இந்து முன்னனி நிர்வாகி வீட்டில் துப்பாக்கிகள் பறிமுதல்.!சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க சதித் திட்டமா.?-SDPI கேள்வி
கோவை இந்து முன்னணி நிர்வாகியிடமிருந்து துப்பாக்கிகள், தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கை சீர்குலைக்க சதித் திட்டமா? என தீவிர விசாரணை நடத்த வேண்டும் என எஸ்.டி.பி.ஐ வலியுறுத்தியுள்ளது.
இந்து முன்னனி நிர்வாகி - துப்பாக்கி பறிமுதல்
கோவையில் இந்து முன்னனி நிர்வாகி வீட்டில் இருந்து துப்பாக்கிகள் மற்றும் 5 தோட்டாக்களை போலீசார் பறிமுதல் செய்த நிலையில் அயோத்தி ரவியை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் கோவை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பாக எஸ்டிபிஐ மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவை புலியகுளத்தில் உள்ள இந்து முன்னணி மாவட்ட நிர்வாகி அயோத்தி ரவி வீட்டில் இருந்து 2 துப்பாகிகளும், 5 தோட்டாக்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், ஆயுதத் தடை சட்டத்தின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. கடந்த மார்ச் 23ம் தேதி அயோத்தி ரவியின் மகளின் பிறந்தநாள் விருந்து நிகழ்வின் போது,
துப்பாக்கி வெடித்து ஒருவர் காயம்.?
துப்பாக்கியை கையாண்டபோது அதில் கலந்துகொண்ட தீபக் என்பவரின் காலில் துப்பாக்கி குண்டடிபட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். அந்த ரகசியத் தகவல் மூலமாகவே காவல்துறை விசாரணை நடத்தி, அயோத்தி ரவியின் வீட்டில் தேடுதல் வேட்டை மூலம் துப்பாக்கிகளையும், தோட்டாக்களையும் கண்டறிந்துள்ளதாகவும், மற்றொரு செய்தியில் வாகன சோதனையின் போது இடுப்பில் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை கண்டறிந்து மேற்கொண்ட விசாரணையில் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. 20 தோட்டாக்கள் கொண்ட துப்பாக்கிகளில் தற்போது 5 தோட்டாக்கள் மட்டுமே கண்டறியப்பட்டுள்ள நிலையில்,
துப்பாக்கி பறிமுதல்
எஞ்சிய 15 தோட்டாக்களின் பயன்பாடுகள் குறித்து காவல்துறை விசாரித்து வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. காவல்துறையின் இந்த துரித நடவடிக்கை பாராட்டத்தக்கது. இதற்கு முன்னரும் தமிழகத்தில் இந்துத்துவா அமைப்புகளைச் சேர்ந்தவர்களிடமிருந்து பெட்ரோல் குண்டுகள், நாட்டு வெடிகுண்டுகள், நாட்டு துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. அந்த வரிசையில் தற்போது கோவை புலியகுளத்தில் உள்ள காவல் நிலையம் அருகே இருக்கும் இந்து முன்னணி மாவட்ட நிர்வாகி அயோத்தி ரவி வீட்டில் சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த துப்பாக்கிகளை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.
சட்டம் ஒழுங்கு சீர்குலைக்க சதி
தமிழகத்தின் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க இதுபோன்ற ஆயுதங்களை இந்துத்துவா அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் பயன்படுத்தியும், பதுக்கியும் வருகின்றார்களா என்கிற சந்தேகம் எழுகிறது. ஆகவே, தமிழகத்தின் அமைதியை கெடுக்க நினைக்கும் இத்தகைய தீய சக்திகளின் பின்னணியில் உள்ள சதித்திட்டங்கள் மற்றும் ஆயுதங்களை கண்டறிந்து, அதன் பின்னால் உள்ள சதிகளை தமிழக அரசும், காவல்துறையும் முறியடிக்க வேண்டும் என எஸ்டிபிஐ மாநில தலைவர் நெல்லை முபாரக் வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படியுங்கள்