seeman opposed rajini political entry
அரசியலுக்கு வரும் கமலுக்கு ஆதரவு தெரிவித்துள்ள சீமான், ரஜினியின் அரசியல் பிரவேசத்தை மீண்டும் ஒருமுறை கமலை அருகில் வைத்துக்கொண்டே சீமான் எதிர்த்துள்ளார்.
சினிமாவில் இருதுருவங்களாக திகழ்ந்த ரஜினியும் கமலும் அரசியலிலும் ஒரே நேரத்தில் களமிறங்குகின்றனர். ஆனால் ரஜினிக்கு முன்னதாக கட்சியின் பெயரை அறிவித்து தீவிர அரசியலை தொடங்குகிறார் கமல்.
நாளை அரசியல் கட்சியின் பெயரை அறிவித்து ராமேஸ்வரத்தில் இருந்து அரசியல் பயணத்தை தொடங்குகிறார் கமல். அதற்காக முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் டி.என்.சேஷன், கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு, ரஜினிகாந்த், திமுக தலைவர் கருணாநிதி ஆகியோரை சந்தித்து கமல் வாழ்த்து பெற்றார்.
இந்நிலையில், கமல்ஹாசனை அவரது ஆழ்வார்ப்பேட்டை இல்லத்தில் சீமான் சந்தித்தார். பின்னர் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
ஏற்கனவே ரஜினியின் அரசியல் பிரவேசத்தை கடுமையாக எதிர்த்துவரும் சீமான், கமலுடன் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தபோதும் அதை செய்தார். எங்கள் மண்ணின் மைந்தன் கமல், அரசியலுக்கு வருகிறார். அவரது அரசியல் பயணம் வெற்றியடைய வாழ்த்துக்கள் என சீமான் தெரிவித்தார்.
ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து சீமானிடம் கேள்வி எழுப்பப்பட்டது. கமலை பக்கத்தில் இருக்கும்போதும், ரஜினியின் அரசியல் பிரவேசத்தை சீமான் எதிர்த்தார். தமிழ்நாட்டின் பிரச்னைகளை தமிழனாக இருந்தால்தான் புரிந்துகொள்ள முடியும். அந்த வகையில் தமிழ்நாட்டின் விவசாயிகள், மாணவர்கள், மீனவர்கள், மின் ஊழியர்கள் என அனைத்து தரப்பினரின் பிரச்னைகளும் புரிந்தால்தான் அதற்கு தீர்வு காணமுடியும். அதனால் தமிழ்நாட்டை தமிழன் தான் ஆள வேண்டும் என சீமான் தெரிவித்தார்.
மேலும் தமிழ் வாழ வேண்டும் என்றால் தமிழன் தான் ஆள வேண்டும் என வைரமுத்து கூறியுள்ளார். அதைத்தான் நானும் கூறுகிறேன். தமிழ்நாட்டை தமிழன் தான் ஆள வேண்டும் என சீமான் வலியுறுத்தினார்.
