மெரினா கடலில் கருணாநிதிக்கு நினைவுச் சின்னம் வைத்தால் உடைப்பேன்.! சீமான் பேச்சால் பரபரப்பு
கருணாநிதிக்கு பேனா நினைவு சின்னம் அண்ணா அறிவாலயத்தில் வைத்துக் கொள்ள வேண்டும் அதையும் மீறி கடலில் வைத்தால் நான் ஆட்சிக்கு வந்தவுடன் அதை இடிப்பேன் என சீமான் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.

கடலில் பேனா நினைவுச்சின்னம்
கலைஞர் பேனா நினைவு சின்னம் கருத்து கேட்பு கூட்டம் கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சமூக ஆர்வலர்கள், சுற்று சூழல் ஆர்வலர்கள், மீனவர்கள் மற்றும் அரசியல் கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் முன்னதாக பேசிய பாஜக, ஆம் ஆத்மி, சட்டப்பஞ்சாயத்து உள்ளிட்டவர்கள் கடலில் நினைவு சின்னம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்தனர். அதே நேரத்தில் ஒரு சில மீனவர்கள் நினைவு சின்னம் அமைக்க ஆதரவு தெரிவித்து இருந்தனர்.
நினைவுச்சின்னத்தை இடிப்பேன்
இதனையடுத்து இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், பேனா நினைவு சின்னம் கடலில் அமைப்பதால் பவளப்பாறைகள் பாதிக்கப்படும் அதனால் அங்கு அமைக்க கூடாது. வேண்டுமானால் அண்ணா அறிவாலயத்தில் வைத்துக் கொள்ள வேண்டும் அதையும் மீறி வைத்தால் நான் ஆட்சிக்கு வந்தவுடன் அதை இடிப்பேன் என்று பேசினார். இதன் காரணமாக கலைவாணர் அரங்கத்தில் கூச்சலும் குழப்பமும் ஏற்பட்டது. சீமானுக்கு எதிராக திமுகவினர் முழக்கம் எழுப்பியதால் பதற்றம் ஏற்பட்டது.
சுற்றுச்சூழல் பாதிக்கும்
இதனையடுத்து வெளியே வந்து செய்தியாளர்களிடம் பேசிய சீமான், கருணாநிதிக்கு பேனா நினைவு சின்னம் அமைப்பதை எதிர்க்கவில்லை. கடலுக்கு நடுவே அமைக்க தான் எதிர்ப்பு தெரிவிப்பதாக கூறினார். மக்கள் நினைவிடத்தை பார்வையிட செல்லும் போது பிளாஸ்டிக் பொருட்களை கடலில் வீச வாய்ப்புள்ளது. இது சுற்றுசூழல் பாதிப்பு ஏற்படும் என கூறினார். பள்ளிக்கூடத்தை சீரமைக்க காசு இல்லை, முதியவர்களுக்கு உதவித்தொகை கொடுக்க காசில்லை, பேனா சின்னம் அமைக்க மட்டும் காசு எங்கு இருந்து வந்தது என கேள்வி எழுப்பினார்.
அண்ணா அறிவாலத்தில் வைக்கட்டும்
அண்ணா அறிவாலயம் அல்லது நினைவிடத்தில் வைக்கலாம் ஆனால் கடலுக்குள் மட்டும் தான் வைப்பேன் என சொல்வது தவறு. கடலில் பேனா சின்னம் திட்டத்தை நிறுத்தும் வரை எதிர்ப்போம். மீறி வைத்தால் ஒரு நாள் அது எங்கு இருக்கும் என நீங்கள் பார்ப்பீர்கள். கருத்து கேட்பு கூட்டத்தில் கத்தி கூச்சல் போடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தவர், இதற்கு இந்த கருத்து கேட்பு கூட்டத்தை நடத்தாமலே இருந்திருக்கலாம் என கூறினார். கடற்கரையில் விடுதலை போராட்ட வீரர்களுக்கு இல்லாத அங்கீகாரம் அரசியல் தலைவர்களுக்கு கொடுக்கப்படுகிறது கண்டனத்துக்குரியது. கருத்து கேட்பு கூட்டத்துகு நான் வருகிறேன் என சொன்னதும் திமுகவினர் தங்கள் ஆதரவாளர்களை குவித்து விட்டதாகவும் குற்றம்சாட்டினார்.
இதையும் படியுங்கள்