கொரோனாவை தடுக்க ஊரடங்கு மே17ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருக்கிறது. மார்ச் 24ம் தேதியிலிருந்து மே 3ம் தேதி வரை இரண்டு கட்ட ஊரடங்கு அமலில் இருந்த நிலையில், மூன்றாம் கட்டமாக மே 17ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கால் மக்கள் வருவாயை இழந்து தவித்துவருகின்றனர். இந்நிலையில், தனியார் பள்ளிகள் கட்டணத்தை கட்டாயப்படுத்தி வசூலிக்கக்கூடாது என்று அமைச்சர் செங்கோட்டையன் எச்சரித்துள்ளார்.

ஊரடங்கால் தடைபட்டுள்ள 10ம் வகுப்பு பொதுத்தேர்வு கால அட்டவணை ஜூன் மாத இறுதிக்கு பிறகு அறிவிக்கப்படும் என்று நேற்று தெளிவுபடுத்தியிருந்தார் அமைச்சர் செங்கோட்டையன். 

இந்நிலையில் இன்று ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம் அருகே செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், பள்ளிகளுக்கு வழங்க 80% பாடப்புத்தகங்கள் தயாராக உள்ளன. கொரோனா இருக்கும் வரை பள்ளிகள் திறக்கப்பட வாய்ப்பில்லை. கொரோனா கட்டுக்குள் வந்த பின்னர், குழு அமைக்கப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு அதன்பின்னர் தான் பள்ளிகள் திறக்கப்படும். மாணவர்களுக்கு தனிமனித இடைவெளி கற்றுத்தரப்படும். 

பள்ளிகள் தொடங்கியதும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு பாட புத்தகங்கள், காலணி போன்றவைகள் வழங்கப்படும். தனியார் பள்ளிகள் மாணவர்களை கட்டாயப்படுத்தி கட்டணத்தை வசூலிக்கக்கூடாது என்று எச்சரித்துள்ளார். ஏற்கனவே இதுகுறித்த எச்சரிக்கையை தனியார் பள்ளிகளுக்கு விடுத்த அமைச்சர் செங்கோட்டையன், அதே கருத்தை மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.