எம்.பி ஆக்குவதாக கூறி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு டி.டி.வி தினகரன் தரப்பினர் தூது அனுப்பி வருகின்றனர். நாடாளுமன்ற தேர்தலை பொறுத்தவரை கூட்டணி பலத்தோடு சந்திக்க வேண்டும் என்பதில் தினகரன் உறுதியாக உள்ளார். துவக்கத்தில் தினகரனோடு கூட்டணி பேச காங்கிரஸ், பா.ம.க., உள்ளிட்ட பெரிய கட்சிகள் கூட ஆர்வம் காட்டின. ஆனால் தினகரன் கூட்டணியின் தலைவன் தான் தான் என்கிற ரீதியில் பேச ஆரம்பித்த காரணத்தினால் பா.ம.க பின்வாங்கியது. இதே போல் காங்கிரஸ் கட்சியும் கூட தி.மு.கவுடன் உறவு சரிவரவில்லை என்றால் தினகரன் கட்சிப் பக்கம் போகலாம் என்கிற முடிவுக்கு வந்துவிட்டது. 

கமல் கட்சியும் கூட தினகரனோடு கூட்டணி வைக்க தற்போதைக்கு எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை. இதே நிலை நீடித்தால் கூட்டணி கனவு பகல் கனவாகிவிடும் என்கிற முடிவுக்கு தினகரன் வந்துள்ளார். எனவே தனது கட்சியுடன் கூட்டணி வைக்க பலரும் ஆர்வம் காட்டுவது போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்த தினகரன் முயன்று வருகிறார். அந்த வகையில் சீமானை கூட்டணிக்குள் இழுத்துப்போடும் நடவடிக்கை துவங்கியுள்ளதாக கூறப்படுகிறது. 

சீமானுக்கு ஒரு தொகுதியை கொடுத்துவிட்டு அவரை வைத்து தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்து கொள்ளலாம் என்பது தான் தினகரனின் வியூகமாக உள்ளது. ஏற்கனவே 2009 மற்றும் 2014 தேர்தலில் அ.தி.மு.க.விற்கு ஆதரவாக சீமான் பிரச்சாரம் செய்துள்ளார். அந்த வகையில் தற்போது பிரச்சாரத்திற்கு என்று அழைக்காமல் கூட்டணிக்கு என்று அழைத்து அவர் கேட்கும் ஒரு தொகுதியை கொடுத்துவிட்டு மாநிலம் முழுவதும் பிரச்சாரம் செய்ய வைத்துவிடலாம் என்று தினகரன் தரப்பு நினைக்கிறது. 

மேலும் சீமான் போட்டியிடும் பட்சத்தில் செலவுத் தொகையை கூட முழுமையாக ஏற்றுக் கொள்வதாக தினகரன் தரப்பு ஆசையை தூண்டுவதாகவும் சொல்லப்படுகிறது. ஏற்கனவே எம்.எல்.ஏ கனவில் இருந்த சீமான் கடந்த தேர்தலில் டெபாசிட் கூட வாங்கி முடியவில்லை. எனவே இந்த முறை நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடலாமா? வேண்டாமா? என்று யோசித்து வருகிறார்.

ஆனால் திடீர் திருப்பமாக தினகரன் தரப்பில் இருந்து வந்துள்ள அழைப்பு சீமான் தரப்புக்கு இன்ப அதிர்ச்சியாக உள்ளதாக கூறப்படுகிறது. ஒரு தொகுதி என்பதை இரண்டு தொகுதியாக கேட்டு பேரம் பேசலாம் என்று மூத்த நிர்வாகிகள் சீமானுக்கு ஆலோசனை வழங்குவதாக சொல்லப்படுகிறது.