குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக முஸ்லிம்கள் 8 நாட்களாக தொடர் போராட்டம் நடத்திவருகிறார்கள். இங்கு ரஜினி வரவில்லை. ஏனென்றால், நீங்கள் அவரிடம் வட்டிக்கு பணம் வாங்கவில்லை. வட்டிக்கு வாங்கியவர்களை மட்டும்தான் ரஜினிக்கு தெரியும் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.


குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக மதுரையில் இஸ்லாமியர்கள் கடந்த ஒரு வாரமாக தொடர் போராட்டம் நடத்திவருகிறது. இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்றார். அந்தக் கூட்டத்தில் சீமான் பேசுகையில், “குடியுரிமைத் திருத்த சட்டம் என்பது முஸ்லீம்களுக்கு மட்டுமல்ல, ஒட்டு மொத்த இந்தியர்களுக்குமே எதிரானது. இந்த மத்திய அரசு பொதுமக்களை பதட்டத்துடனேயே வைத்திருக்கிறது. இதைப் பயன்படுத்தி பொதுநிறுவனங்களைத் தனியார்மயமாக்கி வருகிறது மத்திய அரசு. மதங்களைப் பார்த்து மனிதர்களைப் பிரிப்பது மிகவும் கொடுமையான வி‌ஷயம்.
இந்தியா என்ற நாட்டை உருவாக்கியதே ஆங்கிலேயர்கள்தான். அவர்கள்தான் இந்தியா என பெயர் வைத்தார்கள். சுதந்திரப் போராட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்துக்கு எந்த ஒரு பங்குமே இல்லை. அண்டை நாடுகளான பாகிஸ்தான், பங்காளதேஷை பகை நாடுகளாக இந்தியா கருதக் கூடாது. முஸ்லீம்களுக்கு பாதிப்பு என்றால் முதலில் குரல் கொடுப்பது நான்தான் என்று ரஜினிகாந்த் கூறினார். ஆனால், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக முஸ்லிம்கள் 8 நாட்களாக தொடர் போராட்டம் நடத்திவருகிறார்கள். இங்கு ரஜினி வரவில்லை. ஏனென்றால், நீங்கள் அவரிடம் வட்டிக்கு பணம் வாங்கவில்லை. வட்டிக்கு வாங்கியவர்களை மட்டும்தான் ரஜினிக்கு தெரியும். குடியுரிமை சட்ட திருத்தம் குறித்து அவருக்கு ஒன்னும் தெரியாது.” என்று சீமான் தெரிவித்தார்.