ஒரே மின் இணைப்பு திட்டத்தை கைவிட வேண்டும்... திமுக அரசுக்கு சீமான் வலியுறுத்தல்!!
ஒரே மின் இணைப்பு திட்டத்தை உடனடியாகக் கைவிட வேண்டும் என தமிழக அரசுக்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.
ஒரே மின் இணைப்பு திட்டத்தை உடனடியாகக் கைவிட வேண்டும் என தமிழக அரசுக்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். இதுக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், குடியிருப்புகளில் பயன்படுத்தப்படும் ஒன்றுக்கும் மேற்பட்ட மின் இணைப்புகளை ஒரே மின் இணைப்பாக மாற்ற வேண்டுமென்ற தமிழ்நாடு மின்சார வாரியத்தின் அறிவிப்பு அதிர்ச்சியளிக்கிறது. பொதுமக்களின் ஆதார் எண்ணை வலுக்கட்டாயமாக மின் இணைப்பு எண்ணுடன் இணைத்துவிட்டு, தற்போது அத்தகவல்களை அடிப்படையாகக் கொண்டு ஒரே மின் இணைப்பாக மாற்றி, ஏழை மக்களுக்கு வழங்கப்படும் கட்டணச் சலுகைகளை நிறுத்த திமுக அரசு திட்டமிட்டுள்ளது வன்மையான கண்டனத்திற்குரியது. ஆட்சிக்கு வந்த ஓராண்டிற்குள் 50% அளவிற்கு மின் கட்டணத்தை உயர்த்தி மக்களை வாட்டி வதைத்த திமுக அரசு, அடுத்தப் பேரிடியாக ஒரே குடியிருப்புகளில் உள்ள ஒன்றுக்கும் மேற்பட்ட மின் இணைப்புகளை ஒரே மின் இணைப்பாக மாற்றும் பணியைத் தொடங்கியுள்ளது. அதன்படி மின்வாரிய அலுவலர்கள் மூலம் மின் நுகர்வோர்களிடம் நேரடியாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிக்கையை வழங்கி வருகிறது.
இதையும் படிங்க: தமிழகத்தில் பாஜகவை அண்ணாமலை காலிசெய்து விடுவார் - கடம்பூர் ராஜூ விமர்சனம்
ஒரே மின் இணைப்பாக மாற்றினால், ஒவ்வொரு தனி மின் இணைப்புக்கும் வழங்கப்படும் 100 அலகுகள் இலவச மின்சாரத்தை இனி பெறமுடியாத அவலநிலைக்கு மக்கள் தள்ளப்படுவர். மேலும், தற்போது 400 மின் அலகுகள் வரை ஒரு அலகிற்கு 4.50 ரூபாயும், 500 மின் அலகுகள்வரை ஒரு அலகிற்கு 6 ரூபாயும், 600 மின் அலகுகள் வரை ஒரு அலகிற்கு 8 ரூபாயும் என மக்கள் பயன்பாட்டிற்கு ஏற்ப ஒவ்வொரு 100 மின் அலகிற்கும் வெவ்வேறு கட்டணங்கள் தமிழ்நாடு அரசால் வசூலிக்கப்படுகிறது. ஆனால், ஒரே மின் இணைப்பாக மாற்றுவதன் மூலம் குறைவாக மின்சாரத்தைப் பயன்படுத்தும் மக்களும் தற்போது செலுத்துவதைவிடப் பன்மடங்கு அதிகமாகக் கட்டணம் செலுத்த வேண்டிய நெருக்கடி நிலை ஏற்படும். இதனால் வீட்டு வாடகை உயர்ந்து, வாடகை வீட்டில் வசிக்கும் மக்களும் பெரும் பாதிப்புக்கு ஆளாக நேரிடும். அதுமட்டுமின்றி திமுக அரசின் இச்செயல் ஏற்கனவே எரிபொருள், எரிகாற்று, விலைவாசி உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை மேலும் வாட்டி வதைக்கும் கொடுங்கோன்மையாகும்.
திமுக அரசு ஆதார் எண்ணை மின் இணைப்பு எண்ணுடன் இணைக்கக் கட்டாய உத்தரவு பிறப்பித்தபோதே, அது மானியம் மற்றும் மின் கட்டணச் சலுகைகளை நிறுத்துவதற்கான சூழ்ச்சி என்று நாம் தமிழர் கட்சி கடுமையாக எதிர்த்தது. ஆனால் அப்போது அதனைத் திட்டவட்டமாக மறுத்த திமுக அரசு, கடந்த நான்கு மாத காலத்தில் அனைத்து மின் இணைப்புகளையும் ஆதார் எண்ணுடன் இணைக்கும் பணியை அவசர அவரசமாகச் செய்து முடித்தது. தற்போது ஆதார் தகவல்களை அடிப்படையாகக் கொண்டே ஒரே மின் இணைப்பாக மாற்ற திமுக அரசு வற்புறுத்துவதிலிருந்தே, நாம் தமிழர் கட்சியின் எச்சரிக்கை தற்போது உறுதியாகியுள்ளது என்பது தெளிவாகிறது.
இதையும் படிங்க: தமிழக வனத்துறையில் வேலைவாய்ப்பு... ரூ.25,000 சம்பளம்... விண்ணப்பிப்பது எப்படி? விவரம் உள்ளே!!
இந்திய ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசின் அறிவுறுத்தலின்படியே, மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு உத்தரவிட்டதாகக் கூறிய திமுக அரசு, தற்போது ஒரே மின் இணைப்பாக மாற்ற வேண்டும் என்ற உத்தரவுக்கு யாரை கை காட்டப் போகிறது? பஞ்சாப் மாநிலத்தில் புதிதாக ஆட்சிக்கு வந்த ஆம் ஆத்மி கட்சி 300 மின்அலகுகள் வரை முற்றிலும் இலவசமாக மின்சாரம் வழங்கும் நிலையில், திமுக அரசு ஏற்கனவே வழங்கும் சலுகைகளையும் பறிக்க முயல்வது எவ்வகையில் நியாயமாகும்? மின் கட்டணத்தை உயர்த்தி மக்களை இருளில் தள்ளுவதற்குப் பெயர்தான் விடியல் ஆட்சியா? இதுதான் திராவிட மாடலா? என்ற கேள்வியும் எழுகிறது. ஆகவே, மறைமுக மின் கட்டண உயர்வுக்கு வழிவகுக்கும் ஒரே மின் இணைப்பு திட்டத்தை உடனடியாகக் கைவிட வேண்டுமென தமிழ்நாடு அரசினை நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன். மேலும், மின்கட்டணச் சுமையைக் குறைக்கும் வகையில் இரண்டு மாதத்திற்கு ஒருமுறை மின்கட்டணம் செலுத்தும் முறையைக் கைவிட்டு, நாம் தமிழர் கட்சியின் நீண்டகாலக் கோரிக்கையான மாதந்தோறும் மின்கட்டணம் செலுத்தும் முறையை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டுமெனவும் கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.