டெல்லியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கே அதிகாரம் உள்ளது எனவும் துணைநிலை ஆளுநருக்கு தனி அதிகாரம் கிடையாது எனவும் உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு அதிரடி தீர்ப்பளித்துள்ளது. 

யூனியன் பிரதேசங்களில் துணை நிலை ஆளுநருக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கும் இடையேயான மோதல் என்பது வாடிக்கையாகிவிட்டது. டெல்லி, புதுச்சேரி ஆகிய இரண்டு யூனியன் பிரதேசங்களிலும் இந்த சர்ச்சை நீடித்துவருகிறது. மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாஜக அரசு, பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் ஆளுநர்களின் வாயிலாக மறைமுக ஆட்சி செய்ய துடிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. குறிப்பாக டெல்லி மற்றும் புதுச்சேரி ஆகிய யூனியன் பிரதேசங்களில் இந்த பிரச்னை வெகுவாக உள்ளது. 

டெல்லியில் முதல்வர் கேஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்றுவருகிறது. ஆனால் டெல்லியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இருந்தும், துணைநிலை ஆளுநர் தான் பெரும்பாலான நியமனங்கள், முடிவுகளை எடுத்துவருகிறார் என்று ஆம் ஆத்மி கட்சி தொடர்ந்து குற்றம்சாட்டியது. இதனால் துணைநிலை ஆளுநர் மற்றும் முதல்வர் கேஜ்ரிவாலுக்கு இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. 

டெல்லியில் ஒரு பேனா வாங்க கூட தனக்கு அதிகாரம் கிடையாது என தனது அதிருப்தியை முதல்வர் கேஜ்ரிவால் ஏற்கனவே வெளிப்படுத்தியிருக்கிறார். அமைச்சரவை எடுக்கும் எந்த முடிவையும் டெல்லி துணை நிலை ஆளுநர் செயல்படுத்த விடுவதில்லை. ஜனநாயகத்தைக் கேலிக்கூத்தாக்குகிறார் என்று ஆம் ஆத்மி அரசு குற்றம் சாட்டியது. 

இந்த மோதல் நீடித்ததால், டெல்லியில் யாருக்கு அதிகாரம் இருக்கிறது? துணைநிலை ஆளுநருக்கா? தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கா? என டெல்லி உயர்நீதிமன்றத்தில் கடந்த 2016ம் ஆண்டு ஆம் ஆத்மி அரசு வழக்கு தொடர்ந்தது. 

அந்த வழக்கை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், அரசியலமைப்பு சட்டப்படி, டெல்லியில் துணைநிலை ஆளுநர் தான் நிர்வாகத்தின் தலைவர் என்றும் அவருக்குத்தான் அதிகாரம் இருக்கிறது என்றும் தீர்ப்பளித்தது. 

டெல்லி உயர்நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து ஆம் ஆத்மி அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையில் நீதிபதிகள் கான்வில்கர், சிக்ரி, சந்திரசூட், அசோக் பூஷன் ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரித்தது. 

அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில், இந்த வழக்கில் இன்று தீர்ப்பளிக்கப்பட்டது. அதில், அரசியலைப்பு சட்டத்தின்படி துணைநிலை ஆளுநருக்கு தனி அதிகாரம் கிடையாது. அமைச்சரவையின் வழிகாட்டுதலின்படியே துணைநிலை ஆளுநர் செயல்பட வேண்டும். அமைச்சரவை எடுக்கும் முடிவுகளை துணை நிலை ஆளுநரிடம் தெரிவித்தால் போதுமே தவிர அமைச்சரவை எடுக்கும் முடிவுகளுக்கு துணைநிலை ஆளுநரிடம் ஒப்புதல் பெற வேண்டிய அவசியமில்லை. கூட்டாட்சி தத்துவத்தின் அடிப்படையில் மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டும். அரசுக்கும் ஆளுநருக்கும் கூட்டு பொறுப்பு உள்ளது. துணைநிலை ஆளுநருக்கு தனி அதிகாரம் கிடையாது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கே அதிகாரம் உள்ளது என அதிரடியாக தீர்ப்பளிக்கப்பட்டது.