பாஜகவுடன் திமுக கூட்டணி வராததால் தான் செந்தில் பாலாஜி, பொன்முடி வீட்டில் ED சோதனை.! சீமான்
இந்தி படித்தால் வேலை கிடைக்கும் என்றால் தமிழ்நாட்டில் எதற்காக வேலை செய்ய வந்திருக்கிறார்கள்? இந்தியை தாய் மொழியாக கொண்ட மாநிலங்கள் வேலைவாய்ப்பில் தன்னிறைவு அடைந்து விட்டதா எனவும் சீமான் கேள்வி எழுப்பினார்.
மணிப்பூர் கலவரம் பற்றி பேசவே இல்லை
மாலை முரசு நிறுவனர் ராமச்சந்திர ஆதித்தனார் அவர்களின் 89 வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள மாலை முரசு அலுவலகத்தில் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள அவரது திருவுருவப் படத்திற்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய சீமான், நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பேசியது தொடர்பான கேள்விக்கு, அது ஒரு நீண்ட உரை அவ்வளவுதான்... பிரச்சனை என்பதே மணிப்பூர் கலவரம் தான் அதை பற்றி பேசவே இல்லை.. கலவரத்தின் காவலர்கள் அவர்கள் தான் கலவரங்களால் ஆட்சி நடத்துபவர்கள் அதனால் கலவரத்தை பற்றி கவலை படமாட்டார்கள்.
தமிழுக்கு முக்கியத்துவம் இல்லை
பெண்களை வன்புணர்வு செய்து கொலை செய்யும் நிலையில் பாரத மாதாவுக்கு ஜே என முழக்கமிட்டு என்ன பயன்? ஊர் ஊராக சென்று தமிழைப் பற்றி ஆனால் நாடாளுமன்ற வளாகத்தில் சமஸ்கிருதத்தில் கல்வெட்டு இருக்கிறது. தமிழில் ஏன் கல்வெட்டு இல்லை என சீமான் கேள்வி எழுப்பினார். சமஸ்கிருதத்திற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை தமிழுக்கு கொடுப்பதில்லை ஆனால் பிரிக்க பார்க்கிறோம் பிரிக்க பார்க்கிறோம் என பேசுகிறார்கள். தமிழர்களுக்கு எந்த உரிமையையும் பெற்றுதருவதில்லை. வாக்குக்காகவும்,வரிக்காகவும் வள கொள்ளைக்காகவும் மத்திய அரசு தமிழர்களை பயன்படுத்திக் கொள்கிறது. பல மொழிகள் என்றால் இந்தியா ஒரே நாடாக இருக்கும் ஒரே மொழி என்றால் பல நாடுகள் பிறக்கும் அது எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது என கூறினார்.
திமுக அமைச்சர்கள் மீது சோதனை ஏன்.?
பத்தாண்டு காலம் பதவியிலிருந்த பாஜக பொன்முடி, செந்தில் பாலாஜி மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. இப்போது நடவடிக்கைக்கு காரணம் என்ன.? செந்தில் பாலாஜி வழக்கு அதிமுக ஆட்சியில் நடைபெற்ற வழக்கு, பொன்முடி வழக்கு 13 வருடங்களுக்கு முன்பு உள்ள வழக்கு தங்கள் கூட்டணிக்கு திமுக வராத காரணத்தால் இப்போது அமலாக்கத்துறை சோதனை நடத்துவதா? என கேள்வி எழுப்பினார். இது தான் சந்தர்ப்பவாத அரசியல் என தெரிவித்தார். தேர்தல் வரும் நேரத்தில் இதை பயன்படுத்திக் கொள்வதற்காக தற்போது சோதனை நடத்துகிறார்கள் எனவும் கூறினார்.
இந்தி படித்தவர்கள் ஏன் தமிழகம் வருகிறார்கள்
ஹிந்தி,சமஸ்கிருதம் தமிழ்நாட்டில் படிக்க முடியாத நிலை இருந்தது என நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் பேசியது தொடர்பான கேள்விக்கு, ஏன் அதை படிக்க வேண்டும் என்கிற காரணத்தை சொல்லுங்கள் என எதிர் கேள்வி எழுப்பிய சீமான், இந்தி படித்தால் வேலை கிடைக்கும் என்றால் தமிழ்நாட்டில் எதற்காக வேலை செய்ய வந்திருக்கிறார்கள்? ஹிந்தியை தாய் மொழியாக கொண்ட மாநிலங்கள் வேலைவாய்ப்பில் தன்னிறைவு அடைந்து விட்டதா என கேள்வி எழுப்பினார்.
மேலும் நான் ஏன் சமஸ்கிருதத்தை படிக்க வேண்டும். சமஸ்கிருதம் படித்தால் எந்த கோவிலில் என்னை மணி ஆட்ட விடுவார்கள் என கேள்வி எழுப்பிய சீமான் தமிழ் மொழியிலேயே நல்ல மந்திரங்கள் இருப்பதாக கூறினார். நிர்மலா சீதாராமன் தமிழராக இருந்து கொண்டு ஏன் கன்னடத்தில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்கள் என கேள்வி எழுப்பினார்.