’அதிமுகவில் இணைப்பதற்காக சமரசப் பேச்சு நடந்துவருவதாக மதுரை ஆதீனம் சொல்லியிருக்கும் கருத்து அடிப்படை ஆதாரமற்றது’ என அமமுக துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் மறுத்துள்ளார்.  

மக்களவை தேர்தலுக்கு முன்பே அதிமுக - அமமுக இணையும் எனவும் அதற்காக பாஜக நடவடிக்கை எடுத்து வருதவாகவும் கூறப்பட்டது. ஆனால், டி.டி.வி.தினகரன், மற்றும் சசிகலா குடும்பத்தினரை தவிர மற்றவர்களை சேர்த்துக்கொள்ள மாட்டோம் என எடப்பாடி பழனிசாமியும், ஓ.பிஎஸ் ஆகியோர் தெரிவித்தனர். ஆனால், டி.டி.வி.தினகரன் தரப்பினரோ அதிமுகவில் ஓ.பிஎஸ்.-எடப்பாடியை தவிர மற்றவர்கள் எங்கள் அணிக்கு வரலாம் எனத் தெரிவித்தார். 
தேர்தல் நடைபெற உள்ள இந்த நிலையில், மூன்றாவது அணியாக கருதப்படும் டி.டி.வி.தினகரன் தனித்து களமிறங்குகிறார். இதனால் அதிமுக வாக்குகள் பிரியும் நிலை உருவாகி இருக்கிறது. இந்நிலையில் இதுகுறித்து மதுரை ஆதீனம் கூறுகையில், ‘’அதிமுக- அமமுகவும் விரைவில் இணையும். தினகரன் நிச்சயம் அதிமுகவில் இணைவார். அவருடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது’’ என அவர் தெரிவித்தார். தேர்தல் நெருங்கும் வேளையில் அவர் இப்படித் தெரிவித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. டி.டி.வி.தினகரன் விரைவில் அதிமுகவில் இணைவார் என மதுரை ஆதீனம் பரபரப்பு தகவலை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து விளக்கமளித்துள்ள டி.டி.வி.தினகரன், ‘’அ.தி.மு.க.வில் இணைப்பதற்காக தினகரனுடன், சமரசப் பேச்சு நடந்துவருவதாக மதுரை ஆதீனம் சொல்லியிருக்கும் கருத்து அடிப்படை ஆதாரமற்றது. அது உண்மையும் அல்ல.. அதற்கு அவசியமும் இல்லை’’ என தெரிவித்துள்ளார்.