Asianet News TamilAsianet News Tamil

ஸ்டாலினுக்கு திடீர் கடிதம் எழுதிய சீமான்..! கொலைகளத்திற்கே அனுப்பும் செயல்.. இதை மட்டும் செய்யாதீர்கள்..

ராஜிவ்காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்டவர்களை இலங்கைக்கு அனுப்பும் முடிவு மிகவும் தவறானது என தெரிவித்துள்ள சீமான் கொலைக்களத்திற்கே அனுப்புவதற்கு சமமானது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எழுதியுள்ள கடிதத்தில் சீமான் தெரிவித்துள்ளார். 
 

Seeman has insisted that the killers of Rajiv should not be kept in Trichy special camp
Author
First Published Nov 22, 2022, 8:55 AM IST

ஸ்டாலினுக்கு சீமான் கடிதம்

ராஜிவ் காந்தி காந்தி கொலை வழக்கில் இருந்து வெளியானவர்களை சிறுப்பு முகாமில் இருந்து விடுவித்து அவர்கள் செல்ல விரும்பும் நாடுகளுக்கு அனுப்ப வேண்டும் என நாம் தமிழகழ் கட்சி சீமான் வலியுறுத்தியுள்ளார். இது  தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்க்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு! வணக்கம்! ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிக்குண்டு, 31 ஆண்டுகாலத்திற்கும் மேலாக கொடுஞ்சிறைதண்டனைக்கு ஆளாகி, நீண்ட சட்டப் போராட்டத்திற்கு பிறகு விடுதலைபெற்றுள்ள தம்பி இராபர்ட் பயஸ், அண்ணன் ஜெயக்குமார், தம்பி சாந்தன், தம்பி முருகன் ஆகியோர் திருச்சி சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள செய்தியையும், அவர்களது விடுதலையின் மகத்துவத்தையும் தாங்கள் நன்றாக அறிவீர்கள்! 

அதிமுக பொதுக்குழு வழக்கு.. ஓபிஎஸ் கோரிக்கையை ஏற்ற உச்சநீதிமன்றம்..!

சிறப்பு முகாம்- அதிர்ச்சி தகவல்

இளமைப்பருவத்தில் சிறைப்படுத்தப்பட்டு, வெளியுலகத்தொடர்புகள் யாவும் துண்டிக்கப்பட்டு, தங்களது குடும்பத்தினரையும், உறவுகளையும் பிரிந்து, சிறைக்கொட்டடியிலேயே வாழ்வின் பெரும்பகுதியைக் கழித்த அவர்களுக்கு எஞ்சியிருக்கும் காலமாவது முழுமையான விடுதலையின் மகிழ்வைத் தர வேண்டுமென்பதுதான் ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் எதிர்ப்பார்ப்பாகும்.ஆறுபேரும் விடுதலைபெற்றுவிட்டார்கள் எனும் மகிழ்ச்சிகரமான செய்தியை உள்வாங்கி முடிப்பதற்குள்ளாகவே, அவர்களில் நால்வர் திருச்சி சிறப்பு முகாமில் அடைக்கப்பட்ட செய்தியானது பெரும் அதிர்ச்சியையும், மனவேதனையையும் தந்தது. அம்முகாமிலுள்ள ஈழச்சொந்தங்களே தங்களை விடுவிக்கக்கோரி, தொடர்ச்சியாகப் போராடி வரும் நிலையில், இவர்கள் நால்வரையும் அங்கு அடைப்பதென்பது சிறிதும் ஏற்புடையதல்ல. 

அரசியலில் இந்த பிரச்சனைகள் எல்லாம் சகஜமப்பா.? தமிழக காங்கிரஸ் தலைவர் மாற்றும் கோரிக்கைக்கு திருநாவுகரசர் பதில்

கொலைக்களத்திற்கு அனுப்பும் செயல்

வெளியுலகத்திற்கும், சட்டத்தின் பார்வையில் அவர்கள் நால்வரும் விடுதலைபெற்றதாகக் கொண்டாலும், சிறப்பு முகாம் என்பது அவர்களுக்கு மற்றுமொரு கொடுஞ்சிறையாகவே இருக்கும். ஒரு சிறையிலிருந்து மற்றொரு சிறைக்கு மாற்றுவது எப்படி உண்மையான விடுதலையாக இருக்க முடியும்? புழல் சிறையில்கூட நடைபயிற்சி செல்வதற்கு வாய்ப்புகள் உண்டு. ஆனால், அதற்குகூட வாய்ப்பில்லாத சிறப்பு முகாம்கள் என்பது தனிமைச் சிறையைவிடக் கொடுமையான நெருக்கடிகள் நிறைந்த சித்ரவதை முகாம்களே. அதற்கு மாற்றாக, அவர்கள் நால்வரையும் இலங்கைக்கு அனுப்பும் முடிவும் மிகத்தவறானது; கொலைக்களத்திற்கே அனுப்புவதற்கு சமமான ஆபத்தும்கூட! எனவே, நால்வரும் ஈழத்தமிழர்கள் என்பதாலேயே, அவர்களை சிறப்பு முகாமில் அடைப்பதும், இலங்கைக்கு நாடுகடத்த முயல்வதும் உகந்த நடவடிக்கையில்லை.

உண்ணாவிரத போராட்டம்

மேலும், தங்களை சிறப்பு முகாம்களிலிருந்து விடுவிக்கக்கோரி தம்பி இராபர்ட் பயாஸ் மற்றும் அண்ணன் ஜெயக்குமார் ஆகியோர் பட்டினிப் போராட்டத்தை முன்னெடுத்து, அதனால் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நிலைக்கு ஆளாகியுள்ளனர் என்பதும் மிகுந்த கவலையளிக்கிறது. அவர்களின் உடல் நலத்திற்கு எவ்வித தீங்கும் நேராமல் பாதுகாக்க வேண்டியது தமிழ்நாடு அரசின் பொறுப்பும், கடமையுமாகும். அதுமட்டுமின்றி, தமிழ்நாடு அரசு அளித்த நீண்ட சிறை விடுப்பில் அக்கா நளினி, அண்ணன் ஜெயக்குமார், தம்பி ராபர்ட் பயாஸ் உள்ளிட்டோர் வெளிவந்த நாட்களில் சட்டம் ஒழுங்கை மிகவும் மதித்து, மிக அமைதியான, கண்ணியமான வாழ்வினை மேற்கொண்டனர் என்பதையும் அரசு கவனத்தில்கொள்ள வேண்டும். 

விரும்பும் நாடுகளுக்கு அனுப்ப வேண்டும்

ஆகவே, மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்கள், சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள நால்வரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமெனவும், தங்கள் உறவுகளிடம் செல்ல விரும்புகிற பட்சத்தில், அவர்கள் விரும்பும் நாடுகளுக்கு அனுப்பி வைக்க உரிய சட்ட நடவடிக்கை எடுத்திட வேண்டுமெனவும் பணிவுடன் கேட்டுக் கொள்வதாக சீமான் அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்

அரசியலில் இந்த பிரச்சனைகள் எல்லாம் சகஜமப்பா.? தமிழக காங்கிரஸ் தலைவர் மாற்றும் கோரிக்கைக்கு திருநாவுகரசர் பதில்

Follow Us:
Download App:
  • android
  • ios