எம்பூட்டு அடிச்சாலும் கொஞ்சம்  கூட சலிக்காத சீமான்: அவர் ஈழத்தில் கால் வைத்தபோது மழை  கொட்டியதாம், வானவில் வரவேற்றதாம். 

சமூக வலைதளங்களில் இன்று தாறுமாறாக வறுபடுபவர் சீமான் தான். சும்மா கறிவேப்பிலை போல் பிய்ச்சுப் போட்டு, உருவிப் போட்டு, அரைத்துப் போட்டு, தாளித்துப் போட்டு என பல விதங்களில் அவரை வெச்சு மணக்க கமக்க செய்து கொண்டிருக்கின்றனர் நெட்டிசன்கள். 
’நான் ஈழம் சென்று தேசிய தலைவர் பிரபாகரனை பார்த்தேன். அவரோடு பழகினேன், உண்டேன்’ என்று அவர் கூறியதை எடுத்துக் கொண்டு ம.தி.மு.க.வின் முக்கிய தலைகள் முதல் முந்தாநாள் ஃபேஸ்புக் அக்கவுண்ட் ஆரம்பித்த நபர் வரை ஆளாளுக்கு அத்தனை பேருமே போட்டுத் தாக்குகின்றனர் சீமானை. 

இந்த நிலையில் பிரபல வாரம் இருமுறை அரசியல் புலனாய்வு இதழ் ஒன்றில் தொடர் எழுதிக் கொண்டிருக்கிறார் சீமான். அதில், பிரபாகரனை தான் பார்க்கவில்லை! என்று வம்பிழுப்போருக்கு பதில் சொல்லும் விதமாக, தமிழகத்தில் இருந்து தான் ஈழம் சென்று பிரபாகரனை சந்தித்த விதம் பற்றி சில எபிஸோடுகளாய் எழுதிக் கொண்டிருக்கிறார். ஈழம் நோக்கி சீமானை கடல் மார்க்கமாக படகில் அழைத்துச் சென்றனராம் கடல்புலிகள். 
அந்த வகையில் இந்த வாரம் அவர் எழுதியதை வைத்து, அவரை என்னவோ அர்னால்டு ரேஞ்சுக்கு சாகசக்காரராக்கி, கழுவிக் கழுவி ஊற்றுகின்றனர் நெட்டிசன்கள். 

சரி சீமான் இந்த வாரம் அப்படி என்ன எழுதியிருக்கிறாராம்?

அதன் ஹைலைட் பாயிண்ட்ஸ் இதோ...

*    சிங்களக் கடல் எல்லையைக் கடக்க வேண்டிய ஒவ்வொரு நொடியும் விஷப்பரீட்சை என்பது தம்பிகளுக்குப் புரிந்தது. ஆனாலும் எனக்கு அது குறித்த அச்சம் ஏதுமில்லை. 

*    சிங்கள  கடற்படையின் வெறித்தனம் பற்றி அவர்கள் அவ்வளவு விளக்கி சொன்னபோதும், எனக்கு துளி அச்சமும் இல்லை. 

*    என் தலைவனை, வரலாற்றின் தவப்புதல்வனை பார்க்க இருக்கிற பயணத்தில் என் உயிர் மடிந்தாலும் எவ்வளவோ சிறப்பு! என்று நினைத்தேன். 

*    தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் கடற்பகுதியில் என் வருகைக்காக காத்திருந்த தம்பி சேரா, தாமதம் ஆகிக் கொண்டே இருந்ததால் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியாமல் சிங்களக் கடற்பரப்புக்கே வந்துவிட்டான். 

*    என்னை சேராவிடம் ஒப்படைத்துவிட்டு ‘அண்ணா எங்கள் தலைவனை பார்த்து வாருங்கள். உலகத்தில் இப்படியொரு தன்னலமற்ற தலைவன் இருப்பானா என்பதைப் பார்த்து அசந்து போவீர்கள். அவரை ரொம்பவே பிடித்துப் போய், ‘எனக்கு தமிழகம் வேண்டாம்.’ எனச் சொல்லி நீங்கள் ஈழத்திலேயே  நிரந்தரமாக தங்கினாலும் ஆச்சரியமில்லை. அப்பேர்ப்பட்ட தலைவன் அவர்.” என்றார்கள் என்னை அழைத்துச் சென்ற தம்பிமார்கள். 

*    ஈழப்பரப்பை நெருங்க நெருங்க டம் டம் என்கிற சத்தம் பெரிதாக கேட்டது. சிங்கள இராணுவத்தின் பீரங்கிக் குண்டுகளின் சத்தம்தான் அது. கொத்துக் கொத்தாக நம் மக்களைக் கொன்றழிக்கும் சிங்கள இராணுவத்தின் வெறியைக் கண் முன்னால் உணர முடிந்தது. 

*    தமிழ் தேசிய தலைவனின் கட்டுப்பாட்டிற்கு உட்பட்ட கடல்  பரப்பில் நுழைகையில் மழையும் கொட்டத் துவங்கியது. அழகாய் வானவில் விழுந்தது. தம்பி சேரா சொன்னான் ‘உன் அண்ணனின் நாடு உன்னை எப்படி வரவேற்கிறது பார்  அண்ணா. வானம் பொழிகிறது, வானவில் வரவேற்கிறது, சிங்களவன் தன் பங்குக்கு  பட்டாசு போட்டு உன்னை வரவேற்கிறான்.’ என்று. 
என்று எழுதியிருக்கிறார். 

இதையெல்லாம் அடிப்படையாக வைத்துக் கொண்டுதான் சீமானை கலாய்த்து தள்ளுகிறார்கள் நெட்டிசன்கள். 

விடுங்க பாஸ் அண்ணனை!
-    விஷ்ணுப்ரியா