ஆட்சி அதிகார திமிரில் திமுகவினர் வன்முறை..! கை கட்டி வேடிக்கை பார்க்கும் தமிழக அரசு- சீறும் சீமான்
கோவையில் தனியார் தொலைக்காட்சி செய்தியாளர்கள் மீது தாக்குதல் நடத்திய திமுகவினரை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைபெபாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.
தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் மீது தாக்குதல்
கல்குவாரியில் அதிக அளவு கனிமங்கள் வெட்டி எடுக்கப்பட்டு கேரளாவிற்கு கடத்தப்படுவதாக வந்த புகாரையடுத்து அந்த பகுதிக்கு சென்ற தொலைக்காட்சி செய்தியாளர்கள் மீது தாக்குதல் நடத்தியதற்கு சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவை மாவட்டம், கிணத்துக்கடவு தொகுதிக்குட்பட்ட எண்.10 முத்தூர் கோவை பகுதியில், முறைகேடாக இயங்கும் கல்குவாரிகளில் கனிம வளங்கள் கேரளாவுக்கு அதிகளவு கடத்தப்படுவது குறித்து, செய்தி சேகரிக்கச் சென்ற தொலைக்காட்சி செய்தியாளர் மற்றும் ஒளிப்பதிவாளரை திமுகவைச் சேர்ந்த கல்குவாரி உரிமையாளர்கள் மிரட்டி, ஒளிப்படக் கருவிகளைச் சேதப்படுத்தி, அவர்கள் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தியுள்ளது அதிர்ச்சியளிக்கிறது.
அதிமுக-பாஜக கூட்டணி தொடர்கிறதா? எடப்பாடி பழனிசாமி சொன்ன ஒற்றை வார்த்தை..!
இயற்கை வளங்கள் பாதிப்பு
ஆட்சி அதிகாரத்தில் இருக்கிறோம் என்ற திமிரில் திமுகவினர் செய்யும் இத்தகைய வன்முறை செயல்களை ஆளும் திமுக அரசு கைகட்டி வேடிக்கை பார்ப்பது வன்மையான கண்டனத்திற்குரியது. முறைகேடாக இயங்கும் கல்குவாரிகளில் அரசு நிர்ணயித்த அளவை விட அதிகளவு கனிமங்கள் வெட்டி எடுக்கப்படுவதோடு, பாறைகள் வெடி வைத்துத் தகர்க்கும்போது உருவாகும் மண் துகள்கள் நிலங்களில் படிவதால் வேளாண்மை செய்ய முடியாமல் விவசாயிகளும் பாதிக்கப்படுகின்றனர். மேலும், அதிகளவு பாரம் ஏற்றிச் செல்லும் பார உந்துகளால் சாலைகளும் அடிக்கடி சேதமடைவதோடு, அது குறித்துப் புகாரளிக்கும் பொதுமக்களும் அச்சுறுத்தலுக்கு ஆளாகின்றனர்.
சிறையில் அடைக்க வேண்டும்
தொலைக்காட்சி செய்தியாளர்கள் மீது தாக்குதல் நடத்திய திமுகவினரை உடனடியாகக் கைது செய்து சிறை யிலடைக்க வேண்டுமெனவும், தொடர்ச்சியாக ஊடகவியலாளர்கள் மீது திமுகவினர் நடத்தும் தாக்குதல்களை இனியும் தொடராது தடுத்திட வேண்டுமெனவும் வலியுறுத்துகிறேன். மேலும், தமிழ்நாட்டின் கனிம வளங்கள் கேரளாவுக்குக் கடத்தப்படுவதை திமுக அரசு உடனடியாகத் தடுத்து நிறுத்திட வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துவதாக சீமான் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதையும் படியுங்கள்
திமுக கட்சிக்காரர்களைக் கட்டுப்படுத்தி வைக்க வேண்டும்... மு.க.ஸ்டாலினுக்கு அண்ணாமலை வலியுறுத்தல்!!