“சீமான் மேடையில் செருப்பை தூக்கி காண்பிப்பதை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது. இதுபோன்ற போக்கு கவலையும் வேதனையும் அளிக்கிறது. இது மிகவும் கண்டனத்திற்குரியது”

நான் திருமாவளவனுக்கு எதிராக செருப்பைக் காட்டவில்லையே என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

சென்னையில் அண்மையில் நடந்த கூட்டம் ஒன்றில் பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், தன்னை சங்கி என்று திமுகவினர் கூறுவதற்கு பதிலடியாக, “திமுகதான் உண்மையான சங்கி” என்று என்று கூறி ஆவேசத்தில் செருப்பைக் கழற்றி மேடையிலேயே காட்டினார். இது திமுக தொண்டர்களிடையே கடும் கோபாவேசத்தை ஏற்படுத்தியது. அதன் தொடர்ச்சியாகத்தான் தருமபுரியில் நாம் தமிழர் கட்சியின் மேடையில் திமுகவினர் ஏறி தாக்குதல் நடத்தும் சம்பவமும் நடைபெற்றது. ஆளுங்கட்சியான திமுகவினர் நடத்திய இந்தத் தாக்குதலால் அதிமுக, பாமக உள்ளிட்ட கட்சிகள் கண்டனம் தெரிவித்தன.

இந்த விவகாரம் பெரும் விவாதமான நிலையில், திமுகவில் உள்ள கூட்டணி கட்சியான விசிகவும் திமுகவுக்கு எதிர்ப்பு தெரிவித்தது. இதுதொடர்பாக க்ருத்து தெரிவித்த விசிக தலைவர் தொல். திருமாவளவன், “கருத்துக்கு கருத்தைத்தான் எடுத்து வைக்க வேண்டும். இந்த சம்பவத்தில் திமுக தலைமைக்கு உடன்பாடு இருக்காது என்றே நினைக்கிறேன். வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்திருந்தார். திருமாவளவனின் இந்தக் கருத்துக்கு நன்றி தெரிவித்து சீமான் ட்விட்டரில் பதிவிட்டார். நாம் தமிழர் கட்சியினரும் திருமாவளவனுக்கு நன்றி தெரிவித்தனர். 

ஆனால், திருமாவளவனின் கருத்துக்கு எதிராக திமுகவினர் திரும்பினர். சமூக ஊடகங்களில் திருமாவளவனை விமர்சித்து திமுகவினர் காட்டமாகப் பதிவிட்டனர். பதிலுக்கு விசிகவினரும் பதிவிட திமுக - விசிக கூட்டணில் சலசலப்பு ஏற்பட்டது. இதனையடுத்து திமுகவினரை குளிர்விக்கும் வகையில் சீமான் செயல் குறித்து திருமாவளவன் கருத்து தெரிவித்தார். “சீமான் மேடையில் செருப்பை தூக்கி காண்பிப்பதை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது. இதுபோன்ற போக்கு கவலையும் வேதனையும் அளிக்கிறது. இது மிகவும் கண்டனத்திற்குரியது” என்று திருமாவளவன் விமர்சித்தார்.

இந்நிலையில் திருமாவளவனின் கருத்து குறித்து சீமானிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த சீமான், “நான் செருப்பு காட்டியதை, சாதாரணமாக விட்டுவிடக்கூடாது என்று என்னுடைய அண்ணன் திருமாவளவன் பேசியிருக்கிறார். நான் அவருக்கு எதிராகக் காட்டவில்லையே. அவர் வேண்டுமானால் எனக்கு எதிராகப் பேசலாம். ஆனால், நான் அவருக்கு எதிராக எதுவும் பேசுவதில்லை. இனியும் பேசப் போவதில்லை” என்று தெரிவித்தார்.