இப்போதிருக்கு அரசியல் நிலவரத்தில் யார் எப்போது கைது செய்யப்படுவார்கள் என்று கணிக்க முடியாத படி இருக்கிறது சூழ்நிலை. அம்மா இருந்த போது அடக்கி வாசித்த பலரும் இப்போது ஆட்டம் போட ஆரம்பித்திருக்கின்றனர். அதே சமயம் அவர் இருந்த போதே குரல் கொடுத்த பலரும் இப்போது அடக்கி வாசிக்க ஆரம்பித்திருக்கின்றனர். 

அவராவது என்ன செய்வார்னு எல்லாருக்கும் தெரியும். இவங்க என்ன செய்யுவாங்கனே சொல்லமுடியாது என சூழ்நிலையை அனுசரித்து சைலண்டான அரசியல்வாதிகள் லிஸ்டின் இப்போது சீமானும் சேர்ந்திருக்கிறார்.

தூத்துக்குடி துப்பாக்கி சம்பவம் குறித்து  ஐநா மனித உரிமை ஆணையத்தில் பேசியதற்காக திருமுருகன் காந்தி கைதாகிய விவகாரமும் சரி, தொடர்ந்து அவர் சிறையில் அனுபவித்து வரும் பிரச்சனைகளும் சரி , அரசியல் வட்டாரத்திலும் மக்கள் மத்தியிலும் லேசான பயத்தினை தான் ஏற்படுத்தி இருக்கிறது. 

எந்த வகையிலும் வெளியேற முடியாதபடி கிடுக்குப்பிடி போட காத்திருக்கும் ஆளும் கட்சியிடம் தானாக போய் மாட்டிக்கொள்ள இப்போதைக்கு யாரும் தயாராக இல்லை என்றே சொல்லலாம்.

இந்த நிலையிலும் கூட ஜாதி வாரியாக அரசியல்வாதிகளின் பெயரை பட்டியலிட்டு, கிழி கிழியென கலா மாஸ்டர் பாணியில் திட்டி தீர்த்த கருணாஸ் , தடாலடியாக கைது செய்யப்பட்டதும் ,ஜாமீனுக்காக அலையோ அலையென அலைவதும் அவ்வப்போது கண்முன்னால் வந்து போவதால், வழக்கமாக அனல் தெறிக்க பேசும் பல அரசியல் பிரபலங்களும் இப்போது அமைதிப்படையாகி இருக்கின்றனர்.

அவன் , இவன் என ஏக வசனத்தில் ஆளுங்கட்சினா என்ன? எதிர்கட்சினா என்ன? என பாரபட்சம் பார்க்காமல் திட்டி தீர்க்கும் சீமானும் இந்த அமைதி லிஸ்டில் தான் இப்போது இருக்கிறார்.. ஏற்கனவே யாரை பிடிச்சு உள்ள போடலாம் என காத்துக்கொண்ட்டிருக்கும் இவர்களிடம் நாமாக போய் ஏன் சிக்க வேண்டும் என நினைத்தாரோ என்னவோ , அண்ணனை இப்போதெல்லாம் அந்தபக்கம் இந்த பக்கம் என எந்த பக்கத்திலுமே காணமுடியவில்லை.