கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு காலங்களில் மத்திய-மாநில அரசுகள் மேற்கொண்ட திட்டமிடப்படாத நடவடிக்கைகளால் ஏழை-எளிய மக்கள், புலம்பெயர் தொழிலாளர்கள், வெளி மாநிலங்களில் சிக்கிய மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகினர். மற்றொரு புறம் சிறுபான்மை மக்களுக்கு எதிரான வெறுப்புணர்வு நடவடிக்கைகளும்,  தொழிலாளர் உரிமைகளை பறிக்கும் நடவடிக்கைகளும், சமூக செயற்பாட்டாளர்களை சிறையில் அடைக்கும் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைகளும், மாநில உரிமைகளை பறிக்கும் செயல் திட்டங்களும் அரங்கேறுவதாகவும் கொரோனா ஊரடங்கு நடவடிக்கையின் பெயரால் மத்திய-மாநில அரசுகள் ஊரடங்கு அரசியலை செய்வதாகவும் குற்றம்சாட்டிய எஸ்டிபிஐ கட்சி, அதைக் கண்டித்து தமிழகம் முழுவதும் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பில் இன்று அறவழி முழக்கப் போராட்டங்கள் நடைபெற்றன. 

தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் அவரவர் இருப்பிடங்களில் சமூக இடைவெளியுடன் நடைபெற்ற இந்த போராட்டத்தில், தமிழகம் முழுவதும் திரளானோர் கலந்துகொண்டனர். அப்போது எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் சமூக வலைதளங்கள் வாயிலாக மத்திய, மாநில அரசுகளின் ஊரடங்கு அரசியல் குறித்து உரையாற்றினார். 

அதில் பேசிய நெல்லை முபாரக், கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் பொருட்டு நாடு முழுவதும் 3 முறை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கில் மத்திய, மாநில அரசுகளின் திட்டமிடப்படாத நடவடிக்கைகள் காரணமாக,  கிட்டத்தட்ட 50 நாட்களுக்கும் மேலாக  மக்கள் சொல்ல முடியாத துயரங்களை சந்தித்து வருகின்றனர். பசி, பட்டினியால் மக்கள் பரிதவித்து வருகின்றனர். மக்கள் படும் துயரங்களை துடைக்க வேண்டிய அரசோ, கரவொலி எழுப்பவும், அகல் விளக்கு ஏற்றவுமான வித்தைகளையும்  செய்யச் சொல்லியும், வார்த்தை ஜால அறிவிப்புகளையும் தெரிவித்து மக்களை ஏமாற்றி வருகின்றது. மத்திய, மாநில அரசுகளின் செயல்பாடுகள் மக்களின் துயரைப் போக்கும் வகையில் அமையவில்லை.

அடுத்தடுத்த ஊரடங்கால் பசி பட்டினியால் பரிதவித்து நிற்கும் குடிமக்களை காக்க வேண்டிய மத்திய, மாநில அரசுகள் தங்களது கடமைகளை முற்றிலும் மறந்து, மதுபானக் கடைகளை திறந்து வைத்து மேலும் மக்களை பரிதவிப்பில் ஆழ்த்தி மக்களின் வாழ்வை முடக்கியுள்ளன.

அதுமட்டுமின்றி கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஒட்டுமொத்த உலகமே பெரும் போராட்டத்தை மேற்கொண்ட வேளையில், இந்தியாவிலும், நாம் வாழும் தமிழகத்திலும் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் மூலமாகவே கொரோனா வைரஸ் பரப்பட்டு வருகின்றது என்ற கருத்துருவாக்கமானது மத்திய, மாநில அரசுகளின் நடவடிக்கைகள் ஏற்படுத்தின. கொரோனா பரவல் தொடர்பாக தப்லீக் அமைப்பினருக்கு எதிராக அறிக்கைகள் வெளியிடுவது அவர்கள் மீது வழக்குகள் தொடர்வது, சிறையில் அடைப்பது என மத்திய மாநில அரசுகளின் கொரோனா நடவடிக்கைகள் முழுக்க முழுக்க மதவாதத்தை தூண்டும் வகையிலேயே அமைந்திருந்தன.மற்றொருபுறம் இந்த ஊரடங்கை பயன்படுத்தி மத்திய, மாநில அரசுகள் பல்வேறு மக்கள் விரோத நடவடிக்கைகளை அரங்கேற்றி வருகின்றன. கொரோனா ஊரடங்கில் மாநில  அரசுகளுக்கு தேவையான நிதியை ஒதுக்காமலும், மாநிலங்களுக்கு சேர வேண்டிய ஜி.எஸ்.டி. வரிகளை வழங்காமல் இழுத்தடித்து, மாநில அரசின் உரிமைகளையும் பறித்து வருகின்றது மத்திய பாஜக அரசு.

ஊரடங்கை பயன்படுத்தி காவிரி விவகாரத்தில் தமிழகத்தின் உரிமை பறிக்கப்பட்டுள்ளது. தன்னாட்சி அதிகாரம் கொண்ட காவிரி மேலாண்மை ஆணையம் மத்திய ஜல்சக்தி துறை அமைச்சகத்தின் கீழ் கொண்டு செல்லப்பட்டுள்ளது. மாநில மின்சார வாரிய ஒழுங்குமுறை ஆணையம் மத்திய அரசின் கீழ் கொண்டு செல்லும் வகையில் மின்சார திருத்த சட்ட மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது. இப்படியாக மாநில அரசுகளின் உரிமைகள் முடக்கப்பட்டுள்ளன. மாநிலத்தின் உரிமைகள் பறிக்கப்படுவதை குரலெழுப்பி தடுத்து நிறுத்த வேண்டிய மாநில அரசோ மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கு விளக்கம் அளித்து சமாதானம் செய்து கொள்கிறது. இந்த விவகாரத்தில் மாநில அரசு தனது சுயாட்சி உரிமையை காவுகொடுத்து வெறும் வேடிக்கை மட்டுமே பார்க்கும் அவலநிலையில் உள்ளது.

கொரோனாவை காரணங்காட்டி வீழ்ந்துவிட்ட இந்தியப் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் சாக்குப்போக்குச் சொல்லி,  பல்வேறு மாநிலங்களில் தொழிலாளர் சட்டங்கள் தளர்த்தப்பட்டுள்ளன. இது நாட்டின் வளர்ச்சிக்கு முதுகெலும்பாக விளங்கும் தொழிலாளர்களின் அடிப்படை உரிமையின் மீது நடத்தப்படும் கொடும் தாக்குதலாகும். இதுமட்டுமின்றி சில மாநிலங்கள் தொழிலாளர்கள் வேலை நேரத்தை 8 மணி நேரத்திலிருந்து 12 மணி நேரமாக உயர்த்தி உத்தரவிட்டுள்ளன.  ஊரடங்கு வாய்ப்பை பயன்படுத்தி இதுபோன்ற தொழிலாளர் விரோத நடவடிக்கைகள் கொண்டுவரப்பட்டுள்ளன.

சமூக இடைவெளிகளை கடைபிடிக்கும் வேளையில் சமூக செயல்பாட்டாளர்களை ஒடுக்குவதற்காக இந்த ஊரடங்கை மத்திய, மாநில அரசுகள் பயன்படுத்தி வருகின்றன. தொடர்ச்சியாக சமூக மற்றும் மனித உரிமை ஆர்வலர்களை கைது செய்கிறது. அதிலும் குறிப்பாக சி.ஏ.ஏ.வுக்கு எதிராக ஜனநாயக வழியில் போராட்டத்தில் முன்னணியில் நின்ற  மாணவர் தலைவர்களை கொடூரமான யு.ஏ.பி.ஏ. சட்டத்தின் கீழ் குறிவைக்கிறது.

தேசம் முழுவதும்  ஊரடங்கில் மக்கள் வீடுகளுக்குள் இருக்கும் நிலையில், நிர்கதியான நிலையினை பயன்படுத்தி அரசியல் எதிர்ப்பாளர்களை ஒடுக்குவதின் மூலமும் மற்றும் சிவில் உரிமைகளை நசுக்குவதின் மூலமும்  ஊரடங்கை தவறாக பயன்படுத்தி வருகின்றன.

தமிழகத்திலும் சிஏஏ எதிர்ப்பு போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்தவர்கள் மீது தேசத் துரோக வழக்குகள் பதிவதுமாக அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைகள் இந்த கொரோனா ஊரடங்கில் நடந்தேறி வருகின்றன. ஊரடங்கின் மூலம் நடைபெற்றுவரும் மத்திய, மாநில அரசுகளின் இத்தகைய அரசியலுக்கு எதிராக, அனைத்து தரப்பு மக்களும், ஜனநாயக சக்திகளும்  ஒன்றிணைந்து குரலெழுப்ப வேண்டும் என வலியுறுத்தினார்.