரும் நியதியாகும். எல்லாவற்றையும் கொடையாக அள்ளித்தரும் இப்பூமியை நாம் வாழ்ந்து முடித்துச் செல்கிறபோது பத்திரமாகப் பேணிப்பாதுகாத்து அடுத்தத் தலைமுறைக்கு முழுவதுமாய்க் கையளித்துவிட்டுச் செல்ல வேண்டியது மானுடக்கடமை என்பதை எவரும் மறுப்பதற்கில்லை. எல்லாத் தலைமுறைக்குமான இந்நிலத்தையும், அதன் வளத்தையும் இத்தலைமுறையிலேயே மொத்தமாய்த் தின்று தீர்ப்பதையும், அனைத்துயிர்களுக்குமான பூமியை மனிதன் மட்டுமே சொந்தம் கொண்டாடி சுரண்டிக் கொழுப்பதையும் ஒருநாளும் ஏற்க முடியாது. அதனையுணர்ந்து தெளிந்து காக்க முன்வர வேண்டும் என்பதே உலகின் அத்தனை சூழலியல் ஆர்வலர்களும், இயற்கைப் பேரறிஞர்களும் மாந்தகுலத்திற்கு அறிவுறுத்துகிற பெருஞ்செய்தியாகவும், விடுக்கிற எச்சரிக்கையாகவும் இருக்கிறது. 

Seeman who jumped on the field for the Tigers,  Action by keeping the statistics

மனிதர்கள் போலவே புழு, பூச்சி, வண்டு, காகம், சிட்டு, மான், மயில், சிங்கம், புலி என எல்லா உயிரினங்களும் இப்பூமியில் வாழ்வதற்கான தார்மீக உரிமையினைக் கொண்டுள்ளன. மனிதர்களின் கட்டற்ற அதீத நுகர்வாலும், வளர்ச்சி எனும் பெயரில் மேற்கொள்ளப்படும் பெரும் வளச்சுரண்டலாலும் பல்லுயிர்ச்சூழலும், சுற்றுச்சூழல் மண்டலமும் இன்று பேரழிவை நோக்கிச்சென்று கொண்டிருக்கிறது.இன்று உலகளாவிய புலிகள் தினம். பல்லுயிர்ச்சூழலின் முக்கியக் கண்ணியாக விளங்கும் புலிகள் இன்றைக்கு அரிதான உயிரினமாக மாறிக் கொண்டிருக்கின்றன. மாறிவரும் நிலவியல் கொள்கைகளாலும், முடிவுகளாலும் வனப்பகுதி சுருங்குவதால் புலிகள் பெரும் நெருக்கடியை எதிர்கொள்வதாக தேசிய புலிகள் பாதுகாப்பு நிறுவனம் எச்சரிக்கை விடுக்கிறது. புலிகளைப் பாதுகாக்க நடவடிக்கை பல ஆண்டுகளாக எடுக்கப்பட்ட போதிலும், வாழ்விட இழப்பு மற்றும் வேட்டையாடுதல் போன்றவைகள் புலிகளின் உயிர்வாழலுக்குத் தொடர்ந்து அச்சுறுத்தலாக இருக்கின்றன. புலி பாகங்கள் பாரம்பரிய சீன மருந்துகளில் பயன்படுத்தப்படுகின்றன, புலி தோல் அலங்கார மற்றும் மருத்துவ நோக்கங்களுக்காகவும், புலி எலும்புகள் மீண்டும் உடல் வலியை குணப்படுத்த மருத்துவ நோக்கங்களுக்காகவும் பயன்படுத்தப்படுகின்றன. இந்தியாவின் தேசிய விலங்காகக் கொண்டாடப்படும் புலிகள் வாழ்வதற்கு நிலமும், வனமுமற்று மனிதர்கள் வாழும் பகுதிகளில் உட்புகும் செய்திகள் தற்காலச்சூழலின் பேராபத்தைத் தெளிவுப்படுத்துகின்றன. 

Seeman who jumped on the field for the Tigers,  Action by keeping the statistics

ஒரு வனத்தில் புலிகள் மிகுந்து இருக்கிறதென்றால், அவை வாழ்வதற்கேற்ற நீர், உணவு, பாதுகாப்பான வனம், உலவுவதற்கான பரந்த நிலம் யாவும் கிடைக்கப் பெறுவதாகப் பொருள் கொள்ளப்படுகிறது. சர்வதேசப்புலிகள் பாதுகாப்பு அமைப்பின் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையின்படி, புலிகள் பூமியின் சுற்றுச்சூழல் பாதுகாப்பின் மிக முக்கியக் குறிகாட்டிகளாகும். சுற்றுச்சூழலமைப்பின் மேலாதிக்க வேட்டையாடுபவையாக இருப்பதால், மான் போன்ற விலங்குகள் உண்ணும் தாவர வகைகளின் எண்ணிக்கை சீரானதாக இருப்பதை அவைகள் உறுதி செய்கின்றன. புலிகளின் எண்ணிக்கையில் செங்குத்தான வீழ்ச்சி, தாவரவகையின் தொகை விழுக்காடு அழிய வழிவகுக்கும். புலிகள் எண்ணிக்கை குறைவதன் மூலம் மான்கள் உண்ணும் இத்தாவரங்களின் விழுக்காடு அதிகரிப்பதனால் வனப்பகுதியில் அது பெரும் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். ஆகவே, உணவுச்சங்கிலியைக் காப்பாற்றுவதிலும், பல்லுயிர்ப்பெருக்கத்தைத் தக்க வைப்பதிலும் புலிகள் மிக முக்கியக் கண்ணியாக விளங்குகிறது. புலிகள் வாழ்வதற்கேற்ற சூழல் அற்றுப்போய் அவைகள் அழிவதன் மூலம் மிகப்பெரும் சூழலியல் பேரழிவை வனங்கள் எதிர்கொள்ள நேரிடும். ஆகவேதான், புலிகளைக் காக்க வேண்டியது பேராவசியமிருக்கிறது. 

Seeman who jumped on the field for the Tigers,  Action by keeping the statistics 

புலிகளின் அழிவென்பது ஒரு விலங்கினத்தின் அழிவல்ல; அது ஒரு வனத்தின் அழிவு. இந்தியாவிலுள்ள காடுகளில் மொத்தமாக 2,967 புலிகளே இருக்கின்றன என்பதன் மூலம் எவ்வளவு அழிவின் விளிம்பில் நிற்கிறோம் என்பதை ஆட்சியாளர்களும், பொது மக்களும் உணர்ந்துகொள்ள வேண்டும். உலகப் புலிகளின் தொகையில் 70 சதவீதம் இந்தியாவில் உள்ளது. எனவே, புலிகள் பாதுகாப்பில் இந்நாட்டிற்கு முக்கியப் பங்கு உண்டு.ஒரு நாட்டின் நிலப்பரப்பில் 33 விழுக்காடு காடுகள் இருந்தால்தான் அந்நாடு சுற்றுச்சூழலைப் பேண முடியும் என்கிறது சூழலியல் ஆய்வறிக்கைகள். ஒரு மனிதனுக்கு 422 மரங்கள் தேவை ஆனால் இந்தியாவில் ஒருமனிதனுக்கு வெறும் 28 மரங்களே உள்ளன என்ற செய்தி காடுகளை நாம் எவ்வாறு பாதுகாக்க வேண்டும் என்பதைச் சொல்கிறது. நாம் வாழும் இந்தப் பூமியைப் பாதுகாப்பதிலும், நாம் சுவாசிக்கத் தேவையான உயிர்க்காற்றை உற்பத்தி செய்து தருவதிலும், மாசைக் கட்டுப்படுத்திச் சூழலைச் சமநிலை அடையச் செய்வதிலும் காடுகளே நிகரற்றப் பணியைச் செய்கின்றன. காடுகளே நீரை தன் வேர்களில் தேக்கி நதிகளின் தாயாக விளங்குகிறது. அக்காடுகளின் அழிவு என்பது ஒட்டுமொத்த உலக உயிரினங்களையே பாதிக்கும் பேரழிவாகும். அக்காடுகளைப் பாதுகாத்துத் தரும் புலிகளைக் காக்க வேண்டியது தலையாயக் கடமையாகும்.

Seeman who jumped on the field for the Tigers,  Action by keeping the statistics

ஆகவே, பல்லுயிர்ப்பெருக்கத்திற்கும், சூழலியல் சமநிலைக்கும் பெரும்பாங்காற்றும் புலிகளைக் காக்க அதிகப் புலிகளைப் பாதுக்காக்கும் வனங்களை உருவாக்கவேண்டும் எனவும், அவைகள் வாழும் வனப்பரப்புகள் சுருக்கப்படுவதைத் தடுக்க வேண்டுமெனவும், காடுகளை அழிக்கவும், இயற்கையைச் சுரண்டவும் வழிவகுக்கும் சட்டங்களையும், முடிவுகளையும் திரும்பப் பெற வேண்டும் எனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.என அதில் கூறப்பட்டுள்ளது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios