இந்துக்கள் குறித்து சர்ச்சை பேச்சு விவகாரம்... ஆ.ராசாவுக்கு சப்போர்ட் பண்ணும் சீமான்!!
ஆரிய சனாதன கோட்பாடுகளுக்கு எதிரான ஆ.ராசாவின் கருத்துக்களை முழுமையாக ஆதரித்து என்றைக்கும் துணைநிற்போம் என்று நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
ஆரிய சனாதன கோட்பாடுகளுக்கு எதிரான ஆ.ராசாவின் கருத்துக்களை முழுமையாக ஆதரித்து என்றைக்கும் துணைநிற்போம் என்று நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். இதுக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மனு தர்மத்தின் கொடுங்கோன்மையை எடுத்துரைத்து, சூத்திரர் (வேசி மக்கள்) எனும் இழிவை தமிழர்கள் சுமக்கக் கூடாதெனக் கூறியதால், திமுகவின் துணைப்பொதுச் செயலாளர் ஆ.ராசாவை குறிவைத்து மதவாதிகள் தனிநபர் தாக்குதல் தொடுப்பதும், அவதூறு பரப்புரை செய்வதுமானப் போக்குகளை இனியும் சகித்துக் கொண்டு இருக்க முடியாது. பிறப்பின் வழியே பேதம் கற்பிக்கும் வருணாசிரமக் கோட்பாட்டால் விளைந்த சமூக அநீதியை அறச்சீற்றத்தோடு முன்வைத்த ஆ.ராசாவின் கருத்து மிக நியாயமானது. அதனை நாம் தமிழர் கட்சி முழுமையாக ஆதரிக்கிறது. அக்கருத்துக்குப் பக்கபலமாகத் துணைநிற்கிறது. ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு மூத்தத் தொன்மப்பெருமைகள் பல வாய்ந்த தமிழர் எனும் தேசிய இனத்தின் மக்கள் நாங்கள். தமிழர்களின் வாழ்வியல் இலக்கணமே அறநெறிதான். அது சமத்துவத்தையும், சமதர்மத்தையுமே அடிப்படையாகக் கொண்டது. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான் என உயிர்ம சமத்துவம் போதிக்கிறார் தமிழ் மறையோன் வள்ளுவப்பெருமகனார்.
இதையும் படிங்க: கொந்தளிப்பை ஏற்படுத்திய பாஜகவின் நிர்மல்குமார் டிவீட்... கடுமையாக விளாசிய பழனிவேல் தியாகராஜன்!!
சாத்திரம் பல பேசும் சழக்கர்காள் கோத்திரமும் குலமும் கொண்டு என் செய்வீர் எனப் பாடுகிறார் சைவசமயக்குரவர் திருநாவுக்கரசர். பறைச்சியாவது ஏதடா? பணத்தியாவது ஏதடா? இறைச்சி தோல் எலும்பிலும் இலக்கமிட்டு இருக்குதோ? என வினவுகிறார் சித்தர் சிவவாக்கியர். சாதியிலே மதங்களிலே சமயநெறிகளிலே சாத்திரச்சந் தடிகளிலே கோத்திரசண் டையிலேஆதியிலே அபிமானத்து அலைகின்ற உலகீர் என்று பாடுகிறார் ஐயா திருவருட்பிரகாச வள்ளலார். தாழக் கிடப்பாரை தற்காப்பதே தர்மம் என்று அறம்போற்றுகிறார் ஐயா வைகுந்தர். நான் யாருக்கும் அடிமையில்லை; எனக்கும் யாரும் அடிமையில்லை என்கிறார் அண்ணல் அம்பேத்கர். தன்னை உயர்ந்த சாதியென எண்ணிக்கொண்டு, தனக்கு மேலே உயர்ந்தவர்கள் யாருமில்லையெனக் கருதுபவர்கள், தனக்குக் கீழேயும் தாழ்ந்தவர்கள் யாருமில்லை என எண்ணிவிட்டால், ஒரு சிக்கலுமிராது என்கிறார் ஐயா பெரியார். ஆரிய மார்க்கமான இந்து மதத்தை தமிழர்கள் ஏற்றதாலேயே, தாங்கள் தனித்தப்பேரினம் என்பதை மறந்துபோனார்கள்.
இந்து மதத்தில் தாங்களும் ஒரு பகுதியினரென்று கருதிக் கொண்டதாலேயே தன்மானத்தையும், தன்னாட்சியுரிமையையும் தமிழர்கள் இழந்துவிட்டார்கள்' என்கிறார் பேரறிஞர் அண்ணா. சாதிகள் இல்லையடி பாப்பா! குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்! நீதிஉயர்ந்த மதிகல்வி அன்பு நிறைய உடையவர்கள் மேலோர் எனப் பொதுமைப் பாடுகிறார் பெரும்பாவலன் பாரதி. யாரு மேல கீறினாலும் ரத்தம் ஒண்ணுதான்! ஆக மொத்தம் நீயும், நானும் பத்து மாதம்தான் எனப் பேதங்களைச் சாடுகிறார் மக்கள் பாவலர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம். சாதிவெறி சமயவெறி கன்னல் நிகர் தமிழுக்கு நோயே! இடைவந்த சாதி என்னும் இடர் ஒழிந்தால் ஆள்வது நம் தாய் தாய் தாயே! எனப்பாடுகிறார் புரட்சிப்பாவலர் பாரதிதாசன். மூத்தோர்களும், முன்னோர்களும் உதிர்த்த இத்தகையக் கூற்றுகளின் மூலம் சாதியக்கட்டமைப்பும், வருணாசிரமக்கோட்பாடுகளும் தமிழர்களின் அறநெறிக்கு மட்டுமல்லாது, இறைநெறிக்கும் எதிரானது என்பதை உணர்ந்துகொள்ள முன்வர வேண்டும். முற்காலத்திலேயே நாகரீகமடைந்து, நிலங்களைத் திணைகளாகப் பகுத்து, வாழ்வியலை அகவாழ்க்கை, புறவாழ்க்கையெனப் பிரித்து, அவற்றிற்கு தனியொரு இலக்கணம் வகுத்து, அதற்கு அடிப்படையாக அறநெறியை வைத்து, வாழ்வாங்கு வாழ்ந்து வந்த தமிழ்ச்சமூகத்தின் மீது நிகழ்ந்தேறிய ஆரியப்படையெடுப்பினால் மற்ற மொழிவழித்தேசிய இனங்களைப் போலவே, தமிழ்த்தேசிய இனமும் பிரித்தாளும் சூழ்ச்சியை எதிர்கொள்ள நேரிட்டது.
இதையும் படிங்க: ஊழல் வழக்கில் சிக்கிய எடப்பாடி பழனிசாமியின் சம்பந்தி.. நெருக்கும் நீதித்துறை.. அடுத்து என்ன ?
ஆதியில் தாய்வழிச்சமூகமாகக் கட்டமைக்கப்பட்டு, சங்கக் காலத்திலேயே பெண்பாற்புலவர்களைக் கொண்டிருக்கிற அளவுக்கு பெண் கல்வியில் சிறந்து விளங்கி, முற்போக்கோடு திகழ்ந்த தமிழினத்தில் பெண்களுக்குரிய தலைமையும், முதன்மைத்துவமும் ஆரியச் சூழ்ச்சியினால் இடைக்காலத்தில் பறிக்கப்பட்டது. பெண்ணிய உரிமைகள் கேள்விக்குறியாயின. தாங்கிய வலியின் மொழிதான் ஆ.ராசாவின் வார்த்தைகளில் வெளிப்பட்டுள்ளது. இவ்வளவு ஆண்டுகாலமாக இழித்துரைக்கப்பட்டதைத்தான் இன்றைக்கு அவர் எடுத்துரைத்திருக்கிறார். அதனை எடுத்துக்கூறியதற்கே, மதவெறியர்களுக்கு இவ்வளவு கோபம் வருகிறதென்றால், எங்களை சூத்திர மக்களாக்கி இழிமகனெனப் பன்னெடுங்காலமாகப் பேசி வரும்போது எங்களுக்கு எவ்வளவு வலியும், கோபமும் இருந்திருக்கும்? தமிழர்கள் மீதான சூத்திர (வேசி மக்கள்) பட்டத்தைப் போக்க வேண்டுமெனவே அவர் சாடினாரே ஒழிய, இறை நம்பிக்கையுடைவர்களை தவறாக விமர்சித்துப் பேசவில்லை. ஒர் மதத்தைத் தாங்கி நிற்பதாலேயே, சூத்திரப்பட்டத்தைச் சுமத்தி, தாசி மக்கள், வேசி மக்கள், இழி மக்களென எங்களைப் பழித்துரைப்பார்களென்றால், அதனை எப்படி பொறுத்துக்கொள்ள முடியும்? மதத்தின் பெயரால் மண்ணின் மக்கள் எங்களை இழிமகனென விளிப்பதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? இந்தக் கேள்வியைத்தான் ஆ.ராசா எழுப்பியிருக்கிறார்.
மதம்தான் மண்ணின் மக்களின் பிறப்பைக் கொச்சைப்படுத்தி உரைக்கிறதே ஒழிய, அண்ணன் ஆ.ராசா அவர்கள் எவரது பிறப்பு குறித்தும் இழிவாகப் பேசவில்லை. இதனையே அவருக்கு முன்பாக தமிழின முன்னோர்களும், ஐயா பெரியார் போன்ற சமூகச்சீர்திருத்தவாதிகளும் பலமுறைப் பேசியிருக்கிறார்கள் என்பது வரலாறு. ஆ.ராசா அரசியல் இயக்கத்தாலும், கொள்கை நிலைப்பாட்டாலும் மாறுபட்டாலும், அவர் இம்மண்ணின் மகன்; தமிழகத்தின் மிக முக்கியமானக் கருத்தாளுமை! மதவாதிகள் அவரை நோக்கி இழிசொற்களை வீசுவதை அனுமதிக்கவோ, அவரை விட்டுக்கொடுக்கவோ முடியாது. ஆ.ராசாவுக்கு எதிரான அவதூறுப் பரப்புரைகளுக்கு எனது கடும் கண்டனத்தையும், எதிர்ப்புணர்வையும் பதிவு செய்கிறேன். ஆகவே, ஆரிய சனாதன கோட்பாடுகளுக்கு எதிரான அண்ணன் ஆ.ராசா அவர்களின் கருத்துக்களை முழுமையாக ஆதரித்து, என்றைக்கும் துணைநிற்போம் என்பதையும் நாம் தமிழர் கட்சி சார்பாக தெரிவித்துக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார். இந்துக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய ஆ.ராசா குறித்து திமுக நிர்வாகிகளும் அமைச்சர்களும் பேச மறுத்த நிலையில் சீமான் அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.