ஹலால் உணவுகளுக்கு தடை விதித்து இஸ்லாமியர்களின் உணவுரிமையில் தலையிடுவதா? சீமான் ஆவேசம்
உத்திரப்பிரதேச மாநிலத்தில், ஹலால் செய்யப்பட்ட உணவுகளுக்குத் தடைவிதித்திருப்பது இசுலாமியர்களின் உணவுரிமையில் தலையிடும் கொடுஞ்செயல் என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், “உத்திரப்பிரதேசத்தில் ஹலால் செய்யப்பட்ட உணவுப்பொருட்களுக்கு தடைவிதித்துள்ள அம்மாநிலத்தை ஆளும் பாஜக அரசின் நடவடிக்கை பெரும் அதிர்ச்சியளிக்கிறது. இசுலாமிய வெறுப்புப்பரப்புரையைத் தொடர்ச்சியாகக் கட்டவிழ்த்துவிட்டு, மதஒதுக்கலைச் செய்து வரும் பாஜக அரசின் மதவாதச்செயல்பாடுகளது நீட்சியாக, இசுலாமியர்கள் இறைச்சி உண்ணுவதற்காகச் செய்யப்படும் ஹலால் முறைக்குத் தடைவிதித்துள்ளது கடும் கண்டனத்திற்குரியது.
இந்திய நாட்டின் அடிநாதமான மதச்சார்பின்மையை முற்றாகக் குலைத்து, மதத்தால் நாட்டைத் துண்டாட முற்படும் பாஜக அரசின் சூழ்ச்சிச்செயலே இதுபோன்ற வகுப்புவாத நடவடிக்கைகளாகும். ஹலால் செய்யப்பட்ட இறைச்சி வகைகளால் உடலுக்கு எவ்விதத் தீங்குமில்லை என்பதோடு, அது சுகாதாரமானதும்கூட என்பதும் மருத்துவரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இருந்தபோதிலும், அம்முறைக்கு விதிக்கப்பட்டிருக்கும் தடையானது, இசுலாமிய மக்களின் உணவுரிமையில் தலையிடும் கொடுஞ்செயலாகும்.
அரியலூரில் சிறுமியின் புகைப்படத்தை மார்பிங் செய்து ஹார்டின் விட்ட வாலிபர் போக்சோவில் கைது
தாத்ரி எனும் பகுதியில் முகமது இக்லாக் எனும் முதியவரை மாட்டிறைச்சி வைத்திருந்ததாகக் கூறி, அடித்தே கொலைசெய்த கொடூரம் அரங்கேற்றப்பட்ட உத்திரப்பிரதேச மாநிலத்தில், ஹலால் உணவுகளுக்கு தடைவிதிக்கப்பட்டிருப்பது அப்பட்டமான மதவெறியையே காட்டுகிறது. இசுலாமிய மதத்தை அரச மதமாக ஏற்று ஆட்சி நடத்தும் இசுலாமிய நாடுகளில்கூட பன்றி இறைச்சி உண்ணுவதற்கு எவ்விதத் தடையுமில்லை. அந்நாடுகளே மாற்று மதத்தவர்களின் நம்பிக்கைகளுக்கும், உணர்வுகளுக்கும் முழுமையாக மதிப்பளித்து நடக்கிறபோது, சனநாயக நாடு எனக் கூறப்படும் இந்தியப் பெருநாட்டில் இசுலாமிய மக்களின் உணவுப்பழக்க வழக்கத்திற்கு எதிரான இத்தகையக் கெடுபிடிகளும், தடைகளும் உலகரங்கில் இந்தியாவை வெட்கித் தலைகுனியச் செய்யும் இழிசெயலாகும். இசுலாமிய நாடுகளில் இதேபோல சைவ உணவுகளுக்கு கெடுபிடிகள் விதித்தால் என்னாகும்? என்பதை நாட்டையாளும் ஆட்சியாளர்கள் கொஞ்சமேனும் சிந்திக்க முன்வர வேண்டும்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
இந்திய நாட்டின் குடிமக்கள் யாவரும் தாங்கள் விரும்பிய மதத்தைத் தழுவிக் கொள்ளவும், அதன் கோட்பாடுகளைப் பின்பற்றவும் முழு உரிமைகள் உடையவராவர். இதனை இந்திய நாட்டின் அரசியலமைப்புச் சாசனம் அடிப்படை உரிமைகளாக வரையறுக்கிறது. சாதி, மதம் என எதன்பொருட்டும் எவ்விதப் பாகுபாடும் காட்டக்கூடாது என்றும் அறிவுறுத்துகிறது. ஆனால், பாஜக அரசு ஒன்றியத்தில் பொறுப்பேற்றது முதல் இசுலாமிய மக்களுக்கெதிரான மதவெறுப்புப் பரப்புரைகளும், கொடும் அவதூறுகளும், மதவெறிச்செயல்பாடுகளும் பன்மடங்கு அதிகரித்துள்ளன. அதனை ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசே ஆதரித்துத் துணைநிற்பது வெட்கக்கேடானது. இந்திய நாட்டின் விடுதலைக்காகப் பெரும் பங்காற்றி, இரத்தம் சிந்தி, உயிரை விலையாகக் கொடுத்து, அளப்பெரும் ஈகங்களைச் செய்திட்ட இசுலாமிய மக்களை இரண்டாந்தர குடிமக்களாக நடத்த முற்படும் பாஜக அரசின் தொடர் நடவடிக்கைகள் யாவும் இந்நாட்டின் ஒற்றுமையைச் சீர்குலைக்கும் படுபாதகச்செயலாகும். அதனை ஒருபோதும் ஏற்கவோ, அனுமதிக்கவோ முடியாது.
ஆகவே, இசுலாமிய மக்கள் இறைச்சி உண்ணுவதற்காகச் செய்யப்படும் ஹலால் முறை மீதான தடையை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டுமென உத்திரப்பிரதேசத்தை ஆளும் பாஜக அரசை வலியுறுத்துகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.