ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதை நாங்கள் எதிர்க்கிறோம். ஆனால், விஜய் அரசியலுக்கு வருவதை ஆதரிக்கிறோம் என ரஜினி, விஜய் அரசியல் வருகை குறித்து சீமான் கருத்து தெரிவித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக அறிவித்துள்ள நிலையில் சீமான் அவருக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்துவருகிறார். சீமானின் முதல் குற்றச்சாட்டே அவர் வேறு மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பது மட்டும்தான். ஆனால், நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதாக இதுவரை எதுவுமே சொல்லாத நிலையில், அவரின் அரசியல் வருகையை வரவேற்கிறார். 

இதுகுறித்து நேற்று செய்தியாளர்களை சந்தித்த சீமான் கூறுகையில், ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதை நாங்க கடுமையாக எதிர்ப்போம், ஆனால், விஜய் அரசியலுக்கு வருவதை ஆதரிப்போம். ஏனென்றால் ரஜினிக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமுமில்லை. விஜய்க்கும் எங்களுக்கும் ரத்த உறவு இருக்கிறது. அவன் என் இனத்தை சார்ந்தவன். அதனால், விஜய் அரசியலுக்கு வருவதை நான் வரவேற்கிறேன். தனக்கு இருக்கும் செல்வாக்கை பயன்படுத்தி மக்களுக்கு நல்லது செய்ய அவர் அரசியலுக்கு வரலாம். அப்படி வந்து மக்கள் நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிக்காமல் விஜய்க்கு வாக்களித்தால் வாழ்த்துவேன். எங்களுக்கு வாக்களித்தால் நன்றி சொல்வேன். இதுதான் எங்களுடைய நிலைப்பாடு என்று கருத்து தெரிவித்தார்.

மேலும் பொருளாதார வீழ்ச்சி குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், முதலாளிகளின் கடன்களை தள்ளுபடி செய்ததுதான் பொருளாதார வீழ்ச்சிக்கு காரணம். விவசாயிகளைப் பற்றி கவலைப்படாத நாடு எப்போவுமே முன்னேறாது. விவசாயத்தை கைவிட்டு தொழில் வளர்ச்சி பற்றி பேசுவது ஆபத்தில் தான் முடியும், பொருளாதார வீழ்ச்சி தான் மத்திய அரசின் இந்த 100 நாள் சாதனையாக உள்ளது என கடுமையாக விமர்சித்துள்ளார்.