யாரும் எதிர்பாராத வகையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளார் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான்.

பொதுவாக எதிர்கட்சியில் உள்ள தலைவர்கள் ஆளும் கட்சியை சேர்ந்த தலைவர்களுக்கு எதிராக களம் இறங்குவது தான் நாம் பார்த்த அரசியல். உதாரணமாக டெல்லியை எடுத்துக் கொண்டால் அங்கு முதலமைச்சராக இருந்த ஷீலா தீட்சித்திற்கு எதிராக அரவிந்த் கெஜ்ரிவால் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதாவது ஆட்சியை பிடிக்க வேண்டும் என்கிற கனவில் உள்ள ஒரு கட்சி ஆளும் கட்சியாக உள்ள ஒரு கட்சியின் தலைவருக்கு எதிராகவே தங்கள் தலைவரை நிறுத்தும். ஆனால் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமானோ, மிகவும் விநோதமாக மு.க.ஸ்டாலினுக்கு எதிராக தேர்தல் களம் காண உள்ளார்.

கடந்த 2011ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலின் போதும் அப்போது முதலமைச்சராக இருந்த கருணாநிதிக்கு எதிராக திருவாரூரில் போட்டியிட சீமான் ஆர்வம் காட்டினார். ஜெயலலிதாவும் கூட சீமான் திருவாரூரில் நின்றால் அவருக்கு இரட்டை இலை சின்னத்தில் நிற்கும் வாய்ப்பை தருவதற்கு தயாராக இருந்தார். ஆனால் கடைசி நேரத்தில் இந்த முடிவில் இருந்து சீமான் பின்வாங்கினார். பிறகு அதிமுகவிற்காக தமிழகம் முழுவதும் சீமான் பிரச்சாரம் செய்தார். இந்த நிலையில் இந்த முறை கொளத்தூரில் போட்டியிட உள்ளதாக சீமான் கூறியுள்ளார்.

சீமான் கட்சி ஆரம்பித்தது முதல் திமுக மற்றும் அதிமுக என இரண்டு கட்சிகளையுமே கடுமையாக விமர்சித்து வருகிறார். ஆனால் தேர்தல் என்று வந்தால் அதிமுகவிற்கு ஆதரவான நிலைப்பாட்டையே எடுத்துள்ளார். 2011 தேர்தலில் அதிமுகவிற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார், 2014 நாடாளுமன்ற தேர்தலிலும் இதே போன்ற நிலைப்பாட்டை எடுத்தார். ஆனால் 2016 தேர்தலில் நாம் தமிழர் தனித்து போட்டியிட்டது. கடலூர் தொகுதியில் போட்டியிட்ட சீமான் படுதோல்வி அடைந்தார். இந்த முறையும் அவர் தேர்தலில் நிற்க உள்ளார்.

அப்படித்தான் கொளத்தூரை தேர்வு செய்துள்ளார் சீமான். இந்த முடிவு நிச்சயம் அதிமுகவிற்கு சாதகமானதாகவே இருக்கும் என்கிறார்கள். கொளத்தூரில் ஸ்டாலினை எதிர்த்து சீமான் களம் இறங்கினால் அங்கு அதிமுக வேட்பாளரை நிறுத்தாமல் ஒதுங்க வாய்ப்பு உள்ளது. அல்லது சீமானை ஆதரிக்கவும் வாய்ப்பு இருக்கிறது. இப்படி ஒரு சூழல் உருவானால் நிச்சயம் ஸ்டாலினுக்கு சீமான் கடும் போட்டியாளராக திகழ்வார். எனவே ஸ்டாலின் தனது கொளத்தூர் தொகுதியில் அதிக கவனம் செலுத்த நேரிடும்.

மற்ற பகுதிகளின் பிரச்சாரம், தேர்தல் வியூகம் போன்றவற்றிலும் ஸ்டாலின் தீவிரம் காட்ட வேண்டும். எனவே ஸ்டாலினுக்கு நெருக்கடியை அதிகரிக்கும் வகையிலேயே கொளத்தூரில் போட்டியி சீமான் முடிவெடுத்துள்ளதாக கூறுகிறார்கள். அதிமுகவிற்கு சாதகமான இந்த முடிவால் நாம் தமிழர் கட்சியை தற்போது அந்த கட்சியின் பி டீம் என்று விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. ஆனால் சீமான் இதைப்பற்றி எல்லாம் கவலைப்படமாட்டார் என்கிறார்கள்.

சீமான் எப்போதுமே திமுக எதிர்ப்பு மனநிலை கொண்டவர். கடந்த காலங்களில் திமுக நடத்திய அனைத்து கட்சி கூட்டங்களில் வேல்முருகனை கூட அழைத்துள்ளார்கள் ஆனால் சீமானை அழைத்தது இல்லை. இதனால் தான் திமுகவை சீமான் அதிமுகவை விட அதிகம் விமர்சிக்கிறார். எனவே கொளத்தூரில் அறிவித்தபடி சீமான் போட்டியிட்டால் அங்கு பரபரப்பிற்கு பஞ்சம் இருக்காது.