Asianet News Tamil

சீமான் கொண்டாட்டம்... நாம் தமிழர் தம்பிகள் திண்டாட்டம்..!

 கிராம அளவில் எந்த கட்டமைப்பையும் இந்த பத்தாண்டுகளில் உருவாக்காமல், தேர்தல் காலங்களில் மட்டும் ஊருக்கு ஊர் மேடை போட்டு நரம்பு புடைக்க முழங்கும் சீமானின் அரசியல் பயணம் வெற்றிப் பெற இன்னும் பத்தாண்டுகளுக்கு மேலாகும். 

seeman happy naam tamilar brother sad
Author
Tamil Nadu, First Published May 6, 2021, 11:15 AM IST
  • Facebook
  • Twitter
  • Whatsapp

தேர்தலில் பணநாயகம் தான் வென்றுள்ளது, ஜனநாயகத்திற்கு தோல்வி ஏற்பட்டுள்ளது என்று கடந்த மே 3 ஆம் தேதியில் இருந்து பொங்கிக் கொண்டிருக்கும் சீமான், உண்மையிலேயே பண நாயகத்திற்கு எதிராக போராடக் கூடியவர்தானா? என்று திமுக தரப்பில் கேள்வி முன்வைக்கிறார்கள்.

ஆளும்கட்சியை எதிர்த்து தேர்தல் பரப்புரை மேற்கொள்வதற்குப் பதிலாக, பிரசாரத்திற்கு சென்ற இடங்களில் எல்லாம் திமுக.வைதான் அதிகமாக தாக்கினார். அதிமுக.வும், பாஜக.வும் இரண்டாம் பட்சமாகதான் அவருக்கு இருந்தது. நாம் தமிழர் சார்பில் 234 தொகுதிகளிலும் போட்டியிட்டவர்கள், தெரு தெருவாக நடந்து சென்றேதான் வாக்கு சேகரித்தார்கள். தேர்தல் செலவுக்குக் கூட பணம் இல்லாமல்தான் நாம் தமிழர் கட்சி தேர்தலை சந்தித்ததாக நடிகர் சீமான் ஆவேசமாக பேட்டியளிக்கிறார்.

60 ஆண்டுக்கு மேலான வரலாறு கொண்ட திமுக., ஒவ்வொரு குக்கிராமத்திலும் கட்சி அமைப்பை வலுவாக வைத்துள்ளது. கிராம அளவில் தேர்தல் பணியாற்றிய லட்சக்கணக்கான திமுக நிர்வாகிகள், கட்சித் தலைமையிடம் இருந்து பணம் வரும் என்பதற்காக தேர்தல் பணிகளை ஆற்றவில்லை. தலைமை மீது அதிருப்தி இருந்தாலும், மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் மீது கோபம் இருந்தாலும், 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில், தலைமைச் செயலகம் வரை ஊராட்சி ஒன்றியம் வரை ஒட்டுமொத்தமாக நிர்வாக அமைப்பே சீர்குலைந்து போனதைக் கண்டு கொதித்து போய்தான், ஊழல் கட்டுக்கடங்காமல் போனதால், அதிமுக ஆட்சியை அகற்ற உயிரைக் கொடுத்து வேலைப் பார்த்தார்கள்.

இப்படி கிராம அளவில் எந்த கட்டமைப்பையும் இந்த பத்தாண்டுகளில் உருவாக்காமல், தேர்தல் காலங்களில் மட்டும் ஊருக்கு ஊர் மேடை போட்டு நரம்பு புடைக்க முழங்கும் சீமானின் அரசியல் பயணம் வெற்றிப் பெற இன்னும் பத்தாண்டுகளுக்கு மேலாகும். ஆனால், திமுக தொடங்கப்பட்டு பத்தாண்டு கடந்த பிறகு, அன்றைக்கு ஆட்சியில் இருந்த தலைவர்களின் அன்றாட செயல்பாடுகளுடன் ஒப்பிடும் அளவிற்காக நடிகர் சீமானின் நடவடிக்கைகள் இருக்கின்றன.

வெளிநாடுகளில் இருந்து வரும் கோடிக்கணக்கான ரூபாய் நன்கொடைகளை, கட்சி வளர்ச்சிக்காக செலவிடாமல், தனது சொந்த வளர்ச்சிக்கும், சுகபோக வாழ்விற்கும் பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்று அவரது கட்சி நிர்வாகிகளே குற்றம் சுமத்துகின்றனர். பெயருக்கு ஏற்ப சீமானாகவே அவர் வாழ்கிறார். ஆனால், நிர்வாகிகள், தொண்டர்கள்தான் திண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.

பேரறிஞர் அண்ணா, கலைஞர் மு.கருணாநிதி, நாவலர் நெடுஞ்செழியன், பேராசிரியர் அன்பழகன், மதியழகன், ஈவிகே சம்பத் உள்ளிட்ட தலைவர்கள், இன்றைக்கு செல்வச் செழிப்பில் மிதக்கும் சீமானைப் போல பகட்டாகவா வாழ்ந்தார்கள். வெள்ளை வேட்டி, சட்டை என சாதாரண உடை உடுத்திக் கொண்டுதான், சீமானை விட அறிவார்ந்த முறையில் தமிழக அரசியலை, இந்திய அரசியலை, உலக அரசியலைப் பேசினார்கள்.

திமுக.வின் அடித்தளம் பெருந்தலைவர்களின் உதிரத்தால், வலுவாக கட்டமைக்கப்பட்டுள்ளது. தலைவர்களுக்குள் ஜனநாயக முறையிலான கருத்துப் பரிமாற்றங்கள் இருந்தது. அண்ணா மறைவுக்குப் பிறகு கலைஞர் மு.கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சிக்கு எதிராக விமர்சனங்கள் அதிகமாக எழுந்தன. அதனை மறுப்பதற்கில்லை.

ஆனால், மாநில சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி என்ற கொள்கை முழக்கத்தை முன்வைத்து, தமிழகத்தின் நன்மைக்காக கடுமையாக உழைத்தவர்கள் திமுக தலைவர்கள். வட மாநிலங்களை விட தமிழகம் இன்றைக்கு பல்வேறு துறைகளில் முன்னணியில் இருக்கிறது என்றால், அதற்கு திமுக ஆட்சிக்காலத்தில் போடப்பட்ட வலுவான கட்டமைப்பும், நிறைவேற்றப்பட்ட வளர்ச்சித் திட்டங்களும்தான் முக்கிய காரணம்.

கடந்த பத்தாண்டு காலம் ஆட்சியில் இல்லாத திமுக மீது சீமானுக்கு மிதமிஞ்சிய கோபம் இருக்கிறது. ஆனால், பத்தாண்டு காலம், அது மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஆட்சியாக இருந்தாலும் சரி, கடந்த நான்காண்டு கால எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சியாக இருந்தாலும் சரி, தலைவிரித்தாடிய ஊழல், மத்திய பாஜக அரசுக்கு காவடி தூக்கியது போன்ற தமிழகத்திற்கு தீங்கு இழைத்த எந்தவொரு செயலும் சீமானை எரிச்சல் கொள்ள செய்யவில்லை.

பிரதமர் மோடியை சேடிஸ்ட் என்று வர்ணித்தார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.. அதற்கு மேலாக ஒருபடிமேலே சென்று பிரதமர் மோடி, திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பே இருக்காது என்று வசைபாடினார். இப்படி சட்டமன்றத் தேர்தலின்போது எதிரும் புதிருமாக இருந்தபோதும், தேர்தல் முடிவுகள் முழுமையாக வெளியாவதற்கு முன்பே பிரதமர் மோடி, பண்பட்ட அரசியல்வாதி என்பதை நிருபிக்கும் வகையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்துவிட்டார்.

ஆனால், சீமானுக்கு ஏதோ தன்மானம் தடுத்து இருக்கும் போல.  அமர யோசித்து இன்றைக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார். உடனடியாக வாழ்த்து சொல்வதற்கு அல்லது நேரில் சென்று சந்திப்பதற்கு வி.கே. சசிகலாவைவிட, மதிப்பு மிக்கவரா திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்?

Follow Us:
Download App:
  • android
  • ios