ஜெயலலிதாவை பற்றிப் பேசும்போது பூங்குன்றன் எனும் கேரக்டரைப் பற்றி பேசாமல் இருக்க முடியாது. டெல்டா மாவட்டத்தை சேர்ந்த இந்த பூங்குன்றன், புலவர் சங்கரலிங்கத்தின் மகன். ஜெயலலிதாவின் ஆஸ்தான உதவியாளராக பல காலங்கள் பணிபுரிந்தவர் இவர். ஜெயலலிதாவின் மேடைகளில் வலது ஓரத்தில் சாதாரண ஒரு சட்டை, பேண்ட்டில் கையில் ஒரு ஃபைல் பேக் உடன் நிற்பார் பூங்குன்றன். 

ஜெயலலிதாவின் கண்ணசைவுக்கே அர்த்தத்தை அறிந்து வைத்து நொடியில் தகவல்களை எடுத்து தருவது, சம்பந்தப்பட்டவர்களுக்கு அழைப்பு விடுத்து ஜெ.,வை சந்திக்க வைப்பது, ஜெ.,வின் அப்பாயின் ட்மெண்டுகளை மேனேஜ் செய்வது என்று பூங்குன்றனின் பணி பெரிது. சில வேளைகளில் அதிகாலையில் எழ ஜெ., விரும்பினால், துல்லியமான நேரத்திற்கு அலாரம் வைத்து அவரை துயில் எழுப்பி விடுவது இந்த பூங்குன்றன் தான். போயஸ் தோட்டத்து லேண்ட் லைன் நம்பரிலிருந்து ஜெயலலிதாவின் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்களுக்கு போன் வந்தால் அவர்களுக்கு உள்ளூர உதறல் வரும். அட்டெண்ட் செய்தால், மறுமுனையில் பூங்குன்றன் ‘ஒண்ணுமில்ல!’ என்று ஆரம்பித்தால் தான் பதவிக்கு பிரச்னையில்லை! என்று உயிர் வரும். ஒருவேளை பூங்குன்றன் ‘சார் எங்கே இருக்கீங்க?’ என்று துவங்கினால் பஞ்சாயத்து உறுதி. 

இப்பேர்ப்பட்ட பூங்குன்றன், ஜெ., மறைவுக்குப் பின் சில காலம் அமைதியாக இருந்தார். பின் ஆறுமுகசாமி கமிஷன் முன் ஆஜராக வந்தபோது ‘விரைவில் என் மெளனம் கலைப்பேன்.’ என்று பூடகம் போட்டார். அந்த சமயங்களில் சசி, தினகரன் தரப்புக்கு ஆதரவாளி போல் இருந்தார். ஆனால் சமீப காலமாக எடப்பாடியாரின் சைடுக்கு மாறிவிட்டார் குன்றன். 

இப்பேர்ப்பட்ட பூங்குன்றன் இப்போது என்ன வேலை செய்கிறார்? எப்படி வருமானம்? எப்படி குடும்ப செலவுகளை ஓட்டுகிறார்!? என்பது புரியவில்லை. ஆனால் அடிக்கடி தமிழகமெங்கும் கோயில்கள், குளங்கள் என்று மனிதர் சுற்றிக் கொண்டே இருக்கிறார். போகுமிடங்களில் தான் பார்க்கும், சந்திக்கும் விஷயங்களை போட்டோ எடுத்து முகநூலில் போட்டுக் கொண்டேஇருப்பது பூங்குன்றனின் பொழுதுபோக்காகி இருக்கிறது. 

அத்தோடு பூங்குன்றன் நிறுத்தியிருந்தால் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. ஆனால், இப்பொதெல்லாம் சமையல் குறிப்பெல்லாம் போடத் துவங்கிவிட்டார் குன்றன். பிரண்டை துவையல் செய்வது எப்படி? பாகற்காய் வற்றல் போடுவது எப்படி?...என்றெல்லாம் பூங்குன்றன் குறிப்பு எழுத துவங்கிவிட்டார். “வீட்டில் வளர்ந்த பிரண்டையை எடுத்து துவையல் செய்ய மனம் விரும்பியது. செய்முறையை எந்தாயிடம் கேட்டேன். உடனே பிரண்டையை எடுத்தேன், உரித்தேன், துவையல் செய்தேன். அடடா! அட்டகாசம் நல்ல சுவை...” என்று முன்னோட்டம் கொடுத்து, அதை செய்யும் முறை பற்றி விளக்கவும் செய்திருக்கிறார். 

இதற்கு அ.தி.மு.க. முக்கியஸ்தர்கள் சிலர் உள்ளிட்ட பலர் லைக்ஸ்,  கமெண்ட்ஸ் எல்லாம் போட்டிருக்கின்றனர் பல நூற்றுக்கணக்கில். ‘தெய்வமே கலக்குறீங்க போங்க! அம்மாவின் நிழலே அருமையான பதிவு! தெய்வத்தாயின் உதவியாளரே நீங்கள் பல் துறை வித்தகர்’ என்றெல்லாம் பாராட்டித்  தள்ளியுள்ளனர். 

ஹும் எப்படி இருந்த பூங்குன்றன் இப்படியாகிட்டாரே! என்று முகநூலுக்கு வெளியில் அவர்க்ள் புலம்பிடவும் தவறவில்லை. 
சசி வெளியே வந்த பின் முகநூலில் பூங்குன்றன் என்ன எழுதுகிறார்!? என்று பார்ப்போம்!